வெற்றிப்பரிசு காத்திருக்கு
அம்பிகை தன்னை சரணடைந்தவரின் துன்பம் போக்கி வரம் தரும் நாள் விஜயதசமி. வாழ்விற்கு தேவையானவை வீரம், செல்வம், கல்வி. இதில் ஒன்று இல்லாவிட்டாலும் வாழ்வு முழுமை பெறுவதில்லை. எனவே தான் முப்பெருந்தேவியரை வழிபடுகிறோம். முதலில் வழிபட வேண்டியவள் துர்கை. போர் சக்தியான இவள் பகைவரை அழிப்பவள். சிலர் துர்கை, காளி, மகிஷாசுரமர்த்தினி, வாராகி, சாமுண்டியை வீட்டில் வழிபடக் கூடாது என்பர். அன்றாட பூஜை, நைவேத்தியம் முறையாக நடந்தால் சாந்த வடிவிலேயே அம்பிகை இருப்பாள். ஆயுதம் ஏந்திய காவல்காரரைக் கண்டால் திருடன் தான் பயப்படவேண்டும். அது போல பகைவருக்கு காளி, நீலியாக உக்கிரத்துடன் இருக்கும் அம்பிகை தன் அடியவர்களுக்கு தாயாக அருள்புரிவாள். இரண்டாவது மகாலட்சுமி. பாற்கடலில் தோன்றிய இவளின் அருள் இல்லாவிட்டால் வாழ்வு சிறக்காது. ஏழையோ, பணக்காரரோ யார் என்றாலும் லட்சுமியின் அருளுக்குத் தானே ஏங்குகின்றனர். செல்வத்தை அனுபவிக்கும் யோகத்தையும் இவளே அருள்கிறாள். மூன்றாவதாக சரஸ்வதி கல்வி, ஞானத்தை அருள்பவள். மனிதன் மட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் அவளே அறிவு தருகிறாள். ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களின் தகுதிக்கு ஏற்ப ஞானம் தருகிறாள். மண்ணில் இட்ட விதை தண்ணீர், சூரிய ஒளியை ஈர்த்துக் கொண்டு வளரும்.செடி, கொடிக்கும் அறிவு உண்டு. ஆபத்து நேர்ந்தால் கூட்டுக்குள் மறையும் புத்தி நத்தைக்கு உண்டு. மழைக் காலத்திற்குத் தேவையான உணவை கோடையில் சேர்க்கும் அறிவு எறும்புக்கு உண்டு. தினையளவு தேன் கிடைத்தாலும் அதை பனையளவு ஆக்கும் நுண்ணறிவு தேனீக்கு உண்டு. ஆயிரம் கன்றுகள் ஓரிடத்தில் இருந்தாலும் தன் கன்றைக் கண்டறியும் சக்தி மாட்டிற்கு உண்டு, தன் தாயை நாடும் அறிவு கன்றுக்கும் உண்டு. தர்ம நெறிகளை கடைபிடித்து வாழும் அறிவு ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உண்டு. இப்படி அனைத்து உயிர்களிலும் ஞானமாக திகழ்பவள் சரஸ்வதியே. தென்னிந்தியாவில் விஜயதசமி என்றும், வட இந்தியாவில் தசரா என்றும் இது அழைக்கப்படுகிறது. எருமை வடிவில் வந்த மகிஷன் என்ற அசுரனை அம்பிகை வதம் செய்த நாள் விஜயதசமி. ராமபிரான் அரக்கனான ராவணனைக் கொன்று சீதையை மீட்டதும் இன்று தான். பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் தனி ஆளாக விராட தேசத்தின் மீது படை எடுத்து வந்த கவுரவர்களை இந்நாளில் வென்றான். அர்ஜூனனுக்குரிய விஜயன் என்னும் பெயரால் இந்நாளை 'விஜய தசமி' என சொல்கிறோம். சரஸ்வதி பூஜையில் வைத்த புத்தகங்கள், தொழில் கருவிகளை விஜயதசமி அன்று மீண்டும் வழிபட்டு பயன்படுத்த தொடங்குவர். கல்வி, கலைகள், புதிய முயற்சி என எந்த செயலையும் தொடங்கலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தட்டில் நெல்பரப்பி குழந்தைகளின் கைபிடித்து எழுதப் பழக்குவர். இது குழந்தைகளின் கற்றலுக்கு நல்ல தொடக்கமாக அமையும். பாட்டு, இசை, நடனம், மொழி கற்றல் என புதியனவற்றை பயிலத் தொடங்குவர். வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்வதற்கு உதவிய ஆசிரியர்கள், பெரியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இது. நேரிலோ அல்லது அலைபேசியிலோ தொடர்பு கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியம். கல்வி, செல்வம், வீரத்தை பெற விஜயதசமி நாளில் அம்பிகையை வழிபடுவோம். இந்நாளில் தொடங்கும் நல்ல செயல்கள் வெற்றியை பரிசளிக்க நமக்காக காத்திருக்கும்.