சொல்லச் சொல்ல இனிக்குதடா - 22
மயிலம்பேரன் யுகனின் மனைவியான தேவந்தி காலையில் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள். பேசி முடித்ததும் தன்னிடம் விஷயத்தை சொல்வாள் என பாட்டி எதிர்பார்த்தார். ஆனால் அவள் வாயே திறக்கவில்லை. பூனையைப் போல அங்கும் இங்குமாக யுகன் அலைந்து கொண்டிருந்தான். “என்ன யுகா, காலையில் இருந்து வீடே ஒரே அலப்பறையா இருக்கே?”“தேவந்தியோட மாமா வீட்டிலருந்து போன் வந்ததில் இருந்து அவ இப்படித்தான் இருக்கா.“ஏன் என்கிட்ட சொல்ல கூடாதா” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பாட்டி.“உங்களையும் ஏன் கஷ்டப்படுத்தணும்னு, அதனால தான் சொல்லல”''இன்பமும் துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. யாருக்கு என்னப்பா பிரச்னை?”“தேவந்தியோட மாமாவுக்கு அப்பப்ப உடம்பு சரியில்லாம போயிடும். ஹாஸ்பிடல் ஒரு வாரமாவது தங்கிட்டு வருவார். அவங்களும் இதுக்கு பழகிப் போயிட்டாங்க. இந்த முறை ரொம்ப சீரியஸாகி ஐசியூவுல இருக்கார். பேசினப்ப இவளோட அத்தை மனசு தாங்காம அழுதுட்டாங்க. அதான் காலையில பிரச்னையா போச்சு” எனக் காரணத்தை சொன்னான் யுகன். ''பிறப்பும் இறப்பும் நம்ம கையில இல்ல. ஆனா இருக்குற வரைக்கும் ஆரோக்கியமா வாழறதுக்கு வழி தேடணும். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் இதத்தான் சொல்லுது. 'இருமல், வலிப்பு நோய், வாதம், நீரிழிவு, தலைவலி, ரத்த சோகை, நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி போன்ற நோய்கள் தாக்காதபடி உன் திருவடியைத் தந்தருள்க என்னும் இந்த பாடலை பாடினால் நல்லபலன் கிடைக்கும்”“சரி பாட்டி, இந்த பாடல் எந்த ஊர் முருகன் மீது பாடியது?”“திருத்தணி மீது''இருமலு ரோக முயலகன் வாதமெரிகுண நாசி... விடமேநீரிழிவுலி டாத தலைவலி சோகையெழுகள மாலை...யிவையோடேபெருவயி றீளை யெறிகுலை சூலைபெருவலி வேறு... முளநோய்கள்பிறவிகள் தோறு மெனை நலி யாதபடியுன தாள்கள்... அருள்வாயே“சரி பாட்டி, இதைப் பாடினால் ஆரோக்கியம் கிடைப்பது உறுதி தானே?”“நிச்சயமா... நம் எண்ணம் ஒன்றை நோக்கி போகும் போது நாம் செய்யக் கூடிய செயல்களிலும் அதன் தாக்கம் வெளிப்படும். ஆரோக்கியமாக வாழணும் என்ற உந்துதல் ஏற்படும். நடைப்பயிற்சி, யோகப்பயிற்சியில் ஈடுபடும் மன திடம் அதிகரிக்கும். இதுதான் நம் எண்ணம், செயலுக்கும் உள்ள தொடர்பு”யுகன் தலையாட்டியபடி கேட்டான். “ பாட்டி... நீ என்னவோ எனக்கே சொல்ற மாதிரி இருக்கு. இனி நானும் தினமும் இந்த பாட்டை பாடுறது நல்லது. என்ன ஒன்னு, ஓடுற ஓட்டத்துல எல்லாம் மறந்து போகுது”“மனம் இருந்தால் வழிபிறக்கும். சூரபத்மன், பாலசித்தர் இருவரும் விடாக்கண்டர்களாக இருந்து முருகன் அருள் பெற்றது போல நீயும் ஆரோக்கியத்துக்காக விடாக்கண்டனா இருக்கப் பாரு”“சூரபத்மனும், பாலசித்தரும் எந்த ஊரில அருள் பெற்றாங்க?”“இந்த மயிலம் கோயில்ல தான். இங்கு குன்றே மயில் தோகை விரித்தது போல இருக்கும். முருகனை நோக்கியபடி மயில் வடக்கு புறமாக திரும்பி இருக்கும். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் மூண்ட கதை தெரியும் இல்லையா? அதன் முடிவில் சூரபத்மனை முருகன் ஆட்கொண்டார். அதன் பிறகு இங்கு மயில் வடிவ மலையாக மாறி வடக்கு நோக்கி தவம் செய்து, 'என்னை வாகனமாக ஏற்க வேண்டும்' என வரம் பெற்றான்”''இது முருகன் மட்டும் உள்ள கோயில் தானே?”“வேல், சேவல் கொடி தாங்கியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார் முருகன். மயிலம் மலையில் நொச்சி மரங்கள் ஏராளம். தினமும் காலை பூஜையின் போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவர், உற்ஸவர்களுக்கு அணிவிக்கிறார்கள் '' “பாலசித்தரைப் பற்றி இன்னும் நீ சொல்லலியே... பாட்டி?”“இதோ சொல்றேன். மயில் வாகனமா மாறிய சூரபத்மன் இருக்கானே, அவன் முருகனிடத்துல ஒரு கோரிக்கை வைத்தான். நான் தவம் செய்த இந்த இடத்தில் தங்கி அருள் புரிய வேண்டும் என்றான். 'எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்' எனச் சொல்லி மறைந்தார்”“யார் இந்த பாலசித்தர்?”'' கைலாயத்தில் மேற்கு வாசலின் தலைவராக இருந்தவர் சங்குகன்னர். இவரை பூலோகத்தில் சைவ நெறிகளை வளர்க்குமாறு சிவன் ஆணையிட்டார். அதன்படி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொம்மையார் பாளையத்தில் பாலசித்தராக அவதரித்தார். நாரதரின் வழிகாட்டுதலால் மயிலத்தில் தங்கி கள்ளிப்பாலை உண்டு தவத்தில் ஈடுபட்டார். ஆனால் முருகன் கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து வள்ளி, தெய்வானையின் உதவியை நாடினார் சித்தர். இரக்கப்பட்ட இருவரும் சித்தரின் ஆசிரமத்திற்கு வந்து தங்கினர். இதன்பின் முருகனும் எத்தனை நாட்கள் மனைவிகளை பிரிந்து இருப்பார்?”“ஆமா, என்னால கூட தேவந்தியை விட்டு ஒரு வாரம் கூட பிரிய முடியாது”“ம்... முருகனும் உன்ன மாதிரி தான். வள்ளி, தெய்வானையைத் தேடி பாலசித்தர் ஆசிரமத்திற்கே வந்தார். அப்போது முருகனுக்கும் சித்தருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தன்னிடம் சண்டையிடுபவர் முருகன் தான் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்த பாலசித்தர் சரணடைந்தார். உடனே சூரபத்மனுக்கு காட்டிய திருக்கோலத்தை காட்டியருளினார். பின் பாலசித்தரின் வேண்டுகோளின்படி இந்த மலை மீது குடிகொண்டார்”“சொல்லும் போதே மயிலம் முருகனை பார்க்கணும் போலிருக்கே பாட்டி”“இங்கு 11 தீர்த்தம் இருக்கு. இங்குள்ள அக்னி தீர்த்தத்துல நீராடி சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுவது வழக்கம். தைப்பூசத்தன்று இங்கிருந்து தான் காவடி எடுப்பாங்க. பால், பன்னீர், புஷ்பக் காவடிகளைச் சுமந்தபடி பக்திப் பெருக்கோடு மலையேறுவதை பார்க்க கண்கொள்ளாக் காட்சியா இருக்கும். மலை உச்சியில ஒருபுறம் ராஜகோபுரம், மறுபுறம் பெரிய மண்டபம் என கோயிலுக்கு இரண்டு வழி இருக்கு”“ஆமா, காவடி எடுக்கறது எந்த வகையில் விசேஷம் பாட்டி?”“அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் தீர காவடி வழிபாடு கை கொடுக்கும். மலேசியாவுல தைப்பூசத்தன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காவடி எடுக்குறாங்க தெரியுமா?”“பார்த்திருக்கேன் பாட்டி, கடல் கடந்தும் முருகனை பக்தர்கள் வழிபடுவதை பார்க்க பரவசமா இருக்கும்”“காவடி மட்டுமில்ல, மயிலத்துல திருமணம் நடத்துவதும் சிறப்பு. பாலசித்தருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்ததால் இங்கு திருமண வேண்டுதல் செய்வது நல்லது. சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த கோயில்களில் வழிபட்டால் வேண்டும் வரம் எளிதாக கிடைக்கும். கந்த சஷ்டியின் போது பாலசித்தரிடம் இருந்து முருகன் வேல் வாங்குவது இங்கு சிறப்பு”“சரி பாட்டி, எல்லா தகவல்களையும் அடுக்கிச் சொல்லிட்ட. இந்தக் கோயில் எங்கேயிருக்கு”''விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்துல இருந்து 15 கி.மீ., துாரத்தில கோயில் இருக்கு. சின்ன குன்றின் மீது ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கும் இங்கு வழிபட்டால் மனம் அமைதி பெறும். மலைப்பாதையில் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்கள் ஏறும் விதத்தில் வசதியா இருக்கு. வாகன வசதியும் உண்டு. ஆனால் அடுத்து நாம பார்க்கப் போற ஓதிமலைக்கு 1850 படி ஏறித்தான் போகணும்”“அது இருக்கட்டும் பாட்டி... இப்ப மயிலம் முருகனோட நில்லு. தேவந்தியின் மாமாவைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பணும்” என அவசரப்பட்டான் யுகன். அன்றாட வேலை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அவனது மனம் ஓதிமலை முருகனை நோக்கி மலையேறிக் கொண்டிருந்தது.-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார் 94430 06882