ஜாம்பவானுக்கு ஒரு கோயில்
ஒருவர் ஒரு செயலில் சிறந்து விளங்குகிறார் என்றால் அவரை ஜாம்பவான் என அழைப்போம். அது ஏன் தெரியுமா இரண்டு யுகங்களில் வாழ்ந்து இரண்டு இதிகாசங்களிலும் முக்கிய பங்குவகித்தவர் அவர். அவரைப்போல உள்ளம் வாக்கு, உடலிலும் மகாபலம் பொருந்தியவர்களை ஜாம்பவான் என சொல்லுவர். ஜாம்பவானை வீழ்த்துவதற்கே கிருஷ்ண பகவானுக்கே இருபத்திஏழு நாட்கள் தேவைப்பட்டன. அப்படிப்பட்ட இவருக்கு ஒரு குகைக்கோயில் உள்ளது. வாருங்கள் அது பற்றி தெரிந்து கொள்வோம்.விஷ்ணு புராணத்தின் படி பிரம்மாவின் கொட்டாவியில் இருந்து தோன்றியவர் ஜாம்பவான். அசைக்க முடியாத வலிமையுடைவர் என பொருள் கொள்வர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது தேவர்களுடன் பெரும் பங்காற்றியவர். கூர்ம, வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவை தரிசித்து பல முறை வலம் வந்து வணங்கியவர். அதனால் தான் உயர்ந்த ஞான விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை இவர் தாமாகவே பெற்றிருந்தார். பாரதத்தின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் சுக்ரீவனுக்கு அமைச்சராக இருந்தவர். அனுமனின் சக்திகளை எல்லாம் அவருக்கு எடுத்து சொல்லி, அவர் இலங்கை சென்று சீதாதேவியை தேடுவதற்கு உற்சாகப்படுத்தியவர் இவர் தான்.மேலும், ராம ராவண யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவரின் ஆலோசனைப்படி சஞ்சீவி மலையை அனுமன் மூலம் கொண்டுவரச் செய்து அனைவரையும் உயிர்ப்பித்தார். மகாபாரதத்தில் கிருஷ்ணருடன் 27 நாட்கள் போரிட்டு அவரின் திருவுருவில் ராமதரிசனம் பெற்ற பின்னரே சண்டையிடுவதை கைவிட்டார். பின்னர் இவருடைய மகளான ஜாம்பவதியை திருமணம் செய்து வைத்து சியமந்தகமணியை கொடுத்தார். குஜராத் போர்பந்தர் அருகே ராணவ் என்ற இடத்தில் இக்குகை கோயில் உள்ளது. இக்குகையில் அவரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கத்துடன் 50க்கும் மேற்பட்ட சுயம்பு லிங்கங்கள் உள்ளன. இங்கு தான் ஜாம்பவான் வாழ்ந்தார் என்கிறது வரலாறு. இக்குகைக்கு வெளியே ராமபிரானுக்கும் குருஜி ராம்தாஸின் சமாதிக்கும் கோயில் உள்ளது. இவை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. குஜராத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கும் வருகின்றனர். யாராவது ஒருவருக்கு இக்கட்டான சூழலில் நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஜாம்பவானின் ஆசி உண்டு. நீங்கள் எடுத்து கொண்ட செயலில் ஜாம்பவானாக திகழ்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. எப்படி செல்வது: போர்பந்தரில் இருந்து 17 கி.மீ., விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி சிவராத்திரிநேரம் : காலை 8:00 - இரவு 8:00 மணிஅருகிலுள்ள தலம்: போர்பந்தர் சுதாமா கோயில் 17 கி.மீ., நேரம்: காலை 6:00 - இரவு 8:30 மணிதொடர்புக்கு: 079 -- 2397 7219, 079 - 2397 7229