உள்ளூர் செய்திகள்

உலகின் பெரிய நடராஜர்

உலகிலேயே பெரிய நடராஜர் நெய்வேலி திருத்தொண்டர் கோவிலில் அருள்பாலிக்கிறார். நாயன்மார்களுக்காக அமைந்த தனிக் கோவில் இது. திருத்தொண்டர் கோவில் என பெயர் இருந்தாலும் 'நடராஜர் கோவில்' என்றே பக்தர்கள் இதனை அழைக்கின்றனர். உயரமான நடராஜர்: மூலவர் நடராஜர் சிலை ஐம்பொன்னாலானது. இதன் உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2 ஆயிரத்து 420 கிலோ. அருகிலுள்ள சிவகாமி அம்மன் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது. 'மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான்' என சிதம்பரம் நடராஜரே கையெழுத்திட்ட பெருமை மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உண்டு. இதன் அடிப்படையில் இக்கோவிலில் உள்ள நடராஜருக்கு 'அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜரின் நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி 'ஓசை கொடுத்த நாயகி' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறாள். சுவாமியின் பாதத்தின் கீழ் திருமூலர், வியாக்ர பாதர், பதஞ்சலி ஆகியோர் உள்ளனர். நாயன்மார் கோவில்: 'தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என அவ்வையார் பாடியது போல தன்னை விட தன் அடியார்களை வழிபடுவதிலே சிவனுக்கு விருப்பம் அதிகம். அதன் அடிப்படையில் சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களைக் கொண்ட இந்தக் கோவிலில், ஒன்பது கலசங்கள் உள்ளன. பக்தர்கள் அவரவர் நட்சத்திரத்திற்குரிய நாயன்மாரை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர், சந்திர சேகரர், பார்வதி, மாணிக்க வாசகர், சேக்கிழார், தொகையடியார் சன்னிதிகளும் உள்ளன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், சேக்கிழார், திருமூலர் குருபூஜை இங்கு சிறப்பாக நடக்கிறது. தவக்கோலத்தில் நவக்கிரகம்: இங்குள்ள செம்பொற்சோதி நாதர் லிங்க வடிவில் இருக்கிறார். இதில் மூன்று கோடுகள் விபூதிப் பட்டை போல் இருப்பதை அபிஷேகத்தின் போது காணலாம். சுற்றுப்பகுதியில் விநாயகர், அறம் வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக் கடவுள், அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. ஏழு குதிரை பூட்டிய வட்டவடிவ தேரில் சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத் திசைகளை பார்த்த நிலையில் தவக்கோலத்தில் உள்ளன. பளிங்கு சபை: நடராஜருக்கு சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளி சபை, திருவாலங்காட்டில் ரத்தினசபை, குற்றாலத்தில் சித்திரசபை, திருநெல்வேலியில் தாமிரசபை என பஞ்ச சபைகள் இருக்கின்றன. இங்குள்ள நடராஜர் சபை, பளிங்கு கற்களால் ஆனதால் 'பளிங்கு சபை' எனப்படுகிறது. ஆராய்ச்சி மணி: கோவில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் விருப்பத்தை எழுதி இந்தப் பெட்டியில் செலுத்தி விட்டு, மூன்று முறை மணியை ஒலிக்கிறார்கள். இந்த மனுக்கள் காலை பூஜையின் போது அர்ச்சகரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்படும். விருப்பம் நிறைவேறியதும் நன்றிக் கடிதத்தை பக்தர்கள் செலுத்துகின்றனர்.விதியை வெல்லலாம்: கவலை, நோய், வறுமை என துன்பப்படும் போது 'எல்லாம் விதிப்படி நடக்கிறது' என நொந்து கொள்வர். இதிலிருந்து விடுபடும் விதத்தில் அந்தந்த பிரச்னைக்கான தீர்வு அளிக்கும் பதிகங்கள்(தேவாரப் பாடல்கள்) அவரவர் ராசிக்கேற்ப பிரகார சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இதைப் பக்தியுடன் படித்தால் சிவனருளால் விதியையும் வெல்ல முடியும். இருப்பிடம்: நெய்வேலி டவுன்ஷிப் பஸ் ஸ்டாண்ட் அருகில்.நேரம்: காலை 6.00 - மதியம் 12 .00 மணி, மாலை 4.00- இரவு 9.00 மணி.அலைபேசி: 94438 43912