பெரிய மனிதர்களுக்கு படிப்பினை
சமுதாயத்தில் அந்தஸ்து மிக்க மனிதர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் பொறுமை, கண்ணியம் வேண்டும் என்பதை துரோணர், குசேலர் ஆகியோரின் வாழ்க்கை சரிதம் மூலம் எடுத்துச் சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்.துரோணரும், துருபதனும் குருகுலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இளவரசனான துருபதன், “நான் அரசனானால் உனக்குப் பாதி நாட்டை அளிப்பேன்,” என்று வாக்களித்தான். பிற்காலத்தில் வறுமையில் வாடும் துரோணர், நண்பன் அளித்த வாக்குறுதியைப் பயன்படுத்தி உதவி கேட்டார். ஆனால், துருபதன் அதை மறுத்ததோடு அவமரியாதையும் செய்தான்.இதற்காக அவனை பழிவாங்க எண்ணிய துரோணர், தன் சீடன் அர்ஜுனன் மூலம் துருபதனை தோற்கடித்து அவனது நாட்டைக் கைப்பற்றினார். போனால் போகிறது என்ற நிலையில் நாட்டின் ஒரு பாதியை துருபதனுக்கு வழங்கினார். இதன் பிறகு துரோணரை அழிக்க துருபதன் யாகம் செய்தான். அந்த யாக குண்டத்தில் திருஷ்டத்யும்னனும், திரவுபதியும் தோன்றினர். அவர்களைத் தனது பிள்ளைகள் ஆக்கிக்கொண்டான்.துருபதன் தன்னைத் தோற்கடித்த அர்ஜுனனுக்கு, மகள் திரவுபதியை மணம் முடித்து வைத்தான். ஒரு கட்டத்தில் பாண்டவர், கவுரவர் இடையே போர் மூண்டது. துரோணர் கவுரவர் அணியில் நிற்கும் போது, அவரை எதிர்த்து நின்றவன் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன்.இதற்கிடையில், பகவான் கிருஷ்ணர், போரில் அஸ்வத்தாமன் இறந்ததாக ஒரு தகவலை பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் மூலம் சொல்லச் செய்கிறார். அதாவது அஸ்வத்தாமன் என்னும் பெயர் கொண்ட யானை ஒன்று இறந்து போயிருந்தது. அதை தர்மர் “அச்வத்தாம ஹத: குஞ்ஜர” என்று தெரிவித்தார். இது காதில் விழுந்ததும், துரோணர் ஆயுதங்களை கீழே போட்டு மயங்கி விழுந்தார். ஏனென்றால், அஸ்வத்தாமன் என்பவன் துரோணரின் மகன். 'குஞ்ஜரம்' என்பதற்கு 'யானை' என்பது பொருள்.'குஞ்ஜர' என்ற வார்த்தை மட்டும், அவரது காதில் விழுந்து விடாதபடி, அந்நேரத்தில் கிருஷ்ணர் சங்கை எடுத்து ஊதியதால் துரோணருக்கு உண்மை புரியவில்லை. போரில் துரோணர் அர்ஜுனனிடம் தோற்றுப் போனார். துரோணர் பிறப்பால் பிராமணர். அவர் அர்ஜுனன் உள்ளிட்டவர்களுக்கு போர்முறையைக் கற்றுக் கொடுத்ததோடு, ஆயுதமும் ஏந்தி போரிட்டது பிராமண தர்மம் ஆகாது. துருபதனை அவர் பழி வாங்க துடித்ததும் தேவையில்லாதது. பாரதத்தில் வரும் இன்னொரு பிராமணரான குசேலர், தர்மத்தை எப்போதும் மீறியதில்லை. குருகுலத்தில் கிருஷ்ணருடன் படித்த குசேலர், தன் வறுமை தீர உதவி கேட்டுச் சென்றார். ஆனால், நண்பனைப் பார்த்ததும் உதவி கேட்க கூச்சப்பட்டார் என்பதை விட, கிருஷ்ண தரிசனமே போதுமென நினைத்து விட்டார். அவர் கொடுத்த ஒரு பிடி அவலுக்கு மாற்றாக அவர் வாழ்ந்த ஊருக்கே செல்வவளம் வந்து விட்டது. கிருஷ்ணரிடம் கவுரவம் பெற்றதோடு வளமான வாழ்வையும் பெற்றார்.மனிதர்கள் அமைதி, பொறுமை போன்ற நற்குணங்களை பின்பற்றினால் கவுரவமாக வாழலாம். இல்லாவிட்டால் விளைவு விபரீதமாகும் என்பதை துரோணர், குசேலர் வரலாறு உணர்த்துகிறது.