உள்ளூர் செய்திகள்

குருவை மிஞ்சிய சீடன்

வரதந்து மகரிஷியிடம் கவுத்சன் என்ற சீடன் பாடம் கற்க வந்தான். ஆண்டுகள் உருண்டோடின. சிறுவனாக வந்த கவுத்சன் இளைஞனாக வளர்ந்தான். குருவுக்குத் தெரிந்த அனைத்தும் கற்று முடித்தான். சீடனை சோதிக்க குரு பரிட்சை நடத்தினார். அவனும் வெற்றி பெற்றான். வீட்டுக்குப் புறப்பட்ட கவுத்சன், ''குருதேவா! தட்சணை தர விரும்புகிறேன். தங்களின் விருப்பத்தை சொல்லுங்கள்'' என்றான்.''இத்தனை காலமும் நீ பணிவுடன் பாடம் கற்ற விதமே தட்சணை பெற்ற நிறைவைத் தந்தது'' என்றார் வரதந்து. ஆனால் கவுத்சன் விடுவதாக இல்லை.''தங்களுக்கு தட்சணை அளித்தால் தான் மகிழ்வேன்''என்றான். ''கவுத்சா... நீ இதுவரை என்னிடம் பதினான்காயிரம் வித்தை கற்றுக் கொண்டாய். வித்தைக்கு ஒரு தங்கக் காசு வீதம் பொன் கொடு''என்றார் வரதந்து. கவுத்சன் சிறிதும் கலங்கவில்லை.''தட்சணையுடன் வருகிறேன்''என அங்கிருந்து புறப்பட்டான்.அயோத்தி மன்னர் ரகு பற்றி கவுத்சன் கேள்விப்பட்டிருந்தான். அவரிடம் சென்றால் தானம் பெறலாம் என்ற நம்பிக்கை தோன்றவே அங்கு சென்றான்.அரண்மனைக்கு வந்த அந்தணரான கவுத்சனை கண்ட மன்னர் ரகு வரவேற்றார்.விருந்து சாப்பிட்ட கவுத்சன், “அரசே... தங்களின் உபசரிப்புக்கு நன்றி'' என கிளம்பத் தயாரானான். ''அதிதியாக வந்த தாங்கள், தானம் பெறாமல் செல்லலாமா?'' என்றார் ரகு. ''மன்னா! நான் பொருள் பெறும் நோக்கத்துடன் வந்தேன். ஆனால் வந்த பிறகு தான் தாங்கள் பொன், பொருட்களை தானம் செய்து விட்டதை அறிந்து கொண்டேன். என் தேவையோ பதினான்காயிரம் பொற்காசுகள். அதைக் கேட்டு தங்களை சிரமப்படுத்த மாட்டேன்'' என்றான் கவுத்சன்.''உங்கள் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுவரை என்னுடனே தங்கியிருங்கள்'' என்றார் ரகு.செல்வத்திற்கு அதிபதியான குபேரன் மீது போர் தொடுத்து, செல்வம் பெற்று வரலாம் என்பது ரகுவின் எண்ணம். ஆனால் அப்போது அங்கு ஓடி வந்த அமைச்சர், ''அரசே! போர் புரியத் தேவையில்லை. நம் பொக்கிஷ அறையில் குபேரன் தங்கமழை பொழிந்து கொண்டிருக்கிறார்'' என்றார்.''அப்படியா... மகிழ்ச்சி'' என்ற ரகு அந்தணரை அழைத்தார். '' உமது விருப்பம் நிறைவேறி விட்டது. குபேரன் தானாகவே வந்து தங்கமழை கொட்டிக் கொண்டிருக்கிறார். அது உமக்கே சொந்தம்'' என்றார். கவுத்சன், '' குருதட்சணையான பதினான்காயிரம் பொன் மட்டும் போதும். அதற்கு மேல் வேண்டாம்'' என்றான்.''அப்படி என்றால் நீங்கள் பெற்றது போக மீதியை தானம் பெற வருவோருக்கே கொடுப்பேன்'' என்றார் ரகு. தானம் அளித்ததால் சிவந்து போன ரகுவின் கைகளைப் பிடித்தபடி மனம் நெகிழ்ந்தான் கவுத்சன். குருவை மிஞ்சிய சீடனாக, வரதந்து மகரிஷி கேட்ட பணத்தை தட்சணையாக ஒப்படைத்தான்.