சிவனுக்கு துளசி அர்ச்சனை
கோயில்களில் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை நடப்பது வழக்கம். ஆனால் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கோயிலில் சிவபெருமானுக்கு துளசி அர்ச்சனை நடக்கிறது தெரியுமா... ஏன் என்பதை அறிய இக்கோயிலுக்கு வாருங்கள். மற்றொரு சிறப்பாக பைரவர் இரு நாய்களுடன் காட்சி தருகிறார். ஒருமுறை தியானத்தில் இருந்த சிவன் மீது அம்பு தொடுத்தான் மன்மதன். தியானம் கலைந்ததால் நெற்றிக்கண்ணை திறந்தார் சிவன். அவரது உக்கிரத்தை உலகம் தாங்காது என்பதால் பிரம்மா அதை ஒன்று திரட்டி கடலுக்குள் புகுத்தினார். அதில் இருந்து ஜலந்திரன் என்னும் அசுரன் தோன்றி தேவர்களுக்கு இடையூறு செய்தான். தங்களைக் காப்பாற்றும்படி திருமாலைச் சரணடைந்தனர் தேவர்கள். ஜலந்திரனின் மனைவி பிருந்தையை (துளசி) அழித்தால் தான் அசுரனைக் கொல்ல முடியும் என திருமால் உணர்ந்தார். ஜலந்திரன் போல உருமாறி வந்திருப்பவர் திருமால் என அறிந்த பிருந்தை தீயில் புகுந்தாள். மனைவி இறந்ததும் ஜலந்திரன் பலவீனம் அடைந்தான்.இதை வாய்ப்பாக கருதிய சிவன், பூமியில் வட்டம் ஒன்றை வரைந்து அதை துாக்குமாறு கூறினார். ஜலந்திரன் அந்த வட்டத்தை துாக்க முயன்ற போது, அது சக்கராயுதமாக மாறி அவனைக் கொன்றது. இதற்கிடையில் பிருந்தையின் சாம்பலில் திருமால் ஐக்கியமானார். இதனால் மகாலட்சுமி வருந்தவே, சிவத்தலமான திருப்பாச்சேத்தியில் வழிபட பிரச்னை தீரும் என்றாள் பார்வதி. அதை ஏற்று அங்கு வந்த மகாலட்சுமி மீண்டும் திருமாலுடன் இணைந்தாள். பிருந்தையின் சாம்பலில் இருந்து துளசிச்செடி தோன்றியது. அதன் இலைகளால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தார் திருமால். இதனால் இங்கு சிவனுக்கு துளசி அர்ச்சனை நடக்கிறது. சுவாமியின் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர். அம்மன் மருநோக்கும் பூங்குழலி. நளச்சக்கரவர்த்தி கட்டிய இக்கோயிலை தரிசித்தால் செல்வம் பெருகும். பிரிந்த தம்பதியர் சேருவர். கிரக தோஷம் விலகும். இங்கு கும்பாபிேஷகம் நடந்து பல ஆண்டுகளாகி விட்டன. தமிழக அரசு மனசு வைக்குமா?. எப்படி செல்வது : மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 28 கி.மீ.,விசேஷ நாள்: மார்கழி திருவாதிரை, சிவராத்திரி சோம வாரம், தேய்பிறை அஷ்டமி நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 96558 46134அருகிலுள்ள தலம்: திருப்புவனம் திருப்பூவனநாதர் கோயில் 10 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 93676 58887