திருப்பணி செய்தால் திருப்பம் நடக்குமுங்க...
தேவலோக இந்திரனை போல வாழணுமா வாங்க கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் தலத்திற்கு முன்னொரு காலத்தில் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த விருத்திராசுரனுடன் போரிட்டு அவனை கொன்றதால் இந்திரனும் அவனது ஐராவதமும் தனது சக்திகளை இழந்தனர். அதனால் அவர்களை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதை கண்ட குலக்குருவான வியாழபகவான் ''ஒரு மண்டலம் சுயம்புவாகிய சிவலிங்கத்தை பூஜை செய்தால் இத்தோஷம் நீங்கும் மீண்டும் இந்திரபதவி வகிக்கலாம்'' என சொன்னார். அதன்படியே இங்குள்ள அகத்திய நதிக்கரையில் அமைந்த லிங்கத்தை அவர்கள் பூஜித்து நற்கதி பெற்றனர். அதனால் இவர் ஐராவதேஸ்வரர்,அழகேஸ்வரர், வெள்ளை யானை விடங்கர் என்ற பெயர் உண்டானது. அம்பாளின் திருநாமம் அகிலாண்டநாயகி, காமாட்சியம்பாள். தனிச் சன்னதியில் அமையப்பெற்ற யானை முகத்துடன் காணப்படும் சிவலிங்கத்தை இன்றும் தரிசிக்கலாம். அதனால் தான் இவ்வூருக்கு அத்திமுகம் என பெயர் வந்தது.இக்கோயிலில் கையில் ஜபமாலையுடன் இருக்கும் விநாயகரை தரிசிப்பது அவசியம்.ஐராவதத்தின் மீது அமர்ந்துள்ள இந்திரன், வள்ளி தேவசேனாவுடன் முருகன், துர்கை, தட்சிணாமூர்த்தி, பிரம்மா சன்னதிகள் இங்கு உள்ளன. சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றது. பத்தடி பள்ளத்தில் அமைந்த இக்கோயிலை மன்னர்கள் பலர் திருப்பணி செய்துள்ளனர். பஞ்ச லிங்கத்திற்கென தனிமண்டபத்தில் அமையப்பெற்ற சன்னதியில் திங்கள்கிழமை, அமாவாசை, பவுர்ணமி அன்று சிவபூஜை செய்தால் இந்திரனை போல வாழ்வர். தற்போது திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த யாராவது முன் வருவார்களா என எதிர்பார்த்து காத்து இருக்கிறது இக்கோயில்.எப்படி செல்வது: ஓசூரில் இருந்து 15 கி.மீ.,விசேஷ நாள்: அமாவாசை, பவுர்ணமிநேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 97866 43137அருகிலுள்ள தலம்: நரசப்புரம் நரசிம்மர் கோயில் 7 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 7:00 மணிதொடர்புக்கு: 94864 67520