உள்ளூர் செய்திகள்

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே

நமது வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் பழகியிருப்போம். பல்தேய்ப்பது, குளிப்பது சாப்பிடுவது, படிப்பது என பல விஷயங்களை விதவிதமான நபர்களின் மூலம் அறிந்திருப்போம். அப்பா, அம்மா பள்ளிக்கூட ஆசிரியர் நண்பர் என யார் வேண்டுமானாலும் அந்த ஆசிரியராக இருக்கலாம். இப்படி பல விஷயங்களை கற்பதைப்போல் வாழ்க்கை என்பது என்ன என்பதையும் அறிய வேண்டும் அல்லவா. அதை யார் நமக்கு சொல்லித்தருவார். அவர்தான் குரு. அவர் எங்கே இருக்கிறார் திருவண்ணாமலை செங்கம் சாலையில் தட்சிணாமூர்த்தியாக உங்களுக்காக காத்திருக்கிறார். கிரிவலம் செல்லும் பாதையில் சிறிய கோயிலில், சின்னஞ்சிறு அகல்விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கிறார் தட்சிணாமூர்த்தி. அவரைக் கண்டதும் ஞானக்கீற்று நமக்குள் மின்னலாய் ஊடுருவும். அது சரி. ஞானம் என்றால் என்ன. இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். அதுவும் அறிவுதானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் ஞானம் என்பது அதைத்தாண்டியது. ஆம். நாம் எங்கிருந்து வந்தோம். இறப்பிற்கு பின் நாம் எங்கே செல்வோம் என்ற கேள்விகளுக்கு விடை தெரிவதுதான் ஞானம். அந்த ஞானத்தையும் இவரால் வழங்க முடியும். இதை வைத்து நாம் என்ன செய்வது என்ற கேள்வி மனதில் எழக்கூடும். உண்மையில் இந்த ஞானத்தால் வாழ்க்கை வளமாகும். மனம் தெளிவாகும். அமைதியும், பொறுமையும்தான் ஞானத்தின் முதல்படி. இந்த இரண்டை கைக்கொண்டால் பேச்சின் வேகம் குறைந்துவிடும். எதைப் பற்றியும் நிதானமாக யோசிப்பீர்கள். இத்தலத்திற்கு வந்தால் ஞானம் பொங்குவதை உணர முடியும். மொத்தத்தில் உங்களையே உங்களால் உணர முடியும். வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களும் கிடைக்கும். எப்படி செல்வது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., விசேஷ நாள்: வியாழன்தொடர்புக்கு: 04175 - 252 438; 254 425நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:00 மணிஅருகிலுள்ள தலம்: திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் கோயில்நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94875 83557, 04175 - 237 567