உள்ளூர் செய்திகள்

உளியின்றி..

பிரபலமான கோயில் ஒன்றின் உற்ஸவர் சிலை செய்யும் பணி நடந்தது. பஞ்சலோக சிலை வார்க்கப்பட்டது. சூடு அடங்கும் முன்பே சிலையை வெளியே எடுத்ததால் அதில் பிசிறுகள் இருந்தன. அவற்றை நீக்க தலைமை சிற்பி முயன்ற போது அவரது உடம்பில் எரிச்சல் பரவியதோடு மயக்கம் அடைந்தார். சிறிது நேரத்தில் கண் விழித்த அவர், ''தெய்வ சான்னித்தியம் நிறைந்த இச்சிலையை தொட பயமாக இருக்கிறது. பிசிறுகளைப் போக்கும் சக்தி எனக்கு இல்லை'' என்றார். பிசிறுடன் உள்ள சிலையை கொண்டு திருவிழா நடத்தக் கூடாது என்பதால் அதை ஒரு அறையில் வைத்தனர். சில காலம் கழித்து கோயிலுக்கு காசியில் இருந்து வேத பண்டிதர் ஸ்ரீசாம்பையர் வந்தார். மூலவரைத் தரிசித்த பின் 'இங்கே உற்ஸவர் இல்லையா' எனக் கேட்டார். உற்ஸவர் சிலையைப் பற்றி அர்ச்சகர் அவரிடம் விவரித்தார். சிலையை பார்த்த பண்டிதர், '' நீங்கள் புண்ணியவான்கள். மூலவரிடம் உள்ள தெய்வசக்தி, உற்ஸவரிடமும் உள்ளது. இந்த சிலையை தியானிக்கலாமே தவிர உளியால் செதுக்க முடியாது. அதனால் ஆத்ம சக்தியால் துாய்மை செய்கிறேன்'' என்றார். சிலையைச் சுற்றி திரையிட்டு, அமர்ந்த பண்டிதர் மந்திரங்களை ராகத்துடன் சொல்லச் சொல்ல சிலையில் இருந்த பிசிறுகள் உதிர்ந்தன. முன்பை விட சிலை பளபளப்புடன் காட்சி அளித்தது. இச்சம்பவம் சென்னை கந்தகோட்டம் முருகன் கோயிலில் 17ம் நுாற்றாண்டில் நடந்தது.