வளர்பிறை சூடியுள்ளார் வள வாழ்வைத் தருகிறார்
பித்தா பிறை சூடி என்று சுந்தரர் தேவாரம் சிவபெருமானைப் போற்றுகிறது. மூன்றாம் பிறையை தலையில் சூடிய அந்த ஈசன், திருமலீஸ்வரர் என்ற பெயருடன் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகிலுள்ள விஜயராகவபுரத்தில் கோவில் கொண்டிருக்கிறார். மனநிறைவும், செல்வவளமும் தரும் இவரை சிவராத்திரியன்று தரிசித்து வாருங்கள். தல வரலாறு: 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்தக் கோவில். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. ராஜேந்திரன் என்னும் பக்தர் இந்தக் கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அற்புதமான சிற்பங்கள் இருப்பதைக் கண்டு அவற்றை மறு பிரதிஷ்டை செய்தார். இப்போது கோவில் பொலிவுடன் திகழ்கிறது. மூலவர் திருமலீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக (தானாக தோன்றிய லிங்கம்) கருவறையில் காட்சிஅளிக்கிறார். கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபமும் அழகாக உள்ளன.மூன்றாம் பிறை: வானத்தில் மூன்றாம் பிறை பார்ப்பதை 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிடுவர். அமாவாசைக்கு அடுத்த இரண்டாம் அல்லது மூன்றாம் நாளில் இந்த பிறை வானில் தெரியும். இதனை பார்ப்போருக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். நீர்வளம்,செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியிலும் மூன்றாம் பிறை இருக்கிறது. பிறையுடன் கூடிய சிவலிங்கத்தை தரிசிப்பது மிகவும் அரிது. பெயர் விளக்கம்: இங்குள்ள சிவனுக்கு திருமலீஸ்வரர் என்ற பெயர் வரவும் ஒரு காரணம் இருக்கிறது. 'மலி+ஈஸ்வரர் என்பதையே 'மலீஸ்வரர்' என்கிறார்கள். 'மலிதல்' என்ற சொல்லுக்கு நிறைதல் அல்லது பெருகுதல் என்று பொருள். இந்த சிவன் தன்னை நாடி வருவோருக்கு மன நிறைவான வாழ்வையும், செல்வப் பெருக்கையும் அருள்பவர் என்பதால் இப்பெயரால் வழங்கப்படுகிறார். கடன்தொல்லை அகன்று இழந்ததைப் பெற இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கி வரலாம். இரண்டு தலவிருட்சம்: சுவாமிக்கு வடபுறத்தில் திரிபுரசுந்தரியம்மன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். இவள் தனது மேல் இரு கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியிருக்கிறாள். கீழ் இரு கைகளில் அபயம், வரத முத்திரை காட்டி ஞானத்தை அருள்பவளாக இருக்கிறாள்.விநாயகர்,முருகன், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஆகியோரும் பிரகாரத்தில் அருள்புரிகின்றனர். வற்றாத ஊற்று நீரைக் கொண்ட கிணறு தீர்த்தமாக விளங்குகிறது. மகிழமரம்,வன்னிமரம் ஆகியவை தல விருட்சங்களாக உள்ளன. வன்னிமர தரிசனம் வெற்றியை தருவதாகும். நவக்கிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன் காட்சியளிக்கின்றன. மகாசிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகம் சிறப்பாக நடக்கிறது. இருப்பிடம்: திருத்தணியில் இருந்து நகரி 15 கி.மீ., நகரி- பள்ளிப்பட்டு சாலையில் கொளத்தூர் 18 கி.மீ., கொளத்தூரில் இருந்து பிரியும் சாலையில் விஜயராகவபுரம் 1.5 கி.மீ. அலைபேசி: 94453 50276.