உள்ளூர் செய்திகள்

கேதவரம் நரசிம்மர்

அடர்ந்த காடும், மலையும் சூழ்ந்த பகுதியைக் கடந்து தரிசிக்கும் நரசிம்மர் குண்டூர் மாவட்டம் கேதவரத்தில் அருள்பாலிக்கிறார்.தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட கேதவர்மா என்னும் மன்னரின் பெயரால் இந்த தலம் கேதவரம் என அழைக்கப்படுகிறது. இவரது பக்கத்து நாட்டை ஆட்சி செய்த யாதவ மன்னரின் கனவில், நரசிம்மர் தோன்றி கேதவரம் மலையில் தான் சுயம்பு மூர்த்தியாக இருப்பதை தெரிவித்தார். இத்தகவலை யாதவ மன்னர், கேதவர்மாவிடம் தெரிவிக்க இருவரும் மலையில் இருந்த மூர்த்தியை தரிசித்தனர். அதன்பின் கோவில் கட்டப்பட்டது. மலை அடிவாரத்திலும் லட்சுமி நரசிம்மருக்கு கோவில் உள்ளது. சிறப்பம்சம்: காட்டாரம், கேதாரம் என்ற புராணப்பெயர்கள் கொண்ட இப்பகுதியில் கிருஷ்ணா நதி ஓடுகிறது. அடிக்கடி வெள்ளப்பெருக்கு உண்டானதால் ஊர் அழிந்து விட்டது. இப்போது வயலும், காடுமாக காட்சியளிக்கிறது. மலைக்கோவிலுக்குச் செல்ல 600 படிகள் ஏற வேண்டும். சுயம்பு நரசிம்மரின் உருவம் ஒரு பாறையில் தெளிவில்லாமல் இருக்கிறது. தாயாரை 'செஞ்சு லட்சுமி' என்கின்றனர். வைரக்குளம்: இங்கு ஒரு குளம் வெட்டிய போது பணியாளரின் காலில் பாறை இடித்து ரத்தம் வழிந்தது. அந்த பாறையைச் சோதித்த போது, அது வைரப்பாறை என்பது தெரிய வந்தது. அதை மேலும் தோண்டிய போது அதனடியில் சிலைகள் இருந்தன. இதனால் இந்த நரசிம்மர், 'வஜ்ராலயர்' என அழைக்கப்படுகிறார். வஜ்ரம் என்றால் 'வைரம்'.திறக்கும் நேரம்: காலை 7.00- மாலை 5.00 மணி.அடர்ந்த காட்டில் கோவில் இருப்பதால் அடிவாரக்கோவில் மட்டுமே திறக்கப்படுகிறது. இதற்காக கோவில் அருகில் ஒரு குடும்பம் தங்கியுள்ளது.இருப்பிடம்: குண்டூர்- மெச்சர்லா சாலையில் 55 கி.மீ., தூரத்தில் பெலம் கொண்டா. இங்கிருந்து 25 கி.மீ., தூரத்தில் கேதவரம். செல்லும் வழியில் நீரோடைகளைக் கடக்க வேண்டும். பெலம் கொண்டாவில் இருந்து கார்களில் மட்டுமே செல்லலாம்.