வெற்றி நகரின் தங்கமங்கை
விஜயவாடாவில் தங்கமங்கையாக கனகதுர்கா அருள்பாலிக்கிறாள். இந்நகரம் செழிக்க அம்பிகை தங்க மழை பெய்வித்ததாக கூறுகின்றனர். தல வரலாறு: கீலா என்னும் அசுரன் துர்க்கையிடம், 'அன்னையே! நீ என் உள்ளத்தில் வாசம் செய்ய வேண்டும்'' என்று வேண்டினான். அவனிடம் தேவியும், 'நீ கிருஷ்ணா நதிக்கரையில் மலையாக உயர்ந்து நில். மகிஷாசுர வதம் முடித்ததும் உன் மீது குடியிருக்கிறேன்'' என்று அருள்புரிந்தாள். அதன்படியே அசுரனும் மலையாக மாறினான். வதம் முடித்த அம்பிகையும் மகிஷாசுரமர்த்தினி என்னும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். அம்பிகை இத்தலத்தில் தங்கமழை பொழியச் செய்து இத்தலத்தை செல்வச் செழிப்பாக்கினாள். அதனால் இவளுக்கு 'கனக துர்கா' என்னும் பெயர் ஏற்பட்டது. 'கனகா' என்றால் 'தங்கம்'. விஜயன் என்னும் அர்ஜுனன் இங்கு தவம் செய்தே சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெற்றான். இந்திரகில முனிவர் இத்தலத்தில் பார்வதி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவமிருந்தார். அவருக்கு காட்சியளித்த பார்வதி, 'முனிவர் குன்றாக மாறினால் தான் அதன் மீது கொலுவிருந்து அருள்கிறேன்,'' என்றாள். அதன்படியே இக்கோவில் உண்டானது. இப்படி மூன்று விதமான வரலாறுகள் இக்கோவிலுக்கு வழங்கப்படுகின்றன.பெயர் காரணம்: பெஜவாடா என்றும் இத்தலத்திற்குப் பெயருண்டு. 'பெஜம்' என்றால் 'குகை' குகைகள் நிறைந்த ஊர் என்னும் பொருளில் இப்பெயர் வழங்கப்படுகிறது. அம்பிகைக்குரிய 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சிவன் 'துர்கா மல்லேஸ்வரர்' எனப்படுகிறார். சன்னிதியின் நுழைவு வாசலில் சாகம்பரி, அவதூத சுவாமிக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமி சன்னிதிகளும் உள்ளன.இருப்பிடம்: விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ., மலைக்கோவிலுக்குச் செல்ல பஸ் உள்ளது. நடந்து சென்றால் 260 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.தொலைபேசி: 0866- 242 3600, 242 5744