உள்ளூர் செய்திகள்

ராகு கேது பெயர்ச்சிக்கு புறப்படுங்க!

ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், வைத்தீஸ்வரன் கோவில் அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்களுக்கு சென்று வரலாம்.திருநாகேஸ்வரம் தலவரலாறு: சுசீல முனிவரின் மகன் சுகர்மன், வனத்தின் வழியே சென்ற போது, நாக அரசனான தட்சகன் என்ற பாம்பு தீண்டியது. தன் மகனை தீண்டிய தட்சகனை மனிதனாகப் பிறக்கும்படி முனிவர் சபித்தார். சாப விமோசனம் பெற தட்சகன், ''பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். நாகமாகிய தட்சகனுக்கு அருளியதால் சுவாமிக்கு, 'நாகநாதர்' எனப் பெயர் வந்தது.மனைவியருடன் ராகு: இங்குள்ள அம்பிகை பெயர் கிரிகுஜாம்பிகை. இவர் சரஸ்வதி, லட்சுமி ஆகிய இருவருடனும் ஒரே சன்னதியில் வீற்றிருக்கிறார். ராகு தன் மனைவியர் நாகவல்லி, நாககன்னியுடன் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். இது தவிர விநாயகரும் யோகராகுவும் ஒரே சன்னதியில் உள்ளனர். இவர்களை வணங்கினால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும்.பரிகார வழிபாடு: நாகதோஷம் உள்ளவர்கள் ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். தினமும் காலை 9:30, 11:30, மாலை 5:30 மணி மற்றும் ராகு காலங்களில் பாலாபிஷேகம் நடக்கும்.கீழப்பெரும்பள்ளம் தலவரலாறு: நாகபட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்திலுள்ள நாகநாதர் கோயில் கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வாசுகி என்னும் நாகத்தை கயிறாக பயன்படுத்த விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி தேவர்களை காப்பாற்றினார்.சிவன் விஷம் அருந்தியதைக் கண்ட வாசுகி வருத்தம் கொண்டது. இதற்கு பிராயச்சித்தம் தேட தவம் மேற்கொண்டது. மனம் இரங்கிய சிவனும் விமோசனம் கொடுத்தார். அவரே நாகநாதராக இங்கு வீற்றிருக்கிறார். கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கேது தோஷம் நீங்க எமகண்ட நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.எப்படி செல்வது?* கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் திருநாகேஸ்வரம்.நேரம் காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0435 -246 3354* மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் 22 கி.மீ., தூரத்தில் தர்மகுளம். அங்கிருந்து வலப்புறம் செல்லும் சாலையில் 1கி.மீ தூரத்தில் கீழப்பெரும்பள்ளம்நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மதியம் 3:30 - 8:30 மணிதொடர்புக்கு: 04364- 260 088