உள்ளூர் செய்திகள்

தமிழ் பூமியில் சிவதரிசனம்

துரை மீனாட்சியம்மையின் பெற்றோர் மலையத்துவஜ பாண்டியனும், காஞ்சனமாலையும் வழிபட்ட கைலாசநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் உள்ளது. தமிழ் பூமியான இங்கு சிவனை தரிசித்தால் கயிலாயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.தல வரலாறு: மலையத்துவஜ பாண்டியன் பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்தினார். இதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். யாகம் செய்யும் முன் வடநாட்டுக்கு யாத்திரை சென்று கயிலாயத்தை தரிசித்து வரும்படி அந்தணர்கள் ஆலோசனை கூறினர். அவர் மனைவி காஞ்சனமாலையுடன் யாத்திரை கிளம்பினார். செல்லும் வழியில் குறிப்பிட்ட இடத்தில், 'மனமே கயிலாயம்' என்று அசரீரி ஒலித்தது. இதைக் கேட்டு பாண்டியனின் மனம் சிவசிந்தனையில் லயித்தது. அங்கேயே கைலாயத்தை தரிசித்த பலனைப் பெற்றார். அந்த இடத்தில் எழுந்த கோவிலில் உள்ள சிவனுக்கு 'கைலாசநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டது. கல்வெட்டில் 'கைலாசம் உடையார்' என்று பெயர் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் கிராமம்: பாண்டியர்கள் காலத்தில் வேம்பத்தூரில் பல புலவர்கள் வாழ்ந்தனர். தமிழாய்வும் நடந்தது. தமிழ்த்தாத்தா உ.வே.சா., இலக்கியங்களைத் தொகுக்கும் போது, இலக்கியச்சுவடிகளைத் தேடி இவ்வூருக்கு வந்துள்ளார். 'செய்' என்றால் வயல் என பொருள். இங்கு கம்பர் செய், கூத்தன் செய், பரணர் வாய்க்கால், காளமேகத்தார், அவ்வை திடல் என்று புலவர்களின் பெயர்கள் பல இடங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. வேம்பத்தூர் குமணனார், கண்ணன் கூத்தனார் போன்ற சங்கப் புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.அம்மன் அருள்: வேம்பத்தூரில் கவிராஜ பண்டிதர் என்னும் அம்மன் பக்தர் வசித்தார். இவர் ஒருமுறை காசி கிளம்பினார். இவருடன் இக்கோவிலில் உள்ள அம்பிகையான ஆவுடைநாயகியும் அவரது மகள் வடிவில் சென்றாள். அவர் மகளுக்கு நிறைய வளையல் வாங்கிக் கொடுத்தார். அம்பிகையும் அணிந்து கொண்டாள். வீட்டிற்கு வந்ததும், உண்மையான மகள் வழக்கம்போல, வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். இருப்பினும் சந்தேகத்தில், “நான் வாங்கிக் கொடுத்த வளையல்கள் எங்கே?” என்று கேட்டார். ஆனால் அவளோ, “எப்போது வாங்கிக் கொடுத்தீர்கள்? ” என்று கேட்டாள்.அப்போது அம்பிகை தோன்றி, “இதோ வளையல்!” என்று கையசைத்து மறைந்தாள். அம்பிகையே தன் மகள் வடிவில் காசி வந்ததை அறிந்த பண்டிதர் வியப்பில் ஆழ்ந்தார். இவர் ஆதிசங்கரர் எழுதிய சவுந்தர்ய லஹரியைத் தமிழில் மொழிபெயர்த்தார். வேம்பத்தூரில் இருந்து 40கி.மீ., தூரத்திலுள்ள வீரசோழத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது. இதை 'ஐயர் சமாதி' என்கின்றனர். மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகருக்கு முன்புள்ள 'வேம்பத்தூரார் கோபுரம்' இவ்வூர் சார்பில் கட்டப்பட்டது.இருப்பிடம்: மதுரை - ராமேஸ்வரம் சாலையில் 30 கி.மீ., தூரத்தில் திருப்பாச்சேத்தி. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 8கி.மீ. தூரத்தில் வேம்பத்தூர்.நேரம்: காலை 8.00 - 9.00 மணி, மாலை 5.00 - 6.00 மணி.அலைபேசி: 97903 25083