விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 1
ஹிந்து மதத்தில் முதற்கடவுளாகப் போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். கணபதி, கணேசன், வக்ரதுண்டர், லம்போதரர் உள்ளிட்ட பெயர்கள் இவருக்கு உண்டு. பாரத தேசத்தில் மட்டுமின்றி உலகமெங்கினும் யானைத் தலையோடும், குள்ள வடிவத்தோடும் வழிபடப் பெறும் ஒரே தெய்வம் இவர்தான். விநாயகர் என்றால், யானைத் தலை, தொப்பை, சிறிய கால்கள், நான்கு கைகள், பாசக் கயிறு, யானையை அடக்கும் அங்குசம், ஒரு கையில் ஒடித்த தந்தம், மற்றொரு கையில் மோதகம் ஆகியவை அடங்கிய திருவுருவம்தான் நம் மனக்கண்ணில் தோன்றும். இந்த திருவுருவமே பெரும்பாலான கோயில்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் ஹிந்து மத சாஸ்திரங்களில், விநாயகப் பெருமானுக்கு பல திருவுருவங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு காரணத்திற்காக விநாயகப் பெருமான் அத்திருவுருவங்களை எடுத்து உயிர்களுக்கு அருள் செய்தார் என்று புராணங்கள் விளக்கம் அளிக்கின்றன. புராணங்களைக் கடந்து, இந்த திருவுருவங்களுக்கு எனத் தனி தத்துவம் உண்டு. அவற்றை உணர்ந்தால்தான் இவ்வடிவங்களை வழிபடுவதில் பக்தர்களுக்கு ஊக்கமும் ஈடுபாடும் ஏற்படும். 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, மைசூர் சமஸ்தான மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார், அனைத்து தெய்வங்களின் வடிவங்களையும் தொகுத்து, 'ஸ்ரீதத்துவநிதி' என்ற தலைப்பில் ஒரு களஞ்சியத்தை உருவாக்கினார். அந்த நுாலில் இருந்து, விநாயகரின் 32 திருவுருவங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் 'வியாகரண சிரோமணி' சிவஸ்ரீ வி.சோமசேகர குருக்கள், நம் ஆன்மிக மலர் வாசகர்களுக்காக எளிய நடையில் தொகுத்துத் தருகிறார். இந்தத் தொடரை படிப்பதோடு நின்று விடாமல், விநாயகப்பெருமானின் திருவுருவ தத்துவங்களையும் உணர்ந்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைவர்.மக்கட்பேறு அருளும் பாலகணபதி பெருமானுக்குப் பல்வேறு வடிவங்கள் இருந்தாலும் முதல் விவடிவமாகக் கூறப்படுவது பால கண்பதி என்ற குழந்தை வடிவத் தோற்றமே. இளஞ்சூரிய நிறத்தில் இருப்பவர். தமது நான்கு திருக்கரங்களில், மேல் வலக் கரத்தில் வாழைப் பழத்தையும், கீழ் வலக்கரத்தில் மாம்பழத்தையும், மேல் இடக்கரத்தில் கரும்பையும், கீழ் இடக்கரத்தில் பலாப் பழத்தையும் தும்பிக்கையில் மோதகத்தையும் கொண்டிருப்பவர். குள்ளமான உருவத்தோடு இருப்பதால், தாமரை இருக்கையில் வலக்காலை குத்துக்காலாக இட்டு, இடக்காலை மடக்கி நீட்டி இருப்பவர். இந்த வடிவத்தைத் தான் கீழ்க்கண்ட தியான சுலோகம் சொல்கிறது. தியான சுலோகம் கரஸ்த' கத'லீ சூத பநஸேக்ஷுக மோதகம் |பாலஸூர்ய ப்ரபம்தே'வம் வந்தே' பாலக'ணாதிபம் || கரஸ்த: தமது திருக்கரங்களில் கதலீ: வாழைப்பழம் சூத: இனிப்பான மாம்பழம் பநஸ: பலாப் பழம் இக்ஷுக: கரும்பு மோதகம்: மோதகம் ஆகியவற்றை உடையவரும் பாலஸூர்ய ப்ரபம்: இளஞ்சூரியனைப் போன்ற ஒளி பொருந்தியவரும் பாலகணாதிபம்: பாலகணபதி எனப் பெயருடையவருமான தேவம்: தேவனை வந்தே: வணங்குகிறேன். முக்கனிகள்: பழங்களிலே சிறந்தவை மா, பலா, வாழை என்ற முக்கனிகள். இனிமையான வாழ்வை அருள்பவர் பால கணபதி என்பதை இவை காட்டுகின்றன. கரும்பு: உயிர்களின் விருப்பங்களைக் குறிக்கிறது. உயிர்கள் வேண்டுபவற்றை அருள்பவர் கணபதி என்பதை கரும்பு உணர்த்துகிறது. மோதகம்: இனிப்பானது. உயிர்களுக்கு நிரந்தர இன்பம், வீடுபேறே. அதைத் தருபவர் கணபதி என்பதைக் காட்டுவது மோதகம். பலன்: குழந்தை பேறு கிடைக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கும். அருள் தொடரும்வியாகரண சிரோமணி சிவஸ்ரீ வி. சோமசேகர குருக்கள்98402 99352