உள்ளூர் செய்திகள்

அம்மன் கோயில் வாசலிலே...

நீண்ட காலமாக குழந்தை இல்லாத மன்னர் வீரபிரதாபனுக்கு அம்பிகையருளால் ஒரு மகன் பிறந்தான்.அம்பிகாபதி என பெயரிட்டு வளர்த்தான். புத்திசாலியாக வளர்ந்த அவன் கல்வி, இசைக்கலையில் சிறந்து விளங்கினான். இளைஞனாக வளர்ந்த மகனுக்கு பட்டம் கட்ட முடிவெடுத்தார் மன்னர். அதற்காக நல்லநாள் குறிக்க அரண்மனை ஜோசியரை அழைத்தார். அப்போது மகனின் ஆயுள், எதிர்காலம் குறித்தும் கேட்டான். அப்போது ஜாதகப்படி அம்பிகாபதிக்கு அற்ப ஆயுள் என ஜோசியர் தெரிவித்தார். இதை அறிந்த வீரபிரதாபன் கவலையில் ஆழ்ந்தார். ஆனால் அம்பிகாபதி சிறிதும் கலங்கவில்லை.''ஏன் கவலைப்படுகிறீர்கள். மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மறையத் தானே வேண்டும்'' என்றான்.''நீ சொல்வது உண்மை தான். ஆனாலும் பெற்றோர் தன் குழந்தைகள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்புவது இயல்பு தானே. அம்பிகாபதி... உன்னை பார்த்தாலே என் மனம் வேதனைப்படுகிறது'' என்றார். ''தந்தையே! உங்களின் கண்ணெதிரில் இருப்பதால் தான் கவலைப்படுகிறீர்கள். எங்கோ கண் காணாமல் இருந்தால், எப்போது வருவேன் என எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். இல்லாவிட்டால், அங்கேயே என் உயிர் போனாலும் போகட்டும்'' என்றான் தைரியமாக.மன்னரும் அரை மனதாக மகனின் முடிவை ஏற்றுக் கொண்டார். இளவரசன் அரண்மனை கஜானாவில் பெரும் பணத்தையும், சேவை செய்ய பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு நாட்டை விட்டுப் புறப்பட்டான். அண்டை தேசமான மலைநாட்டை அடைந்தான். அங்கிருந்த மக்களின் குலதெய்வமான மலையரசி அம்மன் கோயிலைச் சரணடைந்தான். அதன் அருகிலேயே பள்ளிக்கூடம் அமைத்து குழந்தைகளுக்கு கல்வி, கலைகளைப் போதிக்க ஆரம்பித்தான். பவுர்ணமி நாட்களில் மலையரசி அம்மன் கோயிலில் அன்னதானம் அளித்தான். அம்பிகாபதியின் ஆயுள் முடியும் நாளும் வந்தது. அன்றும் அம்மனை வழிபட்டு மனம் உருகிப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த எமதுாதர்கள் அம்பிகாபதியின் உயிரைப் பறிக்க பாசக் கயிற்றுடன் வெளியே நின்றனர். ஆனால் அம்பிகாபதியின் இனிய குரல் கேட்ட அவர்கள் மெய் மறந்து விட்டனர். நேரம் கடந்து விட்டது. கடமை தவறிய அவர்களால் உயிரைப் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு காட்சியளித்த மலையரசியம்மன், ''அம்பிகாபதி! நீ செய்த பவுர்ணமி பரிகாரத்தாலும், செய்த சேவையாலும் உன் ஜாதகத்தில் ஆயுள் தோஷம் நீங்கியது. நீண்ட காலம் மண்ணில் வாழும் பேறு பெறுவாய்” என வாழ்த்தினாள்.அம்பிகாபதி வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பினான். மகனைக் கண்ட மன்னர் வீரபிரதாபன் மகிழ்ச்சியில் திளைத்தார்.