ஏமாற்றி விட்டார்களா உங்களை! எரித்தாண்டவரிடம் முறையிடுங்கள்!
வாங்கிய பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி விட்டார்கள். காதலித்து கைவிட்டார்கள். எங்களுக்கு அநியாயம் செய்து விட்டார்கள் என்ற மனக்குமுறல் உங்களிடம் இருக்கிறதா! திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயிலில் உள்ள எரித்தாண்டவரிடம் முறையிடுங்கள்.தல வரலாறுகாசிப முனிவர் யாகம் நடத்த, சிவன் அவருக்கு காட்சி தந்தார். தனக்கு பூஜை செய்ய லிங்கம் வேண்டும் என்றார் காசிபர். அவரது வேண்டுதலை ஏற்று, சிவலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை காசிபர் இங்கு பிரதிஷ்டை செய்தார். காசிபரால் பூஜிக்கப் பட்டவர் என்பதால், 'காசிபநாதர்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் 'காசிநாதர்' என மருவியது.எரித்தாண்டவர் சன்னதிநீண்ட காலம் நோயால் வாடிய கேரள மன்னரிடம் அறிஞர்கள், ''தங்கக் குண்டுமணிகள் நிரம்பிய எள் பொம்மைக்குள் நோயை அடைத்து, தானமாக அந்தணருக்கு அளிக்க நோய் தீரும்,'' என்றனர். மன்னரும் அவ்வாறே செய்ய, அந்தணர் ஒருவருக்கு நோய் தொற்றியது. அப்போது உயிர் பெற்ற பொம்மை,''அந்தணரே! உம் காயத்ரி மந்திர பலனை எனக்கு கொடுத்தால் நோய் தீரும்'' என்றது. சம்மதித்த அந்தணருக்கு நோய் நீங்கியது.அதன் பின், அகத்தியரை சந்திக்க சென்ற அந்தணர், பொம்மையை பாதுகாப்பாக ஒரு மூடையில் வைத்து, நண்பரான காசிநாதர் கோயில் அர்ச்சகரிடம் கொடுத்தார். மீண்டும் வந்த போது, அர்ச்சகர் ஒரு துவரம்பருப்பு மூடையைக் கொடுத்து ஏமாற்ற முயன்றார். மன்னரிடம் அந்தணர் முறையிட, சிவன் சன்னதி புளிய மரத்தின் மீது சத்தியம் செய்ய முடிவானது. சம்மதித்த அர்ச்சகர், பொய் சத்தியம் செய்ததால் சிவனின் கோபத்திற்கு ஆளாகி, மரத்தோடு எரிந்தார். அது கண்ட அந்தணர் வருந்த, சிவனருளால் அர்ச்சகர் உயிர் பெற்றார். அந்தணருக்கு அருள்புரிந்த சிவன், 'எரித்தாட்கொண்டார்' என்னும் பெயரில் வீற்றிருக்கிறார்.சிவன் எதிரில் திருமால்தாமிரபரணி நதியின் வடகரையில் இக்கோயில் உள்ளது. அம்பாள் மரகதாம்பிகை, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் தொட்டில் கட்டியும், வளையல் அணிவித்தும் வழிபடுகின்றனர். கடல் போல அருளை வாரி வழங்குவதால், இவ்வூருக்கு 'அம்பாள் சமுத்திரம்' என்ற பெயர் இருந்து, பிற்காலத்தில் 'அம்பாசமுத்திரமாக' மருவியது. பொய் சத்தியம் செய்த அர்ச்சகரை எரித்த சிவன், உக்கிரமாக இருந்தார். அவரை சாந்தப்படுத்த எரித்தாண்டவர் சன்னதி எதிரில் பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.சிறப்பம்சம்இங்குள்ள நடராஜர், புனுகு சபாபதி எனப்படுகிறார். வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூசம் வரும் நாளில் இவருக்கு அபிஷேகம் செய்யப்படும். நவக்கிரக மண்டபத்தில் வடக்கு நோக்கி இருக்க வேண்டிய ராகு தெற்கு நோக்கி உள்ளார். தாமிரபரணியின் அழகை ரசிக்க இவ்வாறு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது நாகதோஷ பரிகார ஸ்தலமாகும். கன்னடியன் என்னும் பெயரில் அந்தணருக்கு இங்கு சிலை உள்ளது.தாமிரபரணியில் தேவி, சாலா, தீப, காசிப, கிருமிகர (புழுமாறி தீர்த்தம்), கோகில தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள், சங்கமித்திருப்பதாக ஐதீகம். சித்திரை மாதப்பிறப்பு, தைப்பூசம் மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று நாட்களில் சுவாமி, இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார். அமாவாசைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். ஐப்பசி உத்திரத்தன்று இரவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 173 பரிவார மூர்த்திகள் இங்குள்ளனர்.கோபுர திருப்பணிஇங்கு 91 அடி உயர ஐந்துநிலை கோபுரம் கட்டும் பணி நடக்கிறது. 2 கோடி செலவிலான கோபுரப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம்.எப்படி செல்வது: திருநெல்வேலி-பாபநாசம் சாலையில் 35 கி.மீ., துாரத்தில் அம்பாசமுத்திரம். பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் கோயில்.விசேஷ நாட்கள்: ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மகாசிவராத்திரிநேரம்: காலை 7:00 -11:00 மணி ; மாலை 4:30 - 8:00 மணிதொடர்புக்கு: 98423 31372, 04634 253 921அருகிலுள்ள தலம்: 8 கி.மீ.,ல் பாபநாசநாதர் கோயில்.