செலவில்லாமல் பசுதானம்
UPDATED : மார் 29, 2016 | ADDED : மார் 29, 2016
ஏப்.10 வெண்ணெய் தாழி சேவைமன்னார்குடியில் ஓரிரவு தங்கி ராஜகோபால சுவாமியை வணங்கினால், ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணிய பலன் கிட்டும் என்பது ஐதீகம்.தலவரலாறு: கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்கள், கண்ணனின் லீலைகளைக் பார்க்கவும், அவரைத் தரிசிக்கவும் துவாரகை புறப்பட்டனர். வழியில் அவர்கள் நாரதரைச் சந்தித்தனர். 'அடடா! கிருஷ்ணாவதாரம் முடிந்து திருமால் வைகுண்டம் சென்று விட்டாரே! நீங்கள் தாமதமாக துவாரகை செல்கிறீர்களே!'' என்றதும்,' முனிவர்கள் மிகவும் வருந்தினர். அவர்களை ஆறுதல் சொன்ன நாரதர், 'நீங்கள் தெற்கேயுள்ள செண்பகாரண்ய ஷேத்திரம் சென்று (மன்னார்குடி) தவம் புரியுங்கள். உங்களுக்கு கிருஷ்ண தரிசனம் கிடைக்கும்,'' என்றார். முனிவர்களும் இங்கு வந்து தவத்தை துவக்கினர். திருமாலும் கண்ணனாக அவர்கள் முன் காட்சி தந்தார். அவரிடம் முனிவர்கள், 'கண்ணா அன்று துவாரகையில் செய்தருளிய லீலைகளை இங்கு நிகழ்த்திக் காட்ட வேண்டும்', என்றனர். அவர் 32 லீலைகளை நிகழ்த்திக் காட்டினார். அதில் முதல் திருக்கோலமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவப் பெருமாள் இந்தக் கோவிலில் மூலவராக அமர்ந்தார். 32வது லீலா வினோதமான ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலன் உற்சவராக சேவை சாதித்தார். ராஜாதி ராஜசோழன் கி.பி., 1018- 1054ல் இந்தக் கோவிலைக் கட்டிய போது ராஜாதி ராஜ விண்ணகரம் எனப் பெயர் பெற்றிருந்தது. பின் பலரும் திருப்பணி செய்துள்ளனர்.நல்ல குணத்திற்காக பிரார்த்தனை: மன்னார்குடி ராஜகோபால சுவாமியை தரிசிப்பவர்களுக்கு ஐந்து மகா கல்யாண குணங்களான ஐஸ்வர்யம், தைரியம், புகழ், ஞானம், வைராக்கியம் ஆகியவை கிடைக்கும். மகாபாரதத்தில் புலஸ்திய மகரிஷி, பீஷ்மரிடம் செண்பகராண்யம் எனப்போற்றப்படும் மன்னார்குடியின் மகிமையை கூறியுள்ளார். இத்தலத்தில் ஓரிரவு தங்கினால், ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் பலன் கிட்டும் என்பது ஐதீகம். தானங்களிலேயே மிகவும் உயர்ந்தது பசுதானம் தான். கண்ணன் மதுராபுரி சிறையில் பிறந்த போது, வசுதேவர் மானசீகமாக பல்லாயிரம் பசுக்களை தானம் செய்ததாக குறிப்பு இருக்கிறது.சிறப்பம்சம்: இந்தக் கோவிலில் ஒன்பது பிரகாரங்கள், 16 கோபுரங்கள், 24 சன்னிதிகள் உள்ளன. ஆறு சதுர ஏக்கர் பரப்பளவு கொண்டது. 154 அடி உயரமுடைய கிழக்கு ராஜகோபுரம் எதிரில் 54 அடி உயரமுடைய ஒற்றைக் கல்லாலான கருட ஸ்தம்பம் காட்சியளிக்கிறது. கோவில் அருகில் 23 ஏக்கர் பரப்பளவில் ஹரித்ராநதி எனப்படும் தெப்பக்குளம் உள்ளது. கிருஷ்ணனுடன் வாழ்ந்த கோபியரின் உடலில் பூசியிருந்த ஹரித்ரா (மஞ்சள்) இக்குளத்தில் படிந்ததால் ஹரித்ராநதி எனப்பெயர் பெற்றது. கண்ட பேரண்ட பட்சி வாகனமும், பஞ்சமுக ஹனுமார் வாகனமும் இங்கு இருப்பது சிறப்பாகும். இங்கு தாயார் செண்பகலட்சுமி, உற்சவர் செங்கமலத்தாயார் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். உற்சவர் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை. இதனால் இவளை 'படிதாண்டா பத்தினி' என்பர். பசு, கன்றுகளுடன் கோபாலன்: இங்கு ராஜகோபாலன் இடையர் கோலத்தில் பாலகனாக காட்சி அளிக்கிறார். வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் பொற்கோல் ஏந்தியுள்ளார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை கொலுசு ஆகிய அணிகலன்களை அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. இவருக்கு பிரதான நைவேத்தியம் பால். மதுரை கள்ளழகர் கோவில் போல், தினமும் மாலையில் தோசை நைவேத்தியமும் செய்யப்படுகிறது.திருவிழா: பங்குனியில் 18 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்கும். இதில் 16ம் நாளில் வெண்ணெய்தாழி உற்சவத்தைக் காண பக்தர்கள் அலை மோதுவர். ஏப்.10ல் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி 55 கி.மீ.,திறக்கும் நேரம்: காலை 5.00 - பகல் 12.00 மணி, மாலை 6.00- இரவு 9.00 மணி.தொலைபேசி: 04367-222 276