உள்ளூர் செய்திகள்

திருமணம் நடக்கட்டும் இனிதாக!

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காஞ்சிபுரத்தில் மகாசுவாமிகள் பொதுமக்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். அப்போது சுவாமிகளை வணங்கினார் ஒரு நடுத்தர வயது மனிதர். ''கும்பகோணம் மடத்தில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தாரே... கணேசய்யர்! அவரது மகன் நடேசன் நான்'' என்றார் அவர். சுவாமிகள் வாய் மலர்ந்து சிரித்தார். காஞ்சிபுரம் சங்கர மடம் ஒரு காலத்தில் கும்பகோணத்தில் இருந்தது. அப்போது சமையல்பணி செய்தவர் தான் கணேசய்யர். மகாசுவாமிகள் மீது அளவற்ற பக்தி கொண்டவர். 'நடேசா! உன் அப்பாவை மறக்க முடியுமோ? சமையல் மூலம் நம் மடத்துக்குக் கைங்கர்யம் பண்ணின கையாச்சே அவருடையது? நீ இப்போ என்ன பண்றே?'' எனக் கேட்டார். ''நானும் சமையல் தான் பண்றேன். கஷ்ட ஜீவனம் தான். என் பொண்ணுக்குக் கல்யாணம் இப்போ நிச்சயமாயிருக்கு. சுவாமிகள் தான் உபகாரம் பண்ணணும்'''மடத்துக்குக் கைங்கர்யம் பண்ணினவரின் பேத்திக்குக் கல்யாணம்! ஏழ்மை நிலையில் இருக்கும் அவருக்கு உதவி செய்யணுமே! ஈஸ்வரா' என விரும்பினார் மகா சுவாமிகள்.குடும்பத்துடன் செல்வந்தர் ஒருவர் அங்கு வந்தார்.சுவாமிகளை வணங்கி நின்றார். அவரிடம் ''இதோ... உன் பக்கத்துல நிக்கறாரே நடேசன். இவரை உன் தம்பியா நினைச்சுக்கோ. அவர் பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கார். கஷ்ட ஜீவனம் தான். நீ கொஞ்சம் அவருக்கு ஒத்தாசை பண்ணினா நல்லாயிருக்கும்'' என்றார் மகாசுவாமிகள். பரவசப்பட்ட அவர் நடேசனின் கையைப் பிடித்தார். அவரது கையில் இருந்த துண்டை விரிக்கச் சொல்லி, அதில் மகாசுவாமிகளுக்கு அர்ப்பணிப்பதற்காக கொண்டு வந்த தொகையை துண்டில் கொட்டினார். தன் கையில் இருந்த தங்க வளையலை அவரது மனைவி கொடுத்தாள்.அவர்களுக்கு குங்குமப் பிரசாதம் கொடுத்த சுவாமிகள், ''அம்பாள் அருளால் ஷேமமுடன் இருங்கள்'' என ஆசீர்வதித்தார். 'உன் பெண் கல்யாணத்தை நல்லபடியாய் நடத்து!' என்று சொல்லி சுவாமிகள் நடேசனுக்கு குங்குமம் வழங்கிய போது நன்றிக் கண்ணீர் பெருகியது.காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.திருப்பூர் கிருஷ்ணன்