உள்ளூர் செய்திகள்

சொல்லடி அபிராமி (23) - அம்பாளுக்குரிய தேவதைகள்

அடுத்து அபிராமி பட்டர்,“கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்மண்களிக்கும், பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலபெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே!என்ற பாடலைப் பாடினார். சொற்சுவையும் பொருட்சுவையும் பொங்கி வழியும் இந்தப் பாடலின் விளக்கம் இதுதான் “அன்னை அபிராமி கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் வசிப்பவள். அவளது பாடும் குரல் கேட்டு பண்களாகிய ராகதேவதைகள் மகிழ்கின்றனர். கச்சபி என்னும் தேவ வீணையைத் தன் திருமார்பில் சாய்த்துக் கொண்டு, தன் திருக்கரங்களால் மீட்டுகிறாள். அவளது திருமேனி இவ்வுலகம் பார்த்து வியக்கும் பச்சைவண்ணத்தில் மிளிர்கிறது. எம்பெருமாட்டியாகிய தேவி மதங்கர் குலத்தில் பிறந்த பேரழகியாவாள். அவளே ராஜமாதங்கீஸ்வரி எனப்படுகிறாள்.” இதையடுத்து,“அணங்கே! அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால்வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்பிணங்கேன் அறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே!”என்று பாடிய பட்டர் அதற்கும் பொருள் விளக்கம் தந்தார்.“அன்னை அபிராமி பேரழகு வாய்ந்தவள். அவளைச் சூழ்ந்து பற்பல பெண்கள் பரிவாரங்களாக நிற்கின்றனர். நான் அவர்களை ஒருபோதும் வணங்க மாட்டேன்; வாழ்த்த மாட்டேன். அம்பிகையின் பேரருள் ஒன்றையே லட்சியமாகக் கொண்ட என் நெஞ்சில், வஞ்சகத்தோடுச் சுற்றிவரும் வேறு எவரோடும் இணங்கி நட்பு கொள்ள மாட்டேன். எனது, உனது என்று சுயநலவாழ்க்கை வாழ்வோரிடமிருந்து விலகி வாழும் ஞானிகளோடு ஒருக்காலும் எவ்விதமான கருத்து வேறுபாடும் கொள்ளமாட்டேன். இவ்வாறெல்லாம் நான் இயங்கக் காரணம் என்னவென்றால், என்மேல் நீ வைத்த பெருங்கணைப் பேரளிதான்!” என்று கூறிய பட்டரின் முகத்தில் புன்னகையும், பெருமிதமும் தவழ்ந்தது. மன்னர் சரபோஜி, பட்டரை வணங்கி விட்டுப் பிறகு, “சபையோரே! உங்கள் ஐயங்களை இனி நீங்கள் பட்டர் பிரானிடம் கேட்கலாம்” என்றார்.அரசவைத் தலைமைப் புலவர் எழுந்தார். “அரசே பட்டர் பிரானைக் கேள்வி கேட்கும் தகுதி அடியேனுக்கு இல்லை. எனினும், சந்தேகம் நீங்க வேண்டி வினவுகிறேன். அனுமதி வழங்கி அருள்புரியுங்கள்” என்றார். அரசரும் தலையசைக்க புலவர் வினவியது:“பட்டர் பெருமானே! அன்னையின் பரிவாரங்கள் என்று நீங்கள் கூறியது யாரை என்று சற்றே விளக்குங்கள்.” என்றார். இதை ஏற்ற பட்டர் விளக்கமளித்தார்.“அன்பர்களே! நாடாளும் மன்னரைச் சுற்றியே இவ்வளவு பரிவாரங்கள் நிற்பர் எனில், அண்டசராசரத்தை ஆளும் தேவி பராசக்தியைச் சுற்றி எத்தனை பரிவாரங்கள் நிற்பர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் அம்பாளை, 'ஓம் மகா சது சஷ்டி கோடி யோகினி கண சேவிதாயை நமக' என்று போற்றுகிறது. 'மகா' என்ற சமஸ்கிருத சொல்லுக்கு 'ஒன்பது' என்று பொருள். 'சதுசஷ்டி கோடி' என்றால் அறுபத்து நான்கு கோடி. ஆக அதனை ஒன்பதால் பெருக்க 576 கோடி யோகினி சக்திகள் சதாசர்வகாலமும் அன்னையை துதிக்கின்றனர் என்பதாகும். ஆனால், உண்மையில் 'மகா' என்ற சொல்லிற்கு 'எண்ணிலடங்கா' என்றே பொருள் கொள்ள வேண்டும். அத்தகைய எண்ணிலடங்கா தேவிகளின் பிரதிநிதிகளாக விளங்கும் 125 சக்திகள் ஸ்ரீ சக்ரத்தில் பிறந்து, அதன் மத்தியில் வீற்றிருக்கும் மஹாதிரிபுர சுந்தரியைச் சுற்றி வீற்றிருக்கின்றனர். அவர்களின் நாமங்களைக் கூறுவேன். கேளுங்கள். அணிமாதி தேவதைகள் பத்து பேர். அவர்கள் எவரெனில், அணிமா சித்தி, லகிமா சித்தி, மகிமா சித்தி, ஈசித்வ சித்தி, விசித்வ சித்தி, ப்ரகாம்ய சித்தி, புத்தி சித்தி, இச்சா சித்தி, ப்ராப்தி சித்தி, சர்வகாம சித்தி ஆகியோர். மாத்ருகைகள் எட்டு பேர். அவர்கள் யாரெனில், ப்ராஹ்மி, மாஹேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாஹேந்திரி, சாமுண்டேஸ்வரி, மகாலட்சுமி ஆகியோர்.ப்ரகட யோகினிகள் பத்து பேர், அவர்கள் சர்வ சம்ஷோபிணி, சர்வ வித்ராவிணி, சர்வாகர்ஷிணி, சர்வ வசங்கரி, சர்வவோன் மாதினி, சர்வ மஹாங்குசை, சர்வ கேசரி, சர்வ பீஜா, சர்வ யோனி, சர்வ திரிகண்டா ஆகியோர்.குப்தயோகினி தேவதைகள் பதினாறு பேர். அவர்கள் காமாகர்ஷிணி, புத்தியாகர்ஷிணி அகங்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி, ஸ்பர் ஸாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி, ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி, ஸ்ம்ருத்யாகர்ஷிணி, நாமாகர்ஷிணி பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, சரீரா கர்ஷிணி ஆகியோர்.இப்படி குப்த தரயோகினி தேவதைகள் எட்டு, சம்ப்ரதாய யோகினிகள் பதினான்கு, குலோ தீர்ண யோகினி சக்திகள் பத்து பேர், நிகர்ப்ப யோகினி தேவதைகள் பத்து என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த ஆவரண தேவதைகள் யாவரும் அம்பாளின் ஆதிவித்யா நகரமான ஸ்ரீசக்ர யந்திரத்தில் அம்பாளைச் சுற்றி வீற்றிருக்கின்றனர். ஸ்ரீ யந்திர பூஜையில் இவர்கள் யாவரையும் வணங்குவது சம்பிரதாயம்,” என்று முடித்தார்.உடனே தலைமைப் புலவர், “ஆகா! இந்த தேவிகளின் பெயர்களைச் சொன்னாலும், கேட்டாலும் சகலபாவங்களும் தொலைந்து சர்வவல்லமை உண்டாகுமே! ஆயினும் அபிராமபட்டர் இந்த தேவிகளை வணங்க மாட்டேன் என்று சொல்வதன் உட்பொருள் விளங்கவில்லையே,” என்றார்.பட்டர் பொறுமையுடன் பதில் தந்தார். “அன்பர்களே! இந்த தேவிகள் யாவரும், அன்னையின் மாயா லீலையால் அவளிலிருந்தே பிரதிபலித்த பிம்பங்களே அன்றி வேறில்லை. தேவதைகளை வழிபடுவதைத் தவறு என்று நாம் கூறவில்லை. அவர்களை வழிபடுவதால் புண்ணிய பலன்கள் ஏற்படும். ஆனால் பிறவிப்பிணி தீராது. ஜனன மரண சுழற்சியிலிருந்து விடுபட வேண்டுமெனில், பிரம்ம ஞானத்தை அளிக்கும் தேவி ஒருத்தியால் மட்டுமே இயலும். எனவே அவளது பிரதிபிம்பங்களாகிய பரிவார தேவதைகளை வணங்குவதால் ஏதும் ஆகப்போவதில்லை. அஞ்ஞானமாகிய இருளிலிருந்து உயிர்களைக் காப்பாற்றி ஞானநிலையை வாழும் காலத்திலேயே அருளும் சக்தி. ஞானவித்யா ரூபிணியான அபிராமி ஒருத்திக்கே உண்டு. சூரியன் பிரகாசிக்கும் பகல்பொழுதில் கைவிளக்குக்கு அவசியம் இல்லையல்லவா? எனவேதான் பிற தேவதைகளை வணங்கேன் என்றேன். அன்னையை வணங்கினாலே அவளது பிரதிபலிப்புகளாகிய தேவதைகள் மகிழ்ந்து அருள்புரிவர்.” என்று முடித்தார் பட்டர்.அவரது விளக்கத்தில் முழுதிருப்தி அடைந்தவராய் அரண்மனைத் தலைமைப் புலவர் பட்டரை வணங்கினார். இதையடுத்து,“தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!என்று அன்பர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த முக்கியமான பாடலை தெள்ளத் தெளிவாகப் பாடிமுடித்தார் அபிராமபட்டர்.செல்வத்தை வழங்குவது, கல்வியைத் தருவது, என்றுமே தளர்வில்லாத மனத்தினை நல்குவது, வஞ்சமற்ற நெஞ்சினைக் கொடுப்பது, எது தெரியுமா? அபிராமி அன்னையின் மலர் சூடிய கூந்தலும், அவளது அருள் ததும்பும் விழியோரப் பார்வையும் தான். அதனைப் பெறுவோர் யாரெனில், அவளைச் சரணடைந்த அன்பர்களே! என்று பாடலின் உட்பொருளை விவரித்த பட்டர் இதற்கு விளக்கம் தந்தார்.- இன்னும் வருவாள்முனைவர் ஜெகநாத சுவாமி