உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணஜாலம் - 2 (25)

'வெல்ல வேண்டுமானால் கொல்ல வேண்டுமே?' என்ற பீஷ்மரின் பதிலால் பாண்டவர்கள் ஐவரும் உறைந்து போய் விட்டனர்.ஆம்...அவரை கொல்லத்தான் வேண்டும்!கொல்லாமல் வெல்லுதல் சாத்தியமே இல்லை.கொல்லலாம் என்றாலோ வழியுமில்லை. பீஷ்மரின் வரசித்திகளுடன் யாரால் மோத முடியும்?இது நாள்வரை பீஷ்மர் வாழ்ந்த வாழ்க்கை என்பதும் சாதாரணமானதா என்ன? எந்தப் பிள்ளை தந்தைக்கே பெண் பார்ப்பான்? எந்தப் பிள்ளை அரசாட்சியை வேண்டாம் என்று விட்டுக் கொடுப்பான்? எந்தப் பிள்ளை திரண்ட ஆண்மைக்கு நடுவில் பெண்மைக்கு இடம் கொடுக்காதிருப்பான்? சந்நியாசிக்கு பிரம்மச்சரியம் என்பது லட்சியம். ஷத்திரியனுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? எதற்கு அந்த சம்பந்தம்?சகோதர விருப்பத்திற்காக எவனாவது பெண்ணை கவர்ந்து செல்வானா? தனக்கென வாழாமல் தன்னை அண்டி இருப்பவர்களுக்காகவும், உறவுக்காகவும் வாழ்ந்திட எத்தனை பெரிய உள்ளம் வேண்டும்?இதெல்லாம் ஒருவரிடம் இருக்க முடியும் என்றால் அந்த ஒருவர் தான் பீஷ்மர். அவரை வெறுக்க யாராலும் முடியாது. எல்லா பக்கமும் தித்திக்கும் கல்கண்டை யாரால் அலட்சியப்படுத்த முடியும்?அது கல்கண்டு மட்டுமல்ல, அசைக்க முடியாத கல் குன்றும் கூட! பாண்டவர்களால் பீஷ்மர் கேட்ட கேள்விக்கு ஒரு பதிலைச் சொல்ல முடியவில்லை. தலை குனிந்து நின்றனர். பீஷ்மருக்கா தெரியாது? இதமாக பேசத் தொடங்கினார்.''எனதருமை பிள்ளைகளே...! என் கேள்வி உங்களை எந்த அளவு சங்கடப்படுத்தும் என்பது தெரியும். 'உங்களைக் கொல்ல என்ன வழி?' என்று என்னிடம் உங்களால் கேட்க முடியாது. உங்களை நானும் தர்ம சங்கடப்படுத்த விரும்பவில்லை. எனக்கென்னவோ நான் வாழ்வின் இறுதிக்கட்டத்துக்கு வந்தது போல தோன்றுகிறது. என்ன தான் என் வரசித்தி பற்றி நான் அறிந்திருந்தாலும், வெல்லப்பட முடியாதவனாகவும், கொல்லப்பட முடியாதவனாகவும் ஒருவர் பூமியில் இருப்பது தான் கொடுமை.உண்மையில் மரணமும் ஒரு வரமே! மரணமில்லாத வாழ்க்கை தான் உண்மையில் சாபம்... என் வாழ்வில் நான் எல்லாவிதமான உணர்வு நிலைகளிலும் சஞ்சரித்து முடித்து விட்டேன். எத்தனை நேர்த்தியாக வாழ்ந்தாலும் நம்மை எல்லோரும் நேசிப்பதில்லை. அது கூட பரவாயில்லை. நம்மை பழிக்கு ஆளாக்கும் போது, என்ன சாதித்தோம் என்ற கேள்வி எழாமல் இல்லை.எத்தனை பெரிய வீரனும் இப்படிப்பட்டவர்கள் முன்னால் இறந்தவனே! அப்படி பார்த்தால் நான் கூட இறந்தவனே... அதை நிரூபிக்க வேண்டிய ஒரு செயல் மட்டும் தான் என் வரையில் நிகழ வேண்டும்.'' என்று பீஷ்மர் மனித வாழ்வின் ஒரு முக்கிய பக்கத்தை பாண்டவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும், அதே சமயம், 'நான் கூட இறந்தவனே!' என்று சொன்னதன் மூலம் தன்னைக் கொல்ல வழி உண்டு என்பதை மறைமுகமாக உணர்த்தி விட்டார்.பின்னர் நேராகவே கூறத் தொடங்கினார்.''தர்மா! ஆயுதம் என் கைவசம் உள்ளவரை என்னை வீழ்த்த முடியாது. அதேசமயம் என் எதிரில் ஒரு அங்கஹீனன் வந்து நின்றாலோ, இல்லை ஆயுதமின்றி ஒருவன் வந்தாலோ, ஒரு அரவாணி என்னோடு மோத வந்தாலோ அவர்களுக்கெதிராக ஆயுதம் எடுக்க மாட்டேன்! அவ்வளவு ஏன் பிள்ளைப்பேறு இல்லாதவன், ஒரு தாய்க்கு ஒரே மகன், தாய் தந்தையற்ற அநாதைக்கு எதிராகவும் யுத்தம் புரிய மாட்டேன். அதே சமயம் இவர்கள் என்னை எதிரியாக எண்ணி கொல்ல நினைத்தாலும் தாராளமாக கொல்லலாம். அப்போது கூட என் உடலை செயலற்றதாக்கலாம். உயிர் என் விருப்பத்திற்கேற்பவே பிரியும்.'' பீஷ்மர் கூற வேண்டியதை கூறிவிட்ட நிலையில் ஐவரும் பீஷ்மரின் பாதத்தில் விழுந்து வணங்கினர். அர்ஜூனன் கலக்கமுடன் பார்த்தான்.''அர்ஜூனா! கலங்காதே. கண்ணன் காட்டும் வழியில் செல்லுங்கள். சகலமும் நன்மையில் முடியும்'' என்றவரை அர்ஜூனன் கட்டித் தழுவி கதறினான். பின் பிரியாமல் பிரிந்தான். எல்லோரும் தங்கள் பாசறைக்கு திரும்பினர். கிருஷ்ணன் காத்திருந்தான். பீஷ்மர் கூறியதை நகுல, சகாதேவர்கள் அப்படியே ஒப்புவிக்க முன்வந்தனர்.''எதையும் நீ கூறத் தேவையில்லை சகாதேவா... உன் ஸ்படிக மாலையே எனக்கு சகலத்தையும் கூறிவிட்டது'' என்றான் கிருஷ்ணன்.''என் ஸ்படிக மாலையா?'' ஆச்சரியமாக கேட்டான் சகாதேவன்.''ஆம்.. ஸ்படிகம் ஒரு சப்த வசீகரி. மந்திர, சத்திய சொற்களை அது தனக்குள் அப்படியே பதிவு செய்து கொள்ளும். நாம் அதை திரும்ப கேட்க முடியும். அப்படிக் கேட்பவன் புலனடக்க யோகியாக இருக்க வேண்டும். யோக நிலையின் உச்சத்துக்கு செல்லும்போது பூப்பூக்கும் சப்தம் கூட இடியோசைக்கு நிகராக கேட்கும். நானும் கொஞ்சம் யோகம் பழகியவன் என்பதால் நீ என்னைக் காண இங்கு வரும் போதே பீஷ்மர் குரல், உனது ஸ்படிக மாலை வழியாக என் காதுகளில் ஒலித்து அடங்கி விட்டது.இனி அவரை கொல்வது குறித்து நீங்கள் சிந்திக்க தேவையே இல்லை. பீஷ்மர் தொடர்பாக ஒரு பழைய பாவக்கணக்கு ஒன்று உள்ளது. அந்த கணக்கு அவரை வீழ்த்தி விடும்.'''' பாவக்கணக்கா? அதுவும் பீஷ்மரிடமா?'' அதிர்ந்தான் தர்மன்.''ஆம்! அந்த பாவத்தை கூட பீஷ்மர் தெரிந்து செய்யவில்லை. தெரியாமல் தான் செய்தார். இருந்தாலும் ஒரு கண்ணாடிப்பாத்திரத்தை தெரிந்து கீழே போட்டாலும், தெரியாமல் கீழே போட்டாலும் அது உடைந்து போவது எப்படி அதன் தன்மையோ அப்படியே சில செயல்பாடுகள் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாவத்திற்குரியதாகி விடுகின்றன. அதுபோல் ஒரு செயல்பாடு பீஷ்மரை பாவியாக வைத்திருக்கிறது. அந்த பாவமே அவரைக் கொல்லவும் போகிறது.''''கிருஷ்ணா சற்று புரியும்படி கூறக்கூடாதா?'''' இதோ கூறுகிறேன். காசிநாட்டு மன்னனுக்கு மூன்று பெண்மக்கள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்பது அவர்களின் பெயர்கள். இவர்களில் அம்பை, சாளுவ மன்னனை நேசித்தாள். அவனும் நேசித்தான். இவ்வேளையில் இம்மூவருக்கும் சுயம்வர ஏற்பாடு செய்தான் மன்னன். இதில் பங்கேற்ற பீஷ்மர் தன் சகோதரன் விசித்திர வீர்யனுக்காக மூவரையும் கவர்ந்து சென்றார். அப்போது நீங்களெல்லாம் பிறக்கவேயில்லை. சாளுவனை காதலித்தபடியால் பீஷ்மர் விருப்பத்துக்கு அம்பை சம்மதிக்கவில்லை. பீஷ்மரும் அவளை வற்புறுத்தவில்லை. மீதமுள்ள அம்பிகை, அம்பாலிகையை தன் சகோதரனுக்கு மணம் முடித்தார். அதே சமயம் பீஷ்மர் அம்பையை கவர்ந்து சென்றதால் சாளுவன் ஏற்க முடியாது என கைவிட்ட நிலையில் திரும்ப வந்த அம்பை பீஷ்மரிடம்,' நீங்களாவது என்னை மணந்து கொள்ளுங்கள்' என்றாள். பீஷ்மரோ பிரம்மச்சாரிய விரதம் பூண்டதால் முடியாது என மறுத்தார். அம்பை காதலித்தவன் இன்றி, கடத்தியவன் இன்றி நிர்கதியானாள். அப்படிப்பட்டவள் பீஷ்மரை அழிக்க சபதம் செய்தாள். ஆனால் பாவம் அம்பையாக இருந்தவரை அவளுக்கு அது சாத்தியமாகவில்லை. அவளே மறுஜென்மம் எடுத்து காத்திருக்கிறாள்''அம்பை வரலாறு அறிந்த பாண்டவர்கள் கலங்கினர். அவள் இப்போது எங்கிருக்கிறாள்? 'யார் அவள்' என்ற கேள்வியும் எழுந்தது.கிருஷ்ணன் அதற்கான பதில் சொன்னான். அது தான் சிகண்டி!- தொடரும்இந்திரா சவுந்திர்ராஜன்