உள்ளூர் செய்திகள்

கோவையில் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது போல, கோவை அருகிலுள்ள மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலிலும் கிரிவலம் வருகின்றனர்.தல வரலாறு: பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டார். அவர் வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்தான். தர்மர் வழிபட்ட சிவன் என்பதால் தர்மலிங்கேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.வழிபாட்டு முறை: தர்மர் நீதிநெறி தவறாதவர். எனவே நியாயமான வழக்குகளில் வெற்றி பெற வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம். 300 மீட்டர் உயரத்தில் மலை அமைந்துள்ளது. மலையின் மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உள்ளன. மலையடிவாரத்தில் விநாயகர் கோவிலும், நவக்கிரக சன்னிதியும் உள்ளது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கும் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இவரை காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.மூவகை மாம்பழம்: நவக்கிரக சன்னிதி அருகில் மும்மூர்த்தி மரம் என்ற மாமரம் இருக்கிறது. இந்த மரத்தில் மூன்று வகை சுவையுடைய பழங்கள் காய்க்கிறது. தலவிருட்சம் வில்வமரம். விநாயகர் கோவிலுக்கு பின்புறம் ஒருமண்டபமும், அதை அடுத்து புற்று ஒன்றும் உள்ளது. இதனருகே வறட்சி காலத்திலும் வற்றாமல் நீர் சுரந்து கொண்டிருக்கும் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து தான் மலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.கோவில் அமைப்பு: மலை மீதுள்ள தர்மலிங்கேஸ்வரர் எதிரில் நந்தியும், வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். இப்பகுதி மலை ஜாதி மக்கள் தர்மலிங்கேஸ்வரரை குலதெய்வமாக வழிபடுகிறார்கள். அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது.ஐப்பசி பவுர்ணமி, தைப்பூசம் ஆகிய நாட்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முறை வைத்து மூன்று நாட்களுக்கு மலை மீது தீபம் ஏற்றுகின்றனர். 4கி.மீ. தூரம் சுற்றுப்பாதை உள்ள இந்த மலையை பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.இருப்பிடம்: கோவை - பாலக்காடு சாலையில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள மதுக்கரை மரப்பாலம் அருகில்.