விடியல் எப்போது
வசுதேவருக்கும், தேவகிக்கும் மதுராபுரி சிறையில் கிருஷ்ணர் பிறந்தார். அதே சமயத்தில், கோகுலத்தில் நந்தகோபருக்கும், யசோதைக்கும் பெண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணரை கூடையில் வைத்து நந்தகோபரிடம் ஒப்படைத்து விட்டு, பெண் குழந்தையை வசுதேவர் எடுத்து வந்தார். அக்குழந்தை தங்களுக்கு பிறந்ததாக வசுதேவரின் மனைவியான தேவகி, தன் சகோதரன் கம்சனிடம் தெரிவித்தாள். மதுராவை ஆட்சி செய்த இவன், தன் தங்கையின் குழந்தையால்தான் தனக்கு அழிவு உண்டாகும் என்பதால் குழந்தையைக் கொல்லும் எண்ணத்துடன் அதன் கால்களை பிடித்து வீசினான். அப்போது அந்தக் குழந்தை காளியாக மாறி கம்சனை எச்சரித்து விட்டு மறைந்தது. இந்த வரலாற்றின் அடிப்படையில் குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் கன்வா கிராமத்தில் காளி கோயில் கட்டியுள்ளனர். பரூச் நகரில் இருந்து 17 கி.மீ., இக்கிராமம் உள்ளது. இதை 'பாலா கோயில்' என அழைக்கின்றனர். தினமும் இந்த அம்மனுக்கு விதவிதமாக அலங்காரம் செய்கின்றனர். அதில் குறிப்பாக சேவல் மீது அமர்ந்த கோலத்தை காண கூட்டம் அலை மோதும். அதற்கு காரணம் சேவல் கூவினால் பொழுது விடியும். அது போல தங்களின் கஷ்டம் தீர்ந்து நமக்கு 'விடியல் எப்போது' கிடைக்கும் என இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.