குழந்தைக்கு சோறூட்ட மருங்கூர் மலைக்கு வாங்க!
சிவனும், முருகனும் வேறில்லை என்பதை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்த தலம் நாகர்கோவில் அருகிலுள்ள மருங்கூர். இங்கு சுப்பிரமணியர் என்னும் பெயரில் முருகன் அருள்பாலிக்கிறார். இங்கு குழந்தைகளுக்கு சோறுாட்டும் வைபவம் பிரசித்தி பெற்றது. அகலிகை மீது கொண்ட தகாத ஆசையால், அவளது கணவர் கவுதமரிடம் சாபம் பெற்ற இந்திரன், விமோசனம் பெற சுசீந்திரம் வந்தான். அவனுக்கு சிவன் சாப விமோசனம் கொடுத்தார். இந்திரனைச் சுமந்து வந்ததால், தனக்கு ஏற்பட்ட பாவம் தீர, அவனது வாகனமான உச்சை சிரவஸு என்னும் குதிரை சிவனிடம் முறையிட்டது. முருகனை நினைத்து மருங்கூரில் தவமிருக்க சொன்னார். குதிரையும் அப்படியே செய்ய விமோசனம் கிடைத்தது. பின்னர் முருகன் அந்த மலையில் எழுந்தருள கோயில் கட்டப்பட்டது. குதிரை வழிபட்ட தலம் என்பதால், விழாக்காலத்தில் முருகன் குதிரை மீது பவனி வருவார்.மும்மூர்த்தி முருகன்: கருவறையில் சுப்பிரமணியர் அசுர மயில் மீது காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானை உடனிருக்கின்றனர். சன்னதிக்கு வெளியிலிருந்து இரண்டு தேவியருடன் சுவாமியை தரிசிக்க முடியாது. ஒரு பக்கம் நின்று ஒரு தேவியுடன், சுவாமியை தரிசிக்கும் வகையில் கருவறை அமைந்து உள்ளது. ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவின் மறுநாள் இத்தலத்தில் முருகன் மும்மூர்த்திகளின் அம்சம் கொண்டவராக அருள் பாலிக்கிறார். காலையில் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி) நடராஜராகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மாவாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருகிறார்.சிவமுருகன்: விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே, பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும்படி அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி 'சிவமுருகன்' என்றும் அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமமுறைப்படி பூஜை நடக்கிறது. சோறுாட்டும் வைபவம்: பிறந்த குழந்தைக்கு சோறு ஊட்டும் வைபவம் இங்கு சிறப்பு. புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையலை முருகனுக்கு படைக்கின்றனர். அதை பிரசாதமாகப் பெற்று குழந்தைக்கு ஊட்டுவர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மருங்கில் (நெருங்கி) வந்து அருள்பவர் என்பதால், இத்தலம் 'மருங்கூர்' என பெயர் பெற்றது. பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான், காசிலிங்கம் சன்னதிகள் உள்ளன. கோயில் எதிரில் முருக தீர்த்தம் உள்ளது. உற்சவர் சண்முகர் கந்தசஷ்டியன்று புறப்பாடாவார். மற்ற நாட்களில் சன்னதியில் தரிசிக்கலாம்.எப்படி செல்வது: நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் மருங்கூர் விலக்கில் திரும்பிச் செல்ல வேண்டும். துாரம் 10 கி.மீ.,விசேஷ நாட்கள்: தைப்பூசம், கந்தசஷ்டி பத்து நாள், சித்திரையில் திருக்கல்யாணம் ஐந்து நாள், திருக்கார்த்திகை, சஷ்டி மற்றும் கார்த்திகை நட்சத்திரங்களில் கிரிவலம். நேரம்: காலை 6:00 - 10:00 மணி; வெள்ளிக்கிழமையில் மதியம் 12:00 மணி; மாலை 5:00 - இரவு 7:30 மணி தொடர்புக்கு: 04652 -241 421அருகிலுள்ள தலம்: 10 கி.மீ.,ல் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில்