உள்ளூர் செய்திகள்

கனவெல்லாம் பலிக்கும்! கண்முன்னே நடக்கும்!

மகிழ்ச்சியான வாழ்க்கை. நிறைவான மனம் என உங்களது வாழ்க்கை நகர்ந்தால் அதுவே பெரும்பாக்கியம். இப்படி நாம் மகிழ்ச்சியாக இருந்தாலே, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கிறதா உங்களது மனம். கவலைப் படாதீர்கள். திருவள்ளூர் நகர் காக்களூர் சிவ - விஷ்ணு கோயிலுக்கு வாருங்கள். இங்கே ஜலநாராயணர் உங்களுக்காக காத்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் சிவபெருமான், விஷ்ணுவை கொண்டு கோயில் உருவானது. பின் 2012ல் ஜலநாராயணர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. அந்தக் கோயில் ஆச்சரியங்கள், அதிசயங்கள் இருக்குமிடம். துளசி, பசுநெய் வாசனை கமகமக்கும் இடம். நமது ஹிந்து மதத்தில் உள்ள அனைத்து கடவுள்களும் காட்சி தரும் இடம். ஆம்! ஜலநாராயணரை தரிசனம் செய்வதற்கு முன் பலரையும் கடந்தாக வேண்டும். செல்வ விநாயகர், ஐயப்பன், ராமர், கிருஷ்ணர், ஸ்ரீநிவாசர், பத்மாவதி தாயார், புஷ்பவனேஸ்வரர், பூங்குழலி அம்பாள், சுப்பிரமணியர், ஷீரடி சாய்பாபா என அந்த வரிசை நீளும். இவர்களிடம் வணக்கத்தை சொன்னவுடன், ஜலநாராயணர் தரிசனம் உறுதியாகி விடும். நேபாள நாட்டில் காட்மாண்டுவில் உள்ளது போலவே இங்கும் ஜலநாராயணர் உள்ளார். நமது வாழ்வில் நடக்கும் மாயங்களுக்கு காரணமான அந்த மாயவன், ஒரு தண்ணீர் தொட்டியில் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருக்கிறார். நடன ரூபத்தில் கால்கள் இருக்கின்றன. வலது கையில் அட்சய பாத்திரமும், இடது கையில் சங்கும் ஏந்தியிருக்கிறார். அவரது பளிச்சென்ற புன்னகையை ஒரு முறை தரிசித்தாலே போதும். நமது வாழ்வும் குளுகுளுவென இருக்கும். நாம் எல்லோரும் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டிய கோயில். ஏகாதசி விரதம் இருந்து அவரை தரிசித்தால் உங்களின் கனவு பலிக்கும். எப்படி செல்வது: திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, ஸ்ரீராமநவமிதொடர்புக்கு: 94431 19861நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிஅருகிலுள்ள தலம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் 22 கி.மீ., நேரம்: காலை 8:00 - 12:00 மணி: மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94425 85638