உள்ளூர் செய்திகள்

பெற்றால் தான் பிள்ளையா?

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. காஞ்சிப்பெரியவரை நேரில் சந்தித்து ஆசி பெற வந்தனர். பக்தர்களின் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த போது, சிறுமி ஒருத்தி அந்த தம்பதியிடம் அன்புடன் ஒட்டிக் கொண்டாள். அவளது வலக்கன்னத்தில் மச்சம் ஒன்றிருந்தது. பெரியவரிடம் தங்களின் மனக்குறையை தம்பதிகள் தெரிவித்த போது, அந்தச் சிறுமியும் உடனிருந்தாள்.அப்போது பெரியவர், “யார் இந்த சிறுமி?” என்று கேட்டார். ஒருவரும் சிறுமியை உரிமை கொண்டாட முன் வரவில்லை.தம்பதியிடம் பெரியவர், அச்சிறுமியை வளர்த்து ஆளாக்கும்படி ஆசியளித்தார்.சிறுமிக்கு காமாட்சி என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை வீட்டுக்கு வந்த அடுத்த வருடத்தில், அந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அனைவரும் 'குழந்தை காமாட்சியால் கிடைத்த அதிர்ஷ்டம் இது' என்று வியந்தனர்.இரு குழந்தைகளையும் சமமாக கருதி வளர்த்தனர். ஒருநாள் கோவில் திருவிழாவுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் காமாட்சி காணாமல் போனாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் உருண்டோடினாலும் தம்பதிக்கு வருத்தம் தீரவில்லை.ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற தம்பதி பெரியவரிடம், “சுவாமி... பெற்றால் தான் பிள்ளையா? எங்களின் அன்பு மகள் காமாட்சி எங்கிருக்கிறாளோ... இப்போது அவள் திருமண வயதை அடைந்திருப்பாளே...” என்று வருந்தினர். பெரியவர் மடத்தில் இருந்த ஒரு பணிப்பெண்ணை அழைத்து, “திருமணம் செய்ய விரும்பினால், இவளுக்கு நடத்தி வையுங்கள்,” என்றார்.அவளைக் கண்ட தம்பதிக்கு கண்ணீர் பெருகியது. காரணம், அவளே தங்கள் வளர்ப்புமகள் காமாட்சி என்பதால் தான். அவள் கன்னத்தில் இருந்த மச்சம் அவளை அடையாளம் காண இலகுவாக இருந்தது.சுந்தரி கிருஷ்ணமூர்த்தி