உள்ளூர் செய்திகள்

கோபாலபுரத்து கோமான்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதில் சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவில் சிறப்பிடம் கொண்டுள்ளது.தல வரலாறு: வேணு என்றால் 'மூங்கில்', 'புல்லாங்குழல்' என பொருள் உண்டு. இங்குள்ள வேணுகோபாலன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டார். அங்கு சுந்தரவதனப்பெருமாள் என்ற பெயரில் பூஜிக்கப்பட்டு வந்தார். கடந்த 1929ம் வருடம் சென்னை கோபாலபுரத்திற்கு இந்த விக்ரகத்தைக் கொண்டு வந்தனர். பிறகு வேணுகோபால சுவாமி என்ற திருநாமம் பெற்றார். ஒரு கூரைக்கொட்டகையின் கீழ் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த கோபாலனுக்கு பக்தகோடிகளின் கைங்கரியத்தால் படிப்படியாக அர்த்த மண்டபம் முதல் தங்கவிமானம் வரை சாத்தியமாகியுள்ளது. சிறப்பம்சம்: மூலவர் வேணுகோபாலர் நான்கு திருக்கரங்கள் கொண்டவர். இரு கரங்களில் புல்லாங்குழல் தாங்கி நிற்க, ஒரு கரத்தில் சங்கும், மற்றொன்றில் சக்கரமும் தாங்கி நிற்கிறார். விநாயகர்,முருகர், வள்ளி தெய்வானை, ராமர், அனுமார், காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் ஆகியோருடன், ஐயப்பனுக்கும், நவக்கிரகங்களுக்கும் தனி சன்னிதி உள்ளது. காஞ்சி பெரியவர் இங்கு வந்து, ஒரு அரச மரத்தடியில் சில நாட்கள் தங்கியிருந்தார். அந்த இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டதன் பேரில், அது பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலின் மேற்சுவரில் தசாவதாரம் உள்ளிட்ட புராண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளது.விழாக்கள்: இங்கு கந்தசஷ்டி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி ஆகிய பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. கிருஷ்ணஜெயந்தி விழா மிக உற்சாகமாக நடைபெறும். திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்படும். முப்பது நாட்கள் நடக்கும் விழாவில் வரும் 24ம் தேதியே கிருஷ்ண ஜெயந்தி பூஜை நடக்க உள்ளது. இந்நாளில், வேணுகோபால சுவாமிக்கு வெண்ணெய் காப்பிட்டு, நவநீத கிருஷ்ணராகக் காட்சி தருவார். 'நவநீதம்' என்றால் 'வெண்ணெய்' என பொருள். இந்நாட்களில் உபன்யாசம், பஜனை மற்றும் ராதா கல்யாணம் நடைபெறும். ராதா கிருஷ்ணர், ராஜா கிருஷ்ணர், தொட்டில் கிருஷ்ணர் என மூன்று நாட்கள் அலங்காரம் சிறப்பாக இருக்கும். ஆக.24 கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்படும், அன்று இரவு 10 மணி முதல், ஷோடச (16விதமான விசேஷ திரவியங்களைக் கொண்டு) அபிஷேகம் நடைபெறும்.கேட்டதைக் கொடுக்கும் கிருஷ்ணன் என்று எல்லோராலும் பெருமையாக போற்றப்படும், இந்த கோபாலபுரத்து கோமான் தன்னை நாடி, தேடி வருவோருக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறார்நேரம்: காலை 5:30 - 10:00, மாலை 5:00 - 8:00 மணி.அலைபேசி: 98404 29382.