உள்ளூர் செய்திகள்

சிக்கலை தீர்க்கும் சத்குரு

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பக்தை பாலக்காட்டைச் சேர்ந்த பொன்னம்மா, கணவரை இழந்த இவள் மஹாபெரியவரின் தீவிர பக்தை. மடத்தில் தினமும் நடக்கும் சந்திரமவுலீஸ்வரர் பூஜைக்கு பூப்பறித்து வரும் பணியை மேற்கொண்டாள். ஒருசமயம் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் முகாமிட்டிருந்தார் பெரியவர். ஓரிக்கைக்கு சற்று தொலைவில் தாமரைக்குளம் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்ட பொன்னம்மா, ''சுவாமி... தாமரைக் குளத்தில் பூப்பறித்து வரட்டுமா'' எனக் கேட்டாள். ''உனக்கு நீச்சல் தெரியுமா?'' என பெரியவர் கேட்க தலையாட்டினாள். ''ஜாக்கிரதையா போயிட்டு வா'' என அனுப்பி வைத்தார். குளக்கரையில் நின்றிருந்த ஒரு நபர், ''அம்மா...பூ பறிப்பது கஷ்டம். நான் பறித்து தரட்டுமா'' எனக் கேட்டும் அவள் மறுத்து விட்டாள். நீருக்குள் இறங்கிய சற்று நேரத்திலேயே தாமரைக்கொடியில் அவளது கால்கள் சிக்கின. கரையில் நின்ற நபர் காப்பாற்ற துணிந்த போதும் வேண்டாம் என கையசைத்தாள். அவள் விடாமல் முயற்சிக்கவே தாமரைக்கொடியில் சிக்கிய கால்கள் விடுபட்டன. பூக்களைப் பறித்துக் கொண்டு மடத்திற்கு வந்தாள். அப்போது அங்கிருந்த செல்லம்மா என்ற பக்தை, 'பிறவி என்னும் கடலில் சிக்கிக் கொண்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பெரியவா தான் காத்தருள வேண்டும்' என்றாள். 'சம்சாரக் கடலில் சிக்கியவர்களும், தாமரைக் கொடியில் சிக்கியவர்களும் மீள்வது அவ்வளவு எளிதல்ல' என்றார் மஹாபெரியவர். குருவருளால் தான் தாமரைக் கொடியில் இருந்து தான் உயிர் தப்பினோம் என்பதை பொன்னம்மா உணர்ந்தாள். இதே போல மற்றொரு சம்பவமும் அவளது வாழ்வில் நடந்தது. பொன்னம்மா ஒருநாள் எருக்கம்பூ பறிக்க விரும்பினாள். தேடிச் சென்ற போது, எருக்கஞ்செடி வளர்ந்து உயரமாக நின்றிருந்தது. பறிக்க முடியாததால் அருகில் இருந்த மரத்தின் மீதேற அதன் கிளை முறிந்தது. எருக்கஞ்செடியின் மீது பொன்னம்மா விழ, அவளது கண்களில் எருக்கம்பால் பட்டது. தண்ணீரால் கழுவியும் எரிச்சல் போக வில்லை. கண்ணீர் வழிந்தபடி, பூஜைக்குரிய பூக்களை கொடுத்தாள். பூஜை முடிந்து தீர்த்தம் தரும் போது, 'என்ன கண்ணுக்குப் பாலாபிஷேகம் ஆச்சா?' என்று கேட்டார் பெரியவர். ஆச்சரியப்பட்டாள் பொன்னம்மா. 'மரம் முறிந்து கீழே விழுந்தாயே... உன்னால் தோட்டக்காரனுக்கு மரம் நஷ்டமாகி விட்டதே' என வேடிக்கையாக கேட்டார். கண் இமைக்காமல் பெரியவரையே பார்த்தாள். கண் எரிச்சலும், நீர் வடிவதும் நின்று போனது. குருவருள் இருந்தால் சூரியனைக் கண்ட பனியாக துன்பங்கள் மறையும்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com