கோடி புண்ணியம் சேர...
உலகில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான வாழ்க்கை அமைகிறது. சிலருக்கு வெற்றித் தேடி வருகிறது. பலருக்கோ என்ன உழைத்தாலும், அதற்குரிய பலன் கிடைப்பதில்லை. திறமை இருந்தும் முன்னேற முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்? பிரம்மஹத்தி தோஷம். முற்பிறவியில் கொடுமையான பாவம் செய்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும். இதில் இருந்து விடுபட வேண்டுமா? ராமேஸ்வரம் ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள். ராவணனை வதம் செய்து சீதாதேவியை மீட்டு வந்தார் ராமபிரான். வரும் வழியில் ராமேஸ்வரத்தில் தங்கி சிவபூஜை செய்து பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக்கொண்டார். குறிப்பாக தனது சடைமுடியில் தோய்ந்திருந்த அரக்கர்களின் ரத்தத் துளிகளை சுத்தம் செய்து நீராடிய நீர்த்தடாகமே ஜடாமகுட தீர்த்தம். இதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. வியாசரின் மகன் சுகர். இவர் எத்தனையோ யாகம், வேதமந்திரங்களை பாராயணம் செய்தும் தவயோக ஞான சித்தியை அடைய முடியாமல் தவித்தார். கவலையுடன் வியாசரிடம் சென்றதற்கு, அவர் ராஜரிஷியாகிய ஜனகரிடம் அனுப்பினார். அவர், 'ராமேஸ்வரத்தில் ராமபிரானால் உருவாக்கப்பட்ட, ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடினால் விருப்பம் நிறைவேறும்' என உபதேசித்தார். அதன்படி இங்கு வந்தவர் ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி, தியான லிங்கமூர்த்தியாக திகழ்ந்த ராமநாத சுவாமியை வழிபட்டு ஞானியானார். இவரைப்போல் துர்வாசர், பிருகு மகரிஷியும் இங்கு நீராடி யோக சக்திகளைப் பெற்றுள்ளனர். இப்படி தவநெறியில் நின்ற ரிஷிகளால் உருவாக்கி பூஜிக்கப்பட்ட ராமநாத சுவாமியே, இக்கோயிலில் தியானலிங்க மூர்த்தியாக உள்ளார். இத்தீர்த்தத்தில் நீராடி இவரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். கோடி புண்ணியம் சேரும். மகாமகத்தன்று தீர்த்தமாடினால், கும்பகோணத்தில் 12 மகாமகங்களில் தீர்த்தமாடிய பலன் கிடைக்கும். சித்தர்களும், தேவதைகளும் உருவமின்றி உலாவரும் இங்கு அன்னதானம் செய்வது சிறப்பு. குழப்பமான மனநிலையில் உள்ளவர்கள் இங்கு விரதம் இருந்து, தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதை பெறலாம். ராமேஸ்வர தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை தரிசித்த பிறகு, இங்கு வருவது சிறப்பு. எப்படி செல்வது: ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 6 கி.மீ.,விசேஷ நாள்: மகா சிவராத்திரி, மாசி மகம்நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி தொடர்புக்கு: 04573 - 221 223, 221 241அருகிலுள்ள தலம்: ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் 6 கி.மீ., நேரம்: அதிகாலை 4:00 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணி