மணக்கோலத்தில் சூரியன்
சூரியன் மூலவராக வீற்றிருக்கும் சூரியனார்கோயிலில் உஷா, பிரத்யுஷா தேவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். தல வரலாறு: காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடைய, வரம் வேண்டி கிரகங்களை வழிபட்டார். நவக்கிரக நாயகர்களும் அவர் கேட்டுக் கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார். “கிரகங்களே! சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ, புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நீங்கள் அதற்கு கீழ்ப்படியாமல், காலவ முனிவருக்கு வர வேண்டிய நோயைத் தடுத்து, வரம் தரும் அளவுக்கு போய் விட்டீர்கள். எனவே, அவருக்கு வர வேண்டிய தொழுநோய் உங்களுக்கு வரட்டும்,” என சாபமிட்டனர்.இதற்கான பாவ விமோசனம் வேண்டி, கிரகங்கள் பூமிக்கு வந்தன. வெள்ளை எருக்கு வனம் ஒன்றில் தங்கி, சிவனை நோக்கி தவமிருந்தனர். அவர்கள் முன், சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுகிரகம் செய்ய வேண்டும்,” என அருளினார். இந்த புராண நிகழ்வின் அடிப்படையில் நவக்கிரகங்களுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சூரியன் இங்கு மூலவராக இருப்பதால் 'சூரியனார் கோயில்' எனப்பட்டது.திருமணக்கோலம்: சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இடங்களில் மட்டுமே கோயில் உள்ளது. ஒடிசாவிலுள்ள கோனார்க். தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால், சூரியனார் கோயிலில் மூலவராக தன் தேவியருடன் சூரியன் அருள்பாலிப்பது சிறப்பு. கருவறையில் சூரிய பகவான் மேற்கு பார்த்தபடி இடதுபுறம் உஷா தேவியுடனும், வலதுபுறம் பிரத்யுஷா என்னும் சாயா தேவியுடனும் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். கைகளில் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார்.சூரியன் எதிரே குரு: சிவாலயங்களில் நந்தி, பெருமாள் கோயில்களில் கருடன், முருகன் கோயில்களில் மயில், விநாயகர் எதிரே மூஞ்சூறு, அம்பாள் எதிரே சிம்மம் ஆகிய வாகனங்களை பிரதிஷ்டை செய்வர். அது போல, சூரியன் எதிரே அவரது வாகனமான அஸ்வம் (குதிரை) உள்ளது. ஆனால், அதற்கு முன்னால் குருவை பிரதிஷ்டை செய்துள்ளனர். சூரியனின் உக்கிரத்தைச் சாந்தப்படுத்தும் விதமாக, அவரது எதிரில் குரு பகவானை பிரதிஷ்டை செய்துள்ளனர். மேற்கு நோக்கிய கோயில்: சூரியன் கிழக்கு திசையில் உதிப்பவர் என்பதால், முகம் மேற்கு நோக்கி இருக்கும் என்பது இயல்பான நிலையே. இதை குறிக்கும் வகையில் சூரியனார் கோயில் மேற்கு நோக்கி உள்ளது. சூரிய நாராயணர் மேற்கு நோக்கி இருக்கிறார்.நேரமிருப்பவர்கள் செய்யலாம்: கிரகதோஷம் உள்ளவர்கள் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தங்கி வழிபடலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விரதம் தொடங்கி, தொடர்ந்து 12வது ஞாயிற்று கிழமை முடியும் வரை 78 நாள் தங்கி வழிபட வேண்டும். சூரியனார் கோயில் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும், சூரியனார் கோயிலிலுள்ள நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும். தங்கள் தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் தோஷம் மறையும். இந்த விரதம் இருக்க வசதி இல்லாதவர்களும், சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய தோஷம் உள்ளவர்களும் மாதம் ஒரு ஞாயிறு வந்து சூரிய பகவானை வணங்கி செல்லலாம்.எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ.,விசேஷ நாட்கள்: ரத சப்தமி உற்ஸவம், தை பொங்கல், ஆடி கடைசி செவ்வாய், ஆவணி ஞாயிற்றுக் கிழமை, கார்த்திகை சோம வாரம். தை அஷ்டமி, மாசி சிவராத்திரிநேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0435 - 247 2349 அருகிலுள்ள தலம்: 12 கி.மீ.,ல் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்