உள்ளூர் செய்திகள்

கட்டை விரலை தரிசியுங்க! கலக்கமே இருக்காதுங்க!

மைசூரு விஜய் நகரில் யோக நரசிம்மர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். காரணமற்ற பயம் நீங்க அமாவாசையன்று இங்கு அபிஷேகம் செய்யலாம். இவரது பாதத்திலுள்ள கட்டை விரல் தரிசனம் மனக்கலக்கத்தை தீர்த்து தைரியத்தை தரும்.தல வரலாறு: அசுரன் இரண்யனின் மகனான பிரகலாதன் விஷ்ணு பக்தனாக இருந்தான். ஆனால், இரண்யனோ தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என்று மகனைக் கட்டாயப்படுத்தினான். பிரகலாதன் அதை ஏற்காததுடன், தன்னுடன் படித்த மாணவர்களையும் விஷ்ணு பக்தனாக மாற்றினான். கோபம் கொண்ட இரண்யன் மகனைக் கொல்ல பல முயற்சிகள் எடுத்தான். எதுவும் பலனளிக்கவில்லை. “ஹரியே ஒவ்வொரு முறையும் என்னைக் காப்பாற்றுகிறார்,” என்று மகன் சொல்லவே, இரண்யன் தன் மகனிடம், “எங்கே உன் ஹரி?” என்று ஆவேசமாகக் கத்தினான். 'அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்,' என்றான் பிரகலாதன். அந்த வாக்கை காப்பாற்ற விஷ்ணு தூணைப் பிளந்தபடி நரசிம்மராக தோன்றி இரண்யனை வதம் செய்தார். அவரே யோக நரசிம்மராக இத்தலத்தில் அருள்புரிகிறார். சிறப்பம்சம்: யோக நரசிம்மர் சாளக்ராம கல்லினால் ஆனவர். குத்துக் காலிட்டு, அதில் கைகளைத் தொங்கவிட்டு யோகநிலையில் காட்சி தரும் இவரது கைகளில் சங்கு சக்கரம் உள்ளது. கால்களில் யோகப்பட்டை குறுக்காக செல்கிறது. லட்சுமி தாயார் மார்பில் இருக்கிறாள். இவரது வலதுகால் கட்டை விரலில் அதர்வண வேதம் அடங்கி இருப்பதால் அதை தரிசிப்பவர்களை எந்த தீயசக்தியும் அணுகாது என்பது ஐதீகம். வித்தியாசமான சுதர்சனர்: சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னிதி விசேஷமானது. பொதுவாக 16 கைகளோடு காட்சி தரும் இவர் இங்கு மட்டும் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் இருக்கிறார். உற்சவர் சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இருப்பிடம்: மைசூரு பேருந்து நிலையம் மங்களூரு ரோட்டில் 4 கி.மீ., திறக்கும் நேரம்: காலை 6.00 1.30 மணி, மாலை5.30 இரவு 10மணி.