புத்தாண்டு தெய்வம்!
2018ம் ஆண்டின் கூட்டுத்தொகை 2. இந்த எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். அது மட்டுமல்ல! இந்த புதிய ஆண்டு சந்திரனுக்குரிய திங்கள்கிழமையிலும், பவுர்ணமி நாளிலும் பிறப்பது சிறப்பு. ஒளிமிக்க நாளில் பிறக்கும் இந்த புத்தாண்டு சிறக்க தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்லலாம். தல வரலாறு: அப்பூதியடிகள் என்ற சிவபக்தர், மனைவி அருள்மொழியுடன் திங்களூரில் வசித்தார். இவர்கள் திருநாவுக்கரசர் மீது அன்பு கொண்டவர்கள். மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என பெயர் வைத்தனர். நாவுக்கரசரின் பெயரில் பள்ளி, அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் அமைத்தனர். ஒருமுறை நாவுக்கரசர் இங்கு வந்தார். அவருக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தனர். மூத்த திருநாவுக்கரசு இலை பறிக்கச் சென்ற போது பாம்பு தீண்டி இறந்தான். திருநாவுக்கரசர் அவனை இங்குள்ள கைலாசநாதர் கோயிலுக்கு துாக்கிச் சென்று, சிவனுடன் வாதாடி பிழைக்கச் செய்தார்.முதல் சோறு: குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை 'அன்னப்பிரசானம்' என்பர். இந்தக் கோயிலில் இந்த வழிபாடு விசேஷம். அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும், திங்கள்கிழமைகளிலும், சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்டுவர். இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜல தேவதை, ஔஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஔஷதி (மருந்து) தேவதையின் அருளால் உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். இதனால் தான் குழந்தைகளுக்கு, அம்புலியை (நிலா) காட்டி சோறுாட்டும் வழக்கம் ஏற்பட்டது.சிறப்பம்சம்: நாவுக்கரசர், அப்பூதியடிகள், அருள்மொழி, மூத்த, இளைய திருநாவுக்கரசர்கள் இங்குள்ள சன்னதியில் உள்ளனர். குடும்ப ஒற்றுமை, குழந்தைகளுக்கு ஆயுள்விருத்தி ஏற்பட இவர்களை வணங்குகின்றனர்.எப்படி செல்வது: தஞ்சாவூர் - திருவையாறு (கும்பகோணம் வழி) சாலையில் 16 கி.மீ.,விசேஷ நாட்கள்: ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்நேரம்: காலை 6:௦௦ - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 93445 89244, 94435 86453அருகிலுள்ள தலம்: 16 கி.மீ.,ல் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்.