உள்ளூர் செய்திகள்

சனிதோஷம் போக்கும் தலம்

நவக்கிரகங்களில் ஒருவர் சனீஸ்வரர். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானின் நிலை நன்றாக இல்லையெனில், அந்த ஜாதகர் துன்பங்களை சந்திக்க நேரிடும். இதில் இருந்து விடுபட துாத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் வேங்கட வாணன் கோயிலுக்கு வாருங்கள். முன்பு இந்த ஊரில் வேதசாரன் என்னும் அந்தணர், மனைவி குமுதவதியுடன் வாழ்ந்தார். எந்நேரமும் பெருங்குளத்து பெருமாளை வணங்குவதை முதன்மை வேலையாக கொண்டவர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், பெருமாளிடம் வருந்தி முறையிட்டனர். அவரது அருளால் அன்னை பத்மாவதியே மகளாக அவதரித்தார். அவளுக்கு 'கமலாவதி' என பெயரிட்டு வளர்த்து வந்தனர். மணப்பருவம் வந்ததும் பெருமாளையே மணப்பேன் எனக்கூறி காட்டிற்கு சென்று தவம் செய்தாள். கடுந்தவத்தை மெச்சிய சுவாமியும், காட்சி கொடுத்து திருமணம் செய்து கொண்டார். பாலிகை (கன்னிகை) தவம் செய்த இடம் என்பதால், 'பாலிகை வனம்' என அழைக்கப்பட்டது. ஒருநாள் வேதசாரனின் மனைவி குமுதவல்லி நீராடச் சென்றாள். அப்போது அஸ்மாசரன் என்னும் அரக்கன் அவளைக் கவர்ந்து சென்று இமயலைக் குகையில் சிறை வைத்தான். இதனால், மனம் நொந்த வேதசாரன் மனைவியை மீட்டுத் தரும்படி பெருமாளை மனமுருக வேண்டினான். தன் பக்தனின் இன்னலைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டவர், கருட வாகனத்தில் இமயமலைக்கு புறப்பட்டு குமுதவல்லியை மீட்டு வந்தார். இதையறிந்த அரக்கன் இங்கு வந்து, யுத்தம் செய்தான். பெருமாள் அவனை வீழ்த்தி, அவன் மீது நின்று நர்த்தனம் புரிந்தார். இதனால் இவர் 'மாயக்கூத்தன்' என்ற திருநாமம் பெற்றார்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 86வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இத்தலம் சனி பகவானுக்குரிய தலமாகும். இத்தலத்தில் வேங்கட வாணன் பெருமாள் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ், கிழக்கே பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்ஸவர் மாயக்கூத்தர். தாயார் கமலாவதி ஆவார். குழந்தைவல்லித் தாயார் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு சனிபகவானின் அம்சத்தை தன்னுள் கொண்டுள்ளார். இங்கு பெருங்குள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் சனி தோஷம் தீரும். எப்படி செல்வது: துாத்துக்குடியில் இருந்து 30 கி.மீ., விசேஷ நாள்: ஸ்ரீராம நவமி வைகுண்ட ஏகாதசிநேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 5:00 - 7:30 மணிதொடர்புக்கு: 04630 - 256 476அருகிலுள்ள தலம்: திருக்கோளூர் வைத்தமாநிதிபெருமாள் கோயில் 12 கி.மீ., நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04639 - 273 607