உதாரண புருஷர்
துறவுக்கு மட்டுமின்றி மனித வாழ்வின் எல்லா தர்மங்களுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் காஞ்சி மஹாபெரியவர். தனிமனித தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீராம அவதாரம், ராஜ தர்மத்தை விளக்கிக் காட்ட ஸ்ரீகிருஷ்ண அவதாரம் இந்த மண்ணில் நிகழ்ந்தது. இவரோ எல்லா தர்மங்களையும் விளக்க வந்த பெரிய அவதாரம். ராமர் கூட மரவுரி தரித்து 14 ஆண்டுகள் காட்டில் தவவாழ்வு வாழ்ந்து காட்டினார். ஆனால் அப்போது நாட்டு நிர்வாகம் என்னும் சுமை அவருக்கு இல்லை. ஆனால் பெரியவரோ தன் 13 வயதில் சன்யாசம் ஏற்றார். கடினமான அனுஷ்டானங்களை விடாப்பிடியாக பின்பற்றி துறவுக்கு இலக்கணமாக சரித்திரம் படைத்தார். அத்துடன் மடாதிபதியாக நிர்வாக பொறுப்பிலும் சாதனை படைத்தார். ஜகத்குருவாக உலக மக்களை தர்மவழியில் நடத்தவும் வேண்டி இருந்தது. எளிமையே சிறந்தது என வாழ்ந்து காட்டி, மக்களுக்கு நம்பிக்கையும் தெளிவும் ஊட்டிய அவரது நேர்த்தியை என்னவென்று சொல்வது!. உணவு, உடை, உறைவிடம் எதிலும் எளிமை. எளிமை என்றாலே காஞ்சி மடம் தான் என்று உலகம் கொண்டாடும் அளவுக்கு எளிமை ஆனால் தவத்திலோ மேன்மையிலும் மேன்மை. நெல், அவல் பொரியை பால் அல்லது மோரில் ஊற வைத்து பகலில் மட்டும் உண்பது. சில சமயம் வாழைக்காயை மாவாக்கி அதில் செய்த உணவை உண்பது. இப்படி உணவில் எளிமை. நடுவயது பருவத்தில் சில சமயங்களில் வில்வ இலைகளை உண்பது. பல நாட்கள் விரதமாக பட்டினி கிடப்பது. அதிலும் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பார். சாப்பிடும் நாட்களிலோ அன்றாட பூஜை, அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு உண்பதற்கு மதியம் மூன்று அல்லது நான்கு மணி ஆகி விடும். சில சமயம் ஏதேனும் தவறு நேர்ந்தால் உணவை மறுத்துவிடும் சூழ்நிலையும் உண்டு. 1979ம் ஆண்டு கர்நாடகத்திலுள்ள கோகாக் அருகிலுள்ள ஹரேபாவே என்னும் இடத்தில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அன்று ஏகாதசி விரதநாள். தண்ணீர்கூட அருந்தாமல் விரதம். மறுநாளோ 'சிரவண(ஆவணி) துவாதசி'யாக அமைந்துவிட சாஸ்திர விதிப்படி அன்றும் நீர் கூட அருந்தாத கடும்தவம். இதே போல் ஒருமுறை பண்டரிபுரத்தில் இருந்த போதும் நிர்ஜல(தண்ணீர் அருந்தாமல்) ஏகாதசி, சிரவண துவாதசி(திருவோண நட்சத்திரம், துவாதசி திதி சேரும் நாள்) என இரண்டு நாள் தொடர்ந்து வர நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்தார். மூன்றாம் நாள் உணவு அருந்தலாம் என்றால் அன்றோ சிவராத்திரி என்பதால் அன்றும் பட்டினி. இப்படி மூன்று நாள் விரதம் இருக்கும் போது அவருக்கு வயதோ எண்பது. சரி நான்காம் நாளாவது பிைக்ஷ(உணவை) ஏற்று விரதத்தை முடிக்கலாம் என உடனிருந்த சீடர்கள் காத்திருக்க பெரியவரோ நான்காம் நாள் காலை தன் அனுஷ்டானங்களை முடித்து கோயில் தரிசனத்திற்கு புறப்பட்டார். வேறு வழியின்றி சீடர்களும் உடன் சென்றனர். வழி நெடுகிலும் மக்கள் வெள்ளமாக சூழ்ந்து கொண்டு மஹாபெரியவரைத் தரிசித்தனர். இப்படி தாமதம் ஆகிக்கொண்டே போக, பெரியவர் தன் இருப்பிடம் வந்து சேர மாலை ஆறு மணியாகி விட்டது. நான்காம் நாளன்று பிக்ஷை(உணவு) ஏற்க முடியாமல் மாலை நேரமாகி விட்டதே என சீடர்கள் வருந்த, இருப்பிடம் வந்த மகானோ கையை விரித்து ''இன்னிக்கும் போச்சு'' என்று சிரித்தார். கேட்டவர்களுக்கு சிரிப்பா வந்திருக்கும்...கண்ணீர் பெருகியது. சாப்பிட முடியாமல் போனதற்கு ஒருவர் சந்தோஷமா படுவார்கள்? இப்படி நான்காம் நாள் மாலை உணவு அருந்த முடியாமல் போனதற்கு சாஸ்திரவிதிதான் காரணம். நான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிறன்று சூரியன் மறைந்த பிறகு உணவு அருந்தக்கூடாது என்பது சாஸ்திர விதி. இதை மீறினால் பாவத்திற்கு ஆளாக நேரிடும்.நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் மஹாபெரியவர் தண்ணீர் அருந்தாமல் விரதம் இருப்பார். ஆனால் அப்போது மடத்தில் காலை, இரவில் விசேஷமாக பூஜை நடக்கும். சோர்வு என்பதையே கண்டறியாத அபூர்வ பிறவி அவர். குரு பூர்ணிமா (ஆடிமாத பவுர்ணமி) முதல் சாதுர்மாஸ்ய (கார்த்திகை மாத பவுர்ணமி வரை) விரதமாக நான்கு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் இன்ன இன்ன உணவை உண்ணக் கூடாது என்ற நியதியை கடைசி வரை பின்பற்றிய மாமனிதர்.வெயில், மழைக்குக்கூட ஒதுங்க இடம் இல்லாத முகாம்களில் தங்குவார். சாலையோர பாழடைந்த மண்டபம், மரத்தடி, உபயோகம் இல்லாத கட்டிடங்கள் என பார்க்காமல் எல்லா இடங்களிலும் தங்குவார். அப்போது அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கோ வயிறார உணவளிக்க பரிந்துரைக்கும் தாயுள்ளம் கொண்ட மஹாபெரியவரின் மாண்பை சொல்லிக்கொண்டே போகலாம். குணத்தில் அவர் பெருங்கடல்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com