ஆயிரம் பசு தான புண்ணியம் கடலூர் கோபாலனை வணங்குங்க!
கடலூர் புதுப்பாளையத்தில் ராஜகோபால சுவாமி என்ற பெயரில் கிருஷ்ணர் கோவில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். தல வரலாறு: கோகுலத்தில் கோவர்த்தனகிரி என்ற மலை இருந்தது. மழை வளம் வேண்டி இந்த மலைக்கு அவ்வூர் யாதவர்கள் பூஜை செய்ய ஏற்பாடு செய்தனர். ஒருமுறை கிருஷ்ணர் தலைமையில் பூஜை ஏற்பாடு நடந்தது. இதையறிந்த இந்திரன், மழைக்கு அதிபதியான தன்னை வணங்காமல், மலைக்கு பூஜை நடத்தும் மக்கள் மீது கோபம் கொண்டு பெருமழை பெய்யச் செய்தான். செய்வதறியாத மக்களும், அங்குள்ள பசுக்களும் கிருஷ்ணரைத் தஞ்சமடைந்தனர். கிருஷ்ணர் கோவர்த்தனகிரியை தன் ஒரு விரலில் எடுத்து குடை போல பிடித்து, யாதவர்களையும், பசுக்களையும் அதன் அடியில் நிற்கச் செய்தார். இதன் பின் இந்திரன் தன் தவறை உணர்ந்து கிருஷ்ணரைச் சரணடைந்தான். தானே முன்னின்று கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகமும் நடத்தினான். கோபாலனான அவருக்கு 'ராஜகோபாலன்' என்று பெயர் சூட்டினான். இந்த வரலாற்றின் அடிப்படையில் ராஜகோபாலசுவாமிக்கு கோவில் எழுப்பப்பட்டது. ஆயிரம் பசுதானம்: இத்தலத்தில் ஒருமுறை வந்து தரிசனம் செய்தாலோ அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்கள் தானம் செய்த புண்ணிய பலனும், ஐஸ்வரியம், தைரியம், புகழ், கல்வி அறிவு, மன உறுதி ஆகியவையும் கிடைக்கும். தாயார் செங்கமலவல்லி என்னும் பெயருடன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். ராமதூதர் ஆஞ்சநேயருக்கும் சன்னிதி உள்ளது. சனிக்கிழமை மற்றும் அமாவாசையன்று இவருக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பிரகாரத்தில் ஆழ்வார்கள், ராமானுஜர், ஆண்டாள், ராமர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. தினமும் அலங்காரம்: புரட்டாசி மாதத்தில் ராஜகோபாலர், தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு வேண்டிய நேர்த்திக்கடனை இங்கு செலுத்தும் வழக்கம் உள்ளது.திருவிழா: கிருஷ்ணஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம், பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, ஆடிப்பூரம், புரட்டாசி, மார்கழியில் சிறப்பு பூஜை.இருப்பிடம்: கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ., நேரம்: காலை 7:00 - பகல் 12:00, மாலை 5:00 - இரவு 9:00 மணி. அலை/தொலைபேசி: 94432 03257, 04142 - 295 115.