ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!!
* கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறு யாரும் நமக்குத் துணையில்லை. நாம் அனைவரும் ஒரே குலம். இதில் ஒருவருக்கு ஒருவர் உயர்வோ, தாழ்வோ கிடையாது. * செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலைஆனவர். நிலை இல்லாத பணத்தை தேடும் மனிதனுக்கு கடவுளிடம் நாட்டம் சிறிதும் இருக்காது. * சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகத்தில் இருப்பதாக எண்ண வேண்டாம். இன்பமும், துன்பமும் அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.* கடவுளை நோக்கி மனதைச் செலுத்துவதில் துன்பத்தின் பங்கு அதிகமானது. கடவுளை அறிந்தவனே தன்னை அறிந்தவனாகிறான். தன்னை அறியாதவன் ஏதும் அறியாதவனே.* நற்குணம் இருப்பதற்காக செருக்கு கொள்ள வேண்டாம். உங்களை விடவும் மிக நல்லவர்கள் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.* பிறரைக் கீழானவர்களாக கருதுபவர்கள், நிச்சயம் ஒருநாள் கீழ்மையடைந்து வருந்த நேரிடும்.* அறிவாளி என்பவன் பிறரை அவமதிக்க விரும்ப மாட்டான். பொறாமை அவனிடத்தில் இருக்காது. நிலையற்ற பொருள்களில் விருப்பம் கொள்ள மாட்டான். * கர்வம், ஊதாரித்தனம், சோம்பல், பேராசை கொண்டவர்களை முட்டாள்கள் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் அறியாமையால் தாழ்ந்த நிலையை அடைகிறார்கள். * தன்னம்பிக்கையற்ற மனிதர்கள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராகி விடக்கூடாது. * பிறரைப் பற்றி மட்டும் சிந்திக்கும் மனிதன் பாவியாகிறான். தன்னை உணர்ந்து மகிழ்பவனே வாழ்வின் இறுதியில் ஞானியாகிறான். * கடவுள் உங்களுக்குள் இருந்து, நீங்கள் செய்யும் செயல்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் எப்போதும் மனத்தூய்மையுடன் இருங்கள்.* பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தர்மம் செய்வது கூடாது. மனித நேயத்துடன் தர்மம் செய்பவருக்கே மனதில் நிம்மதி நிலைக்கும்.* சூரியனும், சந்திரனும் காலம் தவறாமல் ஒழுங்காக கடமையைச் செய்கின்றன. ஆனால் பகுத்தறிவு இருந்தும் மனிதன் கடமையாற்றத் தவறுவது ஏனோ தெரியவில்லை.* சாதுவானவர்கள் மனம் நோகும்படி நடப்பவர்கள் மறுபிறவியில் அசுரனாகப் பிறப்பார்கள். * விடாப்பிடியாகக் கடவுளைப் பற்றிக் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறுவார்கள். * பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கி விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது என்பது இயலாத ஒன்று.* பணிவு, நேர்மை, பொறுமை ஆகிய நற்குணங்களைப் பின்பற்றினால் இப்பிறவியில் மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் பேரின்பம் உண்டாகும்.சமப்படுத்துகிறார் சாந்தானந்தர்