உள்ளூர் செய்திகள்

இன்று புதிதாய் பிறந்தோம்!

ஒவ்வொரு நொடியாக நகர்கிறது நேரம். துளித்துளியாக கரைகிறது வாழ்க்கை. இந்தப் பெரிய பிரபஞ்சத்தில், நம் வாழ்க்கை என்பது ஒரு சிறுதுளிதான். ஆனால் நம்மில் பலரும், காலம் காலமாக நிரந்தரமாக இங்கே இருப்போம் என்ற அறியாமையில் உழல்கின்றனர். இதிலிருந்து விடுபட ஞானம் வேண்டும். அதை யாரால் கொடுக்க முடியும்? அவர்தான் முக்தீஸ்வரர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்துாரில் உள்ளார். பசுமையான அழகிய கிராமம் ஆத்துார். இவ்வூருக்கு ஏன் இப்பெயர் வந்தது தெரியுமா. இத்தலத்தில் வீற்றிருக்கும் 'அறம் வளர்த்த நாயகி' அம்பாள் 32 வகையான அறங்கள் செழிக்க, இத்தலத்தில் ஈசனைக் குறித்து தவம் செய்தாள். அப்போது இங்கு அன்னக்கூடம் அமைத்து மக்களின் பசியை ஆற்றியதால், இவ்வூருக்கு 'பசி ஆற்றுார்' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி 'ஆத்துார்' என்றானது. இப்படி ஒரு உயிரின் பசியை ஆற்றுவதுதானே உண்மையான அறமாகும். ஊரை பார்த்துவிட்டோம். கோயிலின் வரலாறை இனி அறிந்து கொள்வோம். கண்டராதித்த சோழரின் ஆட்சி காலம் அது. ஒருநாள் அவர் காஞ்சியில் இருந்து திருக்கடல்மல்லைக்குப் (மாமல்லபுரம்) பயணித்தார். அப்போது இரவாகி விடவே இப்பகுதியில் குடில் அமைத்து தங்கினார். திடீரென நள்ளிரவில் வெண்கல மணியின் ஓசை கேட்டது. ஓசை வந்த இடத்தை நோக்கி சென்ற அவர், அங்கு புற்று ஒன்று இருப்பதைக் கண்டார். வீரர்களின் மூலம் புற்றை அகற்றியபோது, அழகிய சிவலிங்கத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியது. ஆனந்த கூத்தாடிய அவர் கோயிலைக் கட்டினார். சரி. வாங்க கோயிலுக்குள் நுழைவோம். கம்பீரமாக தோற்றம் அளிக்கும் கோபுரத்தை கடந்ததும், முக்தீஸ்வரர் சன்னதியை அடைந்து விடலாம். கருவறையில் தீபங்களின் வெளிச்சத்தில் முக்தீஸ்வரர் ஜொலிக்கிறார். அவரைப்பார்த்த அந்த நொடி, 'இன்று புதிதாய் பிறந்தோம்' என்ற உணர்வு தோன்றும். பின் தெற்கு நோக்கியிருக்கும் அம்பாளை தரிசனம் செய்யலாம். பரிகார தெய்வங்களான விநாயகர், முருகன், வாராஹி ஆகியோர் நேர்த்தியாக உள்ளனர். முன்பு அம்பாள் செய்த அறம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஆம்! அவள் ஆரம்பித்து வைத்த அன்னதானம் இன்றும் தொடர்கிறது. அதில் ஒரு கவளம் எடுத்து சாப்பிட்டாலே மனமும், வயிறும் நிறைந்துவிடும். அன்னதானத்திற்கு உதவினால் நமது வாழ்வும் முழுமையாகும். எப்படி செல்வது: செங்கல்பட்டு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 7 கி.மீ., விசேஷ நாள்: பவுர்ணமி பிரதோஷம், அமாவாசை, ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரிநேரம்: காலை 6:00 - 10:30 மணி; மாலை 4:30 - 7:30 மணிதொடர்புக்கு: 94438 80932அருகிலுள்ள தலம்: திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் 12 கி.மீ., நேரம்:காலை 8:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 93811 86389; 0442 - 746 4325, 2746 3514