உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக் காட்டுவோம்! (29)

சொற்பொழிவாளரிடம் அன்பர் ஒருவர் கேட்டார், ''ஐயா... எனக்கொரு சந்தேகம். வயதான பெரியவர்களை பாராட்டும் போது, 'அவரை வாழ்த்த எனக்கு வயதில்லை. ஆகவே வணங்குகிறேன்' என்கின்றனர். ஆனால் 'நமசிவாய வாழ்க' என்றும் 'ஆறிரு தடந்தோள் வாழ்க' என்று சிவன், முருகனையும் வாழ்த்துகின்றனரே... இது எப்படி சரியாகும்?''சொற்பொழிவாளர் அற்புதமாக பதிலளித்தார், ''அதற்கான காரணம் வேறு. நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள்.'மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம்; கடவுளின் மக்கள்' என்று பாரதியார் பாடுகின்றார். உலகிலுள்ள அனைவரையும் தனித்தனியாக வாழ்த்த வேண்டும் என்பதே அருளாளர்களின் விருப்பம். இருந்தாலும் இயலாது என்பதால், உயிர்களின் வடிவமாக திகழும் இறைவனை வாழ்க என போற்றினால் உலக மக்கள் அனைவருக்கும் உரியதாகும் அல்லவா!என் மனைவி, குழந்தைகள் நலமாக வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை நீங்கி 'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' என்கிற உலகளாவிய நிலையில் பலருக்கும் உதவி செய்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை. 'தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந்தார்'என்று திருவள்ளுவரும்'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்வேறொன்றும் அறியேன் பராபரமே'என்று தாயுமானவரும், மனித வாழ்வின் நோக்கமே பிறரை வாழச் செய்து நாம் வாழ்வது தான் என விளக்கியுள்ளனர்.அலாஸ்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை விரிந்த அண்டம் முழுவதையும் ஒரே ஆகாயம் பாதுகாப்பது போல ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளமும் விசாலமாக வேண்டும்.மேலும், 'இமய மலையில் ஒருவன் இருமினால் குமரி வாழ்பவன் மருந்து கொண்டோடுவான்!' என்கிறார் பாரதிதாசன்.எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணி மற்றவர்களுக்கு இரங்கி உதவுபவர் உள்ளத்தை இறைவன் விரும்புகின்றான் என்கின்றனர் ஞானிகள்.இதையே வாரியார் சுவாமிகள் விளக்குகிறார்,'நான் ஒருவருக்கு கடிதம் எழுதி அதை நம் பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் சேர்த்தால் அது தலைமை தபால் நிலையத்திற்கு போகும். ஆனால் தலைமைத் தபால் நிலையத்தில் கடிதத்தை சேர்ப்பித்தால், அது நம் பகுதியிலுள்ள அஞ்சல் பெட்டிக்கு வராது அல்லவா! அது போல நாம் செய்யும் நற்பணிகளின் பலன் இறைவனைச் சென்றடையும்.இறைவனுக்கு நேரடியாகச் செய்யும் கோயில் வழிபாடு மக்களை வந்தடையாது. வழிபாட்டை விட பொதுநலப்பணியைத்தான் பெரிதும் விரும்புகின்றான்.கோயிலை 'படம் ஆடும் கோயில்' என்றும், பக்தர்களை 'நடமாடும் கோயில்' என்றும் குறிப்பிடுகிறார் திருமூலர்.அவர் பாடும் திருமந்திரப் பாடலை பார்ப்போமா?படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்நடமாடும் கோயில் நம்பர்க்கு அது ஆகாநடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே!'மக்கட் பணியே மகேசன் பணி' என்கிறது திருமந்திரம்.நாம் செய்யும் வழிபாடு நம்மைக் கடவுள் இருக்கும் இடத்தின் பாதி துாரமே அழைத்துச் செல்லும். நாம் கடைபிடிக்கும் நோன்பும் விரதமும் தெய்வத்தின் சன்னதியின் கதவு வரை இட்டுச் செல்லும். சக மனிதர்களுக்கு நாம் செய்யும் தன்னலமற்ற சேவையோ கடவுளின் அருகிலேயே அமர வைக்கும்.காஞ்சி மகாப்பெரியவர் தன் சிஷ்யர்களுடன் யாத்திரை சென்று கொண்டிருந்தார். வழியில் கிராமத்து மக்கள் கூட்டமாக அவரை வணங்க வந்தனர். அப்போது மதியவேளையில் வந்தவர்கள் பசியுடன் இருப்பதை அறிந்த சுவாமிகள் தன் உதவியாளரிடம் 'பழங்கள், தேங்காய் முதலியவற்றை இவர்களுக்கு கொடுத்து விடு. பசியாறட்டும்' என்றார். மனநிறைவுடன் மக்களும் பெற்றுக்கொண்டனர்.பயணம் தொடர்ந்தது. உதவியாளர் சுவாமிகளிடம், 'பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது. நிவேதனத்திற்கும் எதுவுமில்லை. எல்லாவற்றையும் அங்கேயே கொடுத்து விட்டோமே. என்ன செய்வது?' என்றார்.புன்முறுவல் பூத்தார் மகாபெரியவர். ' பூஜை தான் நிகழ்ந்து விட்டதே. ஏழைகள் பசியாறுவதை விட, இறைவன் விரும்புவது வேறு ஏதாவது இருக்கிறதா, என்ன?--- தொடரும்அலைபேசி: 98411 69590திருப்புகழ் மதிவண்ணன்