உள்ளூர் செய்திகள்

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 11

சென்னிமலையுகன் அலுவலகம் விட்டு வந்ததும் அவனுக்கு காபி போட்டு வந்து கொடுத்தார் பாட்டி. நாற்காலியில் அமர்ந்தபடி ரசித்து குடித்துக் கொண்டிருந்தான் யுகன். “யுகா... போன வாரம் நான் போட்ட புதிருக்கு இன்னும் விடை சொல்லவே இல்லையே? ஒரு வாரம் ஓடிடுச்சு”“இரு பாட்டி, காபி சூடு ஆறிடும். குடிச்சிட்டு பதில் சொல்றேன்” என்றான். சிறிது நேரத்தில் டம்ளரை கீழே வைத்த யுகன், ''பட்டணபுரி, பட்டணக்காடு சரியா?” என்றான்.“இல்ல யுகா''“சரி இன்னொரு குறிப்பு சொல்லு கண்டுபிடிச்சிடுறேன்”''நாம தினம் கேட்கிற கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய கோயில் தான் அது. இப்ப சொல்லு பார்ப்போம்'' என்றார்.“ கந்த சஷ்டி கவசம் தினம் கேட்கிறோம் தான். ஆனால் இந்த தகவல் தெரியாதே. சரி இன்னொரு குறிப்பு சொல்லேன்”“திருப்பூர் குமரன் பிறந்த ஊரும் இது தான்”“நாலாம் வகுப்பில படிச்சதெல்லாம் இப்ப கேக்குற''“ம்... அப்படியா! சரி இதுதான் கடைசி குறிப்பு. கண்டு பிடிக்கிறியான்னு பார்ப்போம். காளைமாடு கோயில் அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தத்தை எடுத்துட்டு 1320 படிகளை தினம் ஏறி சுவாமி கருவறைக்கு எடுத்துட்டு போகுது. அது எந்த கோயில்ன்னு சொல்லு பார்ப்போம்”“குறிப்பு கொடுத்தும் என்னால கண்டுபிடிக்க முடியலை. நீயே சொல்லிடு.”''சென்னிமலை. நம்ம ஊரான சென்னையின் முதல் இரண்டு எழுத்து இந்த ஊரின் பெயரிலும் இருக்கு பாரு”“ஆமாம் பாட்டி, யோசிக்காம விட்டுட்டேனே. ஆமா சென்னிமலை எங்க இருக்கு?”“ஈரோட்டில் இருந்து 27 கி.மீ., தொலைவில் இருக்கு. 3000 ஆண்டுகள் பழமையான கோயில்”“சென்னிமலையில் அப்படி என்ன சிறப்பு?”“ஒன்னா ரெண்டா எத்தனையோ சிறப்பு இருக்கு. கோயில் மேல எப்பவும் காகம் பறக்காது. இங்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிக்காது”“அப்படியா”“ஆமா. இந்த மலை உருவானதும் ஒரு அதிசயம் தான். அனந்தன் என்ற நாகத்திற்கும் வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் நடந்த சண்டையில் மேருமலை உடைந்து பல இடங்களில் விழுந்தன. இதில் மலையின் சிகரப் பகுதி பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இதற்கு சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்ற பெயர்களும் உண்டு. சென்னி மலை முருகன் (ஞானதண்டாயுதபாணி) வலது கையில் தண்டாயுதம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி அருள்புரிகிறார். இந்த சிலைக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு”“எண்கண், எட்டுக்குடி போல இந்த சிலைக்கும் ஒரு சுவாரஸ்யம் இருக்கா!” என்றான் யுகன் கைகளை உயர்த்தியபடி.“நொய்யல் ஆற்றின் கரையிலுள்ள கொடுமணல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாரிடம் காராம்பசு ஒன்று இருந்தது. தினமும் ஓரிடத்தில் பாலைச் சொரிந்து வந்தது. ஆச்சரியமடைந்த பண்ணையார் அந்த இடத்தை தோண்டிய போது முருகன் சிலை இருந்தது. அச்சிலையை இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் இருந்தது. ஆனால், இடுப்புக்கு கீழ் கரடு முரடாக இருந்தது. சிற்பி அதை வடிவமைக்க உளியால் அடித்த போது ரத்தம் பீறிட்டது. பின்னர் அதே நிலையில் சிலையை சென்னி மலையில் பிரதிஷ்டை செய்தனர். மூலவரான சென்னிமலை முருகன் நவக்கிரகங்களில் செவ்வாயின் அம்சம் கொண்டவர். செவ்வாய் பரிகார தலமான இங்கு தினமும் ஆறு கால பூஜையின் போது மட்டும் அபிஷேகம் நடக்கும். மற்ற நேரத்தில் உற்ஸவருக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். வள்ளி தெய்வானை இருவரும் ஒரே கல்லில் தனி சன்னதியில் காட்சி தருகின்றனர்”“ஆமா... காளை மாடு ஒன்று படி ஏறுதுன்னு சொன்னியே”“அவசரப்படாமல் கேளு''“தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்ய இரண்டு காளைகள் மூலம் அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்படுது. 1320 படிகள். அத்தனை படிகளையும் காளைமாடு தினம் ஏறி வருதுன்னா பாரேன். அதிகாலையில போனால் நாம் காணலாம். அமாவாசை, சஷ்டி, கார்த்திகையன்று நிறைய பக்தர்கள் வருகிறார்கள். இங்கு வந்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சென்னி மலையை ஆதி பழநி என்றும் சொல்லுவாங்க. பழநிக்கு செல்ல முடியாதவர்கள் சென்னி மலையை தரிசனம் பண்றாங்க. மற்றொரு பெரும் சிறப்ப கேளு.”“சொல்லு பாட்டி” என காதுகளை கூர்மையாக்கினான் யுவன்.“முருகன் கோயில்களில் ஒலிக்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் அரங்கேறிய திருத்தலம் இதுதான். காங்கேயம் அருகே உள்ள மடவிலாக்கத்தை சேர்ந்தவர் பாலன் தேவராய சுவாமிகள். இவர் மைசூர் தேவராஜ உடையாரிடம் பணிபுரிந்தார். முருக பக்தரான இவர் கந்த சஷ்டி கவசத்தை எழுதி முடிக்க, கனவில் தோன்றிய முருகன் சென்னிமலை கோயிலில் அரங்கேற்றச் சொன்னார். அதன்படியே சென்னிமலையிலேயே அரங்கேற்றம் செய்தார். அதுமட்டுமில்ல 18 சித்தர்களில் ஒருவரான பின்னாக்கு சித்தர் சன்னதி இங்கு உள்ளது”“பின்னாக்கா புண்ணாக்கா பாட்டி?”“அமுதனே தேவலாம் போல. நீ தான் சின்ன குழந்தையாட்டம் புரிஞ்சிக்கிற. பின்னாக்கு சித்தர் இங்குதான் சமாதி அடைந்தார். தன்னை தேடிவந்த பக்தர்களுக்கு தன் நாக்கை பின்னுக்கு மடித்து அருள்வாக்கு கூறியதால் இப்பெயர் பெற்றார். சரவணமுனிவர் என்பவர் சென்னிமலை வரலாற்றை எழுதினார். இந்த முனிவரின் சமாதியும் மலை மீதுள்ளது. நாம் போகும் போது பார்க்கணும்.”“நிச்சயமா பாட்டி. அப்புறம் நம்ம அருணகிரிநாதர் இங்கு பாடி இருக்காரா பாட்டி?”“இங்கு ஒரு திருப்புகழ் பாடல் கிடைச்சிருக்கு”“சக சிரகிரிப்... பதிவேளேசரவணபவப்... பெருமாளே'' ன்னு அந்த பாடல் முடியும். கந்த சஷ்டி கவசத்தில் 'சிரகிரி வேலவ சீக்கிரம் வருக' எனும் வரி இந்த சென்னிமலையை குறிப்பது தான். அதுமட்டுமில்ல உடல்நலம் பெற விரும்புபவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் பின்னாக்கு சித்தரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்”“ ஓ... ரொம்ப நல்லது” என்றான் யுகன்.“சென்னிமலை படிகள் அகலமாக இருப்பதால் ஏறுவதில் சிரமம் இருக்காது. சாலை வசதியும் இருக்கு. கடவுளை எப்பவுமே கடமைக்கு தரிசிக்காம பக்தியுடன் தரிசிப்பது நல்லது. சரி சரி, நேரமாயிடுச்சு... அமுதனை போய் டியூஷனில் இருந்து கூப்பிட்டு வா”“சரி... அடுத்து எந்த முருகன் கோயில் பாட்டி”“சென்னிமலையில் இருந்து நேரா மருதமலைக்கு போவோம்” என சொல்லிவிட்டு பாட்டி சிரித்தார். குழந்தையை அழைத்து வர புறப்பட்டான் யுகன்.-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்94430 06882