பச்சைப்புடவைக்காரி - 49
காத்தருளும் தெய்வம்என்முன் உட்கார்ந்திருந்த நாற்பது வயதுக்காரரின் முகத்தில் இருந்த சோகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. “நான் சிவா. தனியார் கம்பெனில வேலை பாக்கறேன். ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல, சார். பத்து வருஷமா நரகத்துல இருக்கேன். என் பொண்டாட்டி மாதிரி ஒரு ராட்சசிய பார்க்க முடியாது சார்”சிவாவின் தந்தை இறந்துவிட்டார். தாயுடன் வாழ்ந்து வந்த சிவாவிற்கு பத்து ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி விசாலி; வழக்கறிஞர், அழகி, புத்திசாலி, தொழிலில் வித்தகி. இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு நாள்தான் நீடித்தது. விசாலி சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாள். பத்து நாள் கழித்து அவளிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. விவாகரத்து வேண்டும். வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை, சித்ரவதை செய்தல், ஆண்மையின்மை என ஆயிரம் காரணங்களை நோட்டீசில் சொல்லியிருந்தாள். சிவாவும் அவனது தாயும் அதிர்ந்தனர். ஒரு வழக்கறிஞரிடம் போனார்கள். காரசாரமாக பதில் நோட்டீஸ் அனுப்பினர். விவாகரத்து வழக்கு தொடர்ந்தாள். சிவா, அவன் தாய் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். வழக்கு ஜவ்வாக இழுத்தது. மனுவிற்கு மேல் மனுவாகப் போட்டு சிவாவையும் அவன் தாயையும் ஒருவழி பண்ணி விட்டாள்.விசாலியின் முகத்தில் பணத்தை விட்டெறிந்து விவாகரத்தும் கொடுக்க முடிவு செய்தான் சிவா. அவர்களின் பரம்பரை வீட்டைத் தன் பெயருக்கு எழுதச் சொன்னாள். நான்கு நாள் மட்டுமே வாழ்ந்தவளுக்கு மூன்று கோடி மதிப்புள்ள வீடா எனக் கொதித்தான் சிவா. வழக்கு பத்து ஆண்டாக இழுத்தது. விசாலிக்கு அந்த வழக்கு பொழுது போக்காக இருந்தது. சிவாவிற்கோ மரண வேதனை. “எப்படியும் அவள் பக்கம் தீர்ப்பாகும் எனச் சொல்றாங்க சார். பரம்பரை வீட்ட அவ எடுத்துக்கிட்டா நானும், அம்மாவும் தற்கொலை பண்ண வேண்டியதுதான்”“மேல் முறையீடு செய்யலாமே சிவா?”“அதுக்கு நாளாகுமாம். அதுக்குள்ள அந்தக் கிராதகி...''உடைந்து போய் அழுதான் சிவா. பச்சைப்புடவைக்காரி படத்தை பார்த்தேன். என் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. வெளியே போனேன். கம்பீரமாக நின்றிருந்தவளை அடையாளம் கண்டு அவளின் கால்களில் விழுந்தேன்.“உன் மனதில் தோன்றுவதை அப்படியே சொல்லி விடு. அவன் விதிப்படி நடக்கட்டும்”பச்சைப்புடவைக்காரி மறைந்தாள். “சிவா, உங்கப்பா அம்மன் கோயில் பூஜாரியா இருந்தாரா?”“ஆமா, சார்.”“உங்களையும் பூஜாரியா இருக்கச் சொன்னாரா?”“அது எப்படி சார் முடியும்? நான் வாழ்க்கையை அனுபவிக்க நெனச்சது தப்பா?”“தப்பில்ல. ஆனா அத உங்கப்பாகிட்ட கனிவாகச் சொல்லியிருக்கலாம். அன்னிக்கு அவர எப்படியெல்லாம் திட்டினீங்க? அப்பாவிடம் பேசற பேச்சா அது?”“அதுக்காக இப்போ பூஜாரியாக முடியுமா?”“முடியாது. இந்தச் சூழ்நிலையில உங்களால அக்கறையா வேலை பார்க்கவும் முடியாது. உங்க முதலாளிகிட்ட உண்மைய ஒத்துக்கங்க. ஆறு மாசம் சம்பளம் இல்லாத லீவ வாங்கி ஆறு மாசமும் கோயில்ல வேலை பாருங்க”“கேஸ் என்னாகும்?''“அதப் பச்சைப்புடவைக்காரி பாத்துக்குவா”“ஒருவேளை அந்த கிராதகி கேஸ்ல ஜெயிச்சிட்டா?”“என்கிட்ட வாங்க. வலியில்லாம தற்கொலை செஞ்சிக்கறது எப்படின்னு சொல்லி தர்றேன்”“சார்...''“நம்பி செய்யுங்க. நல்லதே நடக்கும்”சிவா போய்விட்டான்.வெளியே வரும் போது கடைசிப்படியில் அமர்ந்திருந்த தாயை வணங்கினேன்.“என்ன நடக்கப்போகிறது என்று பார்”சிவா அவன் முதலாளியின் அறையில் இருந்தான். தன் பிரச்னையைச் சொன்னான். “இந்த நிலையில என்னால ஒழுங்கா வேலை பார்க்க முடியாது சார். வேலை பார்க்காம சம்பளம் வாங்கறது தப்பு. ஆறு மாசம் சம்பளம் இல்லாத லீவு கொடுங்க”முதலாளி ஒத்துக்கொண்டார்.மறுநாளே சிவா, கோயிலில் பூஜாரியின் உதவியாளாகச் சேர்ந்தான். அங்கு இரண்டு பேருக்குப் போதுமான உணவு மட்டும் கொடுத்தார்கள். நாட்கள் நகர்ந்தன.அன்று கோயிலுக்கு சிவாவின் முதலாளி வந்தார். ஓடிப்போய் அவரை வரவேற்றான். “கேஸ் என்னாச்சு?”“பச்சைப்புடவைக்காரிக்கு தான் தெரியும். வீடு இல்லேன்னா என்ன என் கோயில்தான் உன் வீடுன்னு சொல்லிட்டா சார்”“தீர்ப்பு எப்போ வரும்?”“பத்து நாளில் வரும். எங்கப்பா இதே கோயில்லதான் அர்ச்சகரா இருந்தாரு. அந்த வேலையை எனக்கு தர்றேன்னு சொல்றாங்க. கோயிலுக்குப் பக்கத்துல சின்ன குடிசை வாடகைக்குக் கிடைக்காதா என்ன?”“அதுக்காக வேலைய விட்றாதப்பா. நீ காலையில ஆபீசுக்கு வா. சாயங்காலம் வரை வேலை பாரு. அப்புறம் கோயிலுக்கு வந்திரு. பழைய சம்பளத்துல முக்கால்வாசி தர்றேன்”சிவா சம்மதித்தான்.“என் பேத்தி பிறந்த நாள் பத்து நாள் கழிச்சி வருது. அர்ச்சனை, அபிஷேகம் செய்யணும்”உரிய ஏற்பாட்டை சிவா செய்து தந்தான். முதலாளி சென்றவுடன் அம்மனை உற்றுப் பார்த்தான். 'நானும் என் தாயும் தெருவில் நிற்க வேண்டும் என நீ நினைத்தால் அது நடக்கட்டும். வீட்டில் இருந்தாலும், தெருவில் இருந்தாலும் உன் காலடியில் தான் இருக்கிறோம் என்ற உண்மையை நாங்கள் மறக்கக் கூடாது'அன்று தன் பேத்தியின் பிறந்த நாளுக்காக வழிபாடு செய்ய சிவாவின் முதலாளி கோயிலுக்கு வந்தார். சிவா கூத்தாடினான்.“பாருங்க சார் என் அன்பு தெய்வத்தை! செய்யறத எல்லாம் செஞ்சிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி உக்காந்திருக்கற அவளோட அன்பை பாருங்க சார்! யாருக்கு சார் இவ்வளவு அன்பு இருக்கும்? நான் சொல்றேன் சார். ஆயிரம் பிறவி எடுத்து அது ஒவ்வொண்ணுலயும் பச்சைப்புடவைக்காரியையே நினைச்சிக்கிட்டு அவ காலடியில விழுந்து செத்தாக்கூட என் நன்றிக்கடன் கொஞ்சம் கூடக் குறையாது”சிவாவிற்கு புத்தி பிசகி விட்டது என தீர்மானித்தார் முதலாளி.“என்னப்பா ஆச்சு?”“நாலுநாள்ல தீர்ப்பு வரப் போகுதுங்கற நிலைமை. நாள் பூரா சாப்பிடாம அம்மனை பார்த்து அழுதேன். அன்னிக்குக் கோர்ட்டில் இருந்து வீட்டுக்குப் போன அந்த கிராதகி ஒரு மாதிரியா இருக்குன்னு சீக்கிரமே படுத்துட்டா. காலையில எழுந்திரிக்கவேயில்லை. ஹார்ட் அட்டாக். அதுக்கப்பறம் அவ கேஸ்ல செஞ்ச தில்லு முல்லு எல்லாம் வெளியே வந்திருச்சி. அவ இறந்ததால் வழக்கு தள்ளுபடி ஆயிடுச்சு''முதலாளிக்கு ஒரே சந்தோஷம்.“அடுத்த மாசம் நான் வேலைக்கு வர்றேன் சார். அஞ்சரை மணிவரைக்கும் ஆபீஸ்ல வேலை. அதுக்கப்பறம் நடை சாத்தற வரைக்கும் கோயில்ல வேலை. பூஜைக்கு நேரமாச்சு. உள்ள போகலாம்”பச்சைப்புடவைக்காரிக்குத் தீபாராதனை நடந்த போது சிவாவிடமிருந்து பெரிய விம்மல்கள் வெடித்தன. அவனது முதலாளி அழுது கொண்டிருந்தார். நானும்தான்.“உனக்கு என்னப்பா வேண்டும்?”“உங்களிடம் வரம் கேட்கும் மனம் இருக்கவே கூடாது. உங்களையே வரமாகக் கேட்கும் மனம் வேண்டும்”“ஆசையைப் பாரேன்” எனச் சொல்லிவிட்டு மறைந்தாள் அன்பரசி. -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com