உள்ளூர் செய்திகள்

கொடுப்பதில் மகிழ்ச்சி

கண்ணன் என்னும் இளைஞன் திருப்பதிக்குச் சென்றான். கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசனம் முடித்ததும் லட்டு வாங்க வரிசையில் நின்றான். பணக்காரர் ஒருவர் நான்கு லட்டுகளுடன் செல்வதைக் கண்டான். ஏழையான அவனால் ஒரு லட்டு தான் வாங்க முடிந்தது. வருந்திய அவன் வழியில் துறவி ஒருவரைக் கண்டான். ''சுவாமி! பணக்காரர்களால் நினைச்சதை எல்லாம் செய்ய முடிகிறது. ஏழையான எனக்கு இரண்டு லட்டு வாங்க முடியவில்லையே?'' எனக் கேட்டான். ''மகனே! அவர் நாலு லட்டு வாங்கலாம். ஆனால் சர்க்கரை வியாதியுள்ள அவரால் சாப்பிட முடியுமா? உறவினருக்கு கொடுக்கவே வாங்கியுள்ளார். தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுப்பதே ஆன்மிகத்தின் அடிப்படை. அதுவே உண்மை மகிழ்ச்சி. இதில் இன்னொரு தத்துவமும் உள்ளது. அமிர்தம் போல இனிக்கும் லட்டை கொஞ்சம் தின்றதும் இன்னும் கிடைக்காதா என மனம் ஏங்கும். கடவுளின் கருணையும் அப்படியே. பெருமாளின் அருளுக்காக ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான். நீயும் பிறருக்கு பகிர்ந்து கொடு. கடவுளின் அருள் கிடைக்கும்'' என்றார்.