பனைமரத்தடி முருகன்!
சென்னை அருகிலுள்ள புகழ் மிக்க முருகன் தலம் திருப்போரூர். இங்குள்ள முருகன் சிலை, பனைமரத்தடியில் கிடைக்கப் பெற்றதாகும். தல வரலாறு: முருகப்பெருமான் அசுரர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்துாரில்கடலில் சூரபத்மனுடன் போரிட்டு நிலையற்றது என்னும் மாயாசக்தியை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து, பாவ புண்ணியம் என்னும் கர்மவினையை அழித்தார். கடைசியாக திருப்போரூரில் வானத்தில் நின்று, தாரகாசுரனுடன் போரிட்டு ஆணவத்தை அடக்கினார். இத்தலத்தில், 'கந்தசுவாமி' என்னும் பெயரில் வீற்றிருந்து அருள்கிறார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர் இங்கு தங்கி முருகனை வழிபட்டார். தாரகாசுரனுடன போரிட்ட தலம் என்பதால் 'போரூர்' என பெயர் வந்தது. தாருகாபுரி, சமராபுரி என்றும் பெயருண்டு. கந்தசஷ்டி கவசத்தில் உள்ள 'சமராபுரி வாழ் சண்முகத்தரசே' என்னும் பாடல் வரி இத்தலத்தை குறிப்பதாகும். பனைமரத்தடி முருகன்: இந்தக் கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதைந்து கிடந்தது. முருகன் சிலை ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையைச் சேர்ந்த சிதம்பர சுவாமியின் கனவில், தோன்றிய முருகன், மண்ணில் புதையுண்டதை தெரிவித்தார். சிதம்பர சுவாமி சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். முருகன் மீது 726 பாடல்கள் பாடினார். வைகாசி விசாக நாளில், சிதம்பரம் சுவாமியின் குருபூஜை நடத்தப்படும். அப்போது முருகன் எதிரே, சிதம்பர சுவாமியை எழுந்தருளச் செய்து, சுவாமியுடன் ஐக்கியமாவது போல பாவனை செய்து வழிபடுவர். யந்திர முருகன்: மூலவர் முருகன் சுயம்பு மூர்த்தியாக இருப்பதால், பூஜை நடத்த ஸ்ரீசக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆமை பீடத்தின் மேலுள்ள இதில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்த பின், ஸ்ரீசக்ரத்திற்கு பூஜை செய்யப்படும். செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷம் நீங்க பக்தர்கள் ஸ்ரீசக்ரத்திற்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். வாய் மீது கை வைத்துள்ள சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலையும், கையில் வில்லேந்தியபடி மயில் மீது காலை வைத்த சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்குள்ளன.அபிஷேகம் இல்லை: கோயிலுக்கு அருகிலுள்ள குன்று ஒன்றில், கைலாசநாதர் என்னும் பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். பாலாம்பிகை என்னும் அம்மன் சன்னதியும் இங்குள்ளது. மலையில் அப்பன் சிவனும், அடிவாரத்தில் மகன் முருகனுமாக அமைந்த தலம் இது. சிதம்பர சுவாமியின் காலத்தில் முருகன் சிலை மட்டும் இருந்தது. பிற்காலத்தில் வள்ளி, தெய்வானையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யாமல் வாசனை திரவியமான புனுகு சாத்துகின்றனர்.பனை பாத்திரம்: பூமிக்கடியில் முருகன் சிலையை கண்டெடுத்த போது, பனைமரத்தில் செய்த பாத்திரத்தால் சிலை மூடப்பட்டிருந்தது. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமான இது, தரிசிப்பவருக்கு வளத்தை தருவதாக ஐதீகம். நைவேத்தியம் செய்யும் அரிசி இதில் வைக்கப்பட்டுள்ளது.அதிரச அம்பிகை: பிரகாரத்தில் வான்மீக நாதர், புண்ணியகாரணி அம்மன் சன்னதி உள்ளது. பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால், அம்மனுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. கேதார கவுரி நோன்பின் போது, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுமங்கலி பாக்கியம் வேண்டி, பெண்கள் அதிரசம் படைத்து வழிபடுவர். எப்படி செல்வது: சென்னை - மாமல்லபுரம் சாலையில் 45 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ., விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்நேரம்: காலை 6:00 - 12:30 மணி ; மதியம் 3:30 - 9:00 மணிதொடர்புக்கு: 044 - 2744 6226அருகிலுள்ள தலம்: 21 கி.மீ.,ல் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்