உள்ளூர் செய்திகள்

ஓட்டு எனக்கு இதயம் உங்களுக்கு!

தேர்தல் வந்து விட்டால், மக்கள் அரசியல்வாதிகளின் இதயக்கனிகளாகி விடுவார்கள். ''நீங்கள் 'எஜமானர். நான் உங்கள் வீட்டு வேலைக்காரன். என் மனதில் உங்களுக்கு மட்டுமே இடம்,'' என்று பணிந்தும் குழைந்தும் பேசுவார்கள். இது நடிப்பு. ஆனால், ஆன்மிகத்தில் இந்த நடிப்பு கிடையாது.ஒரு ஊரில் ஒரு பெருமாள் கோயில்... அங்கே உற்ஸவம் நடத்தினார்கள். மாலையில் சப்பர பவனி... எல்லாரும் பூ, பழம், தேங்காய் சகிதமாக பூஜை செய்தார்கள். ஒருவர் மட்டும் ஒன்றும் தரவில்லை.பெருமாள் அவரிடம், ''ஏனப்பா! ஒரு முழம் பூவாவது எனக்கு அர்ப்பணித்திருக்கலாமே,'' என்றார்.அதற்கு அந்த பக்தர், ''அதைத்தான் ஊரே உனக்கு அர்ப்பணித்ததே! உன்னிடம் இல்லாத ஒன்றை அர்ப்பணிக்கணும்! அதைத் தான் இப்போ கொடுக்க வந்திருக்கேன்,'' என்றார்.''என்னிடம் எது இல்லை என்று உனக்கு தெரியுமா?'' என்றார் பெருமாள். ''தெரியுமே! நீ ஆயர்பாடியிலே கண்ணனாய் இருந்த போது, உன் மனதை கோபிகைகளிடம் பறி கொடுத்து விட்டாய். அப்படியானால், உன்னிடம் மனம் தான் இல்லை. அதனால், என் மனதை உ<ன்னிடம் கொடுக்கிறேன்! இந்தா பிடி!'' என்றாராம் பக்தர்.பெருமாள் அசந்து போய் விட்டார்.வெறுமனே வாய்பேச்சோடு நிற்காமல், நிஜமாகவே மக்கள் மனசில் நிற்க அரசியல்வாதிகள் இனியாவது முயற்சிக்கட்டும்!