உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 38

வீடு திரும்புதல்விமான நிலையத்தில் யாரோ நடிகரோ கிரிக்கெட் வீரரோ வருகிறார் போலிருக்கிறது. மாலையும் கையுமாக ஆயிரம் பேர் நின்றனர்.'யாருக்காக?' ஒருவரிடம் கேட்டேன்.“பிரபல ஆன்மிக எழுத்தாளர் பாலா அமெரிக்க பயணத்த முடிச்சிட்டு வீடு திரும்பறாரு. நாங்க அவருடைய ரசிகர்கள்”பாலா எனக்கு ஓரளவு பழக்கமானவர்தான். ஆன்மிக எழுத்தாளருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைப்பதில் மகிழ்ச்சிதான். இருந்தாலும் என் மனதில் பொறாமை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. அது என்னை அமுக்கி விடக்கூடாது என தாயை வேண்டிக் கொண்டேன்.பாலா ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் இருந்தார். சில வருடங்களுக்கு முன் ஒரு ஆன்மிக இயக்கத்தோடு இணைந்தார். அதில் வந்த வாழ்வுதான் இது என ஊகித்தேன். விமான நிலையத்தின் உள்ளே ஒருவர் குறுகுறு என பார்த்தார். அவர் காவி உடை அணிந்திருந்தார். பாதுகாப்பு சோதனை முடிந்தவுடன் என்னிடம் ஓடி வந்தார். “நான் அனந்தன். சந்நியாசப் பெயர் அனந்தானந்தா. ஆன்மிகத் தொடர் எழுதுபவர்தானே நீங்கள்?” என்னைப் பற்றி சொன்னார்.“ஒரு முக்கிய விஷயம் பேசணும்” தனியிடத்தில் அமர்ந்தோம்.“வெளிய நடக்கற கூத்தப் பாத்தீங்கள்ல?”“ஒரு ஆன்மிக எழுத்தாளருக்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்குதுன்னா நம்ம நாடு சரியான திசையிலதான் போயிக்கிட்டிருக்குன்னு தோணுது”“பாத்தீங்களா? உங்கள மாதிரி ஒரு எழுத்தாளரே நடக்கறத நிஜம்னு நெனச்சிட்டீங்களே? அதுதான் பணம், அதிகார பலத்தோட மகிமை”“என்ன சொல்றீங்க?”“வெளிய மாலையோட நிக்கறது தானாச் சேர்ந்த கூட்டம் இல்ல. காசு கொடுத்து சேத்த கூட்டம். இந்த வரவேற்புக்கு மட்டும் எத்தனை லட்சம் செலவு செஞ்சிருப்போம்?”“அப்படி என்றால் நீங்கள்''“எழுத்தாளர் பாலா இணைந்திருக்கும் ஆன்மிக இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் நானும் ஒருவன்”இப்போது அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது.“என்ன செய்யறது, சார்? ஆன்மிகம் மக்கள்கிட்ட போய்ச் சேரணும்னா ஷோ பண்ண வேண்டியதிருக்கே! சினிமாக்காரங்களும் அரசியல் தலைவர்களும் பணத்தச் செலவழிச்சிக் கூட்டம் சேக்கற மாதிரி நாங்களும் சேக்க ஆரம்பிச்சிட்டோம். ஆனா பாலாவுக்கு அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். அந்தாளு சுமாராத்தான் எழுதறாரு. ஆனா எங்க இயக்கம் கொடுக்கற ஆதரவுல புத்தகம் லட்ச கணக்குல விக்குது. கோடி கோடியா சம்பாதிச்சிட்டாரு. “அதுபோக எங்க இயக்கத்தோட செலவுல உலகம் பூராச் சுத்தி வராரு. இப்ப அமெரிக்கா, கனடா போயிட்டு அங்க நெறையக் கூட்டங்கள்ல பேசிட்டு வந்திருக்காரு”இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்?“கடந்த ஒரு வருடமாக பாலாவின் போக்கு மாறிக்கொண்டு வருகிறது. பணம் ஒன்றுதான் வாழ்க்கை என தாழ்ந்துவிட்டார். இப்போது அவர் எழுத்தில் அகங்காரம்தான் இருக்கிறது. பாலாவைப் போன்ற ஒருவரால் எங்கள் இயக்கத்திற்கு நஷ்டம் உண்டாகலாம் என அஞ்சுகிறோம். பாலாவின் இடத்தை நீங்கள்தான் நிரப்ப வேண்டும்”“நானா?”“நீங்களேதான். பச்சைப்புடவைக்காரியைப் பற்றி எழுதுங்கள். கூடவே எங்கள் இயக்கத்தின் தலைவரைப் பற்றியும் எழுத வேண்டும். பணம். சுகபோக வாழ்க்கை. வெளிநாடுகளில் பேசலாம். நாடு திரும்பும் போது பிரம்மாண்ட வரவேற்பும் கிடைக்கும்''குழப்பமாக இருந்தது.“எங்கள் இயக்கத்தில் நீங்கள் சேர்ந்தவுடன் புத்தகங்கள் லட்சக் கணக்கில் விற்கும். கோடிக் கணக்கில் ராயல்டி கிடைக்கும். உங்களுக்கு என்ன வயதாகிறது என எனக்குத் தெரியும். இன்னும் எத்தனை வருடங்கள் உங்களால் எழுத முடியும்? எங்கள் இயக்கத்தில் சேர்ந்தால் உங்களுக்காக வேலை செய்ய ஒரு பட்டாளமே இருக்கும். பத்தே வருடங்களில் நுாறு புத்தகம் எழுதிவிடலாம். அதையெல்லாம் விட முக்கியம் பச்சைப்புடவைக்காரியின் புகழை உலகம் முழுவதும் பரப்பலாம். கூடவே எங்கள் இயக்கமும் புகழ் பெறும்” நான் யோசித்தேன்.“என்னுடைய தொடர்பு விபரம் இதில் இருக்கிறது. நல்ல முடிவாகச் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.”ஒரு மிடுக்கான பெண் போலீஸ் என்னை நோக்கி வந்தாள்.“உங்கள் கைப்பையைச் சோதனை செய்யவேண்டும். என்னுடன் வருகிறீர்களா?”“அதுதான் அரை மணி நேரம் காக்கவைத்து சோதனை செய்தார்களே? அப்புறம் ஏன்?”“உங்கள் கைப்பையில் ஆயுதம் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. சத்தம் போடாமல் வந்தால் நல்லது”என் கைப்பையைத் துாக்கிக்கொண்டு நடந்தாள். பின்னால் ஓடினேன். சற்றுத் தள்ளியிருந்த அறைக்குள் நுழைந்ததும் அமர்ந்தாள். என்னையும் அமரச் சொன்னாள்.“பையைச் சோதனை செய்வதாக...”“சோதனையா? உன் கைப்பைக்குள் என்ன இருக்கிறது என எனக்குத் தெரியும். உன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் என்னவென்றும் எனக்குத் தெரியும். பாலாவைப் போல் உன்னையும் வரவேற்க கூட்டம் சேர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது”“இல்லை, தாயே, அவர்கள் உங்கள் புகழைப் பரப்புவதாகச் சொன்னார்கள்''“நான் என்ன அரசியல் தலைவியா இல்லை சினிமா நடிகையா? இல்லை நீதான் என் கொள்கை பரப்புச் செயலாளரா?”“ஒருவேளை அவர்கள் தலைவரைப் பற்றியும் எழுத வேண்டுமே என்பதால் இது வேண்டாம் என்கிறீர்களா?”“அந்த இயக்கத்தின் தலைவன் நல்லவன். அன்பின் வழி நடந்தவன். அது எனக்குக் கவலையில்லை. அவர்கள் உன் எழுத்தை செல்வந்தர்கள் வீட்டில் இருக்கும் குழாய் நீராகப் பயன்படுத்துவார்கள். உன் எழுத்தை ஆற்று வெள்ளமாக ஓட வைத்திருக்கிறேன். தாகம் இருப்பவர்கள் எல்லாம் குடிக்குமாறு செய்திருக்கிறேன். உன் புத்தகங்களை ஏழைகள் தான் வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் அதைப் பலமுறை படித்துவிடுகிறார்கள். அவர்கள் இயக்கத்தில் சேர்ந்தால் உன் புத்தகங்களை லட்சம் பேர் வாங்குவார்கள். பத்துபேர்கூடப் படிக்க மாட்டார்கள்”காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தது.“பாலாவிற்குக் கிடைத்த வரவேற்பு உனக்குக் கிடைக்க வேண்டும் என மருகுகிறாயா? பாலா வீடு திரும்பிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறான். நீ இன்னும் வீடு திரும்பவில்லை. நீ வீட்டுக்கு வரும்போது, மேலே இருக்கும் உன் தாய்வீட்டுக்குத் திரும்பும்போது உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் வரவேற்பை உன்னால் யோசித்துப் பார்க்கவே முடியாது. இதெல்லாம் ஒன்றுமேயில்லை”தாயே என்று கதறியபடி அன்னையின் கால்களில் விழுந்தேன். நிமிர்ந்தபோது அவள் அங்கே இல்லை. -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com