அறுபதாம் கல்யாணம் நடத்தணுமா! சிங்கவரம் கோவிலுக்கு வாங்க!
சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் அறுபதாம் கல்யாணம் மற்றும் சதாப்தி எனப்படும் எண்பதாம் கல்யாணம் நடத்த சிறந்த தலம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கவரம் பெருமாள் கோவில். இங்கு பெருமாள் 14 அடி நீளத்தில் சயன கோலத்தில் உள்ளார். இவரைத் தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது.தல வரலாறு: இரணிய கசிபு என்ற அசுர மன்னன் தன்னையே மக்கள் வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்கக்கூடாது என்றும் நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டான். அவனுக்கு பயந்த மக்கள் இந்த உத்தரவைப் பின்பற்றினர். ஆனால் அவனது மகன் பிரகலாதன் இதற்கு கட்டுப்பட மறுத்தான். நாராயணனே உயர்ந்த தெய்வம் என்று வாதிட்டான். எனவே பெற்ற பிள்ளை என்றும் பாராமல் அவனைக் கொல்ல பல வழிகளை கையாண்டான் இரண்ய கசிபு. தன் பக்தனை துன்புறுத்திய அசுரன் மீது கோபம் கொண்ட பெருமாள் அவனைக் கொன்று பிரகலாதனை தன்னருகில் வைத்துக்கொண்டார். எப்படிப்பட்ட குலத்தில் பிறந்தாலும், பிள்ளைகள் திருந்தி வாழ நினைத்து விட்டால் தெய்வத்தின் அனுக்கிரகத்தைப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டான தலம் இது.சிறப்பம்சம்: கருவறையின் பின் சுவரில் கந்தர்வர்கள் உள்ளனர். பெருமாளின் நாபிக்கமலத்தில் உதித்த பிரம்மா, கருடாழ்வார், மதுகைடபர் ஆகியோர் இங்கு அருள்பாலிக்கின்றனர். பெருமாளின் திருவடிக்கு கீழே பூமிதேவியும், முழங்கால் அருகே பிரகலாதனும் உள்ளனர். தலைக்கு மேல் சக்கரம் இருக்கிறது.கோவில் அமைப்பு: மலையின் மேலுள்ள இந்த கோவில் கருவறையில் பெருமாள் சயன கோலத்தில் உள்ளார். இவருக்கு முன்புறம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் அருள் பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவைறக் கோயிலான இத் தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. திருமணத்தலம்: அறுபது, எழுபது, எண்பதாம் கல்யாணம் நடத்த இது சிறந்த தலம். செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனுக்கு இந்த பெருமாளே குலதெய்வம், ஒருமுறை தேசிங்கு தன்னை எதிர்த்த ஆற்காடு நவாப்புடன் போருக்கு செல்லும் முன், இங்கு வந்து பெருமாளை வணங்கினார். ஆனால் பெருமாளுக்கோ, தேசிங்கு ராஜன் போருக்கு செல்வது பிடிக்கவில்லை. எனவே தன் முகத்தை திருப்பிக் கொண்டார். (பெருமாள் முகம் திரும்பிஇருப்பதை இப்போதும் தரிசிக்கலாம்). இருந்தாலும் தேசிங்கு போருக்கு சென்று எதிரிகளை விரட்டி அடித்து விட்டு வீர மரணம் எய்தினார் என்பது வரலாறு.சைவத்தில் திருக்கடையூரில் காலனை சிவன் அழித்ததாக வரலாறு உண்டு. அதே போல, வைணவத்தில் பெருமாள் இத்தலத்தில் எமனை எச்சரிக்கை செய்வது போல தெற்கு நோக்கி தன் திருமுகத்தை வைத்துள்ளார். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தன்மார்பில் வைத்து, தன் பாதத்தை குபேரனின் திசையான வடக்கு நோக்கி நீட்டியிருக்கிறார். இவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும்.தாயார் சன்னதி: இங்கு தாயார் ரங்கநாயகி காட்சி தருகிறார், ஒரு பாறையில் புடைப்பு சிற்பமாக துர்க்கை காட்சி தருகிறார்கள். குடவறைக் கோவிலுக்கு செல்லும் வழியில் படிக்கட்டின் ஆரம்பத்தில் நாலு கால் மண்டபம் உள்ளது. சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம், மற்றும் ஐந்து அனுமனின் சிற்பங்கள் இதில் உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் லட்சுமி தீர்த்தம் என்ற சுனையும், அருகில் லட்சுமி கோவிலும் உள்ளன. இருப்பிடம் : விழுப்புரத்தில் இருந்து செஞ்சி 38 கி.மீ., இங்கிருந்து மேல்மலையனூர் செல்லும் வழியில் நான்கு கி.மீ. தூரத்தில் சிங்கவரம்.நேரம் : காலை 8.00 - 10.00, மாலை 4.00 - 6.00 மணி. அலைபேசி: 91763 25692, 94432 85923