உள்ளூர் செய்திகள்

விளக்கேற்ற வந்தவள்

முன்பு பெண் பார்க்கச் செல்லும் மணமகன் வீட்டார் பலவிதமாக பெண்ணை சோதிப்பர். எதற்காக என்றால் பெண்ணுக்கு குணம், வாழ்க்கை நடைமுறைகளை அவளது பெற்றோர் எந்தளவுக்கு கற்றுத் தந்துள்ளனர் என்பதை அவளின் செயல்பாட்டைக் கொண்டு முடிவு எடுப்பார்கள். இதன் ஒருபகுதியாக விளக்கேற்றச் சொல்வார்கள். அப்போது அந்த பெண் திரியை முறுக்கி நசுக்கினால் விளக்கை எளிதில் ஏற்ற முடியும். 'சொத சொத' என எண்ணெய் இருந்தால் திரி பற்றாது. தீக்குச்சி வீணாகும். இதன் மூலம் விளக்கு, அடுப்பு போன்றவற்றை எப்படி பற்ற வைக்க வேண்டும் என பெண்ணின் தாயார் சொல்லிக் கொடுத்த முறையை அறிய முடியும். திரியை நசுக்கும் போது எண்ணெய் கையில் ஒட்டுமே... அதை எப்படி துடைக்கிறாள் என்பது அடுத்த பரிசோதனை. சுவரில் எண்ணெய்யை தேய்த்தால் வீட்டை சுத்தமாக வைக்க மாட்டாள் எனப் பொருள். மாறாக தலையிலோ, ஆடையிலோ துடைத்தால் உடம்பை சுத்தமாக வைக்க மாட்டாள் எனப் பொருள். அம்மாவையோ அல்லது அருகில் நிற்பவரையோ உதவிக்காக அழைத்தால் பிறரின் உதவியை எதிர்பார்ப்பாள் எனக் கருதுவர். சரி... எண்ணெய்யை எப்படித் தான் துடைப்பாள்? எண்ணெய்யை விளக்கின் பக்கவாட்டு விளம்பில் தேய்த்தால் போதும். அந்த பெண்ணே புத்திசாலி, எதையும் சுத்தமாக வைப்பாள் என முடிவு செய்வர். சிறுவயது முதலே நற்பண்புகளை பழக வேண்டும்; வாழ்விற்கான அடிப்படை விஷயங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.