உள்ளூர் செய்திகள்

அவதார புருஷரின் அவதார பூமி

ராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, அவரது அவதார பூமியான ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு சென்று வரலாம். ராமானுஜரின் திருநட்சத்திர வைபவம் இங்கு சிறப்பாக நடக்கிறது. தல வரலாறு: கைலாயத்தில் உள்ள பூதகணங்கள், சிவனிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெற இங்கிருந்த மகாவிஷ்ணுவை வேண்டின. சுவாமி, அனந்தன் என்னும் சர்ப்பத்தால் இங்கு தீர்த்தம் (அனந்தசரஸ் தீர்த்தம்) உண்டாக்கி, அதன் கரையில் காட்சி தந்து விமோசனம் கொடுத்தார். இதற்கு நன்றிக்கடனாக பூதகணங்கள் இங்கு சுவாமிக்கு கோவில் எழுப்பின. இதனால் பூதபுரி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் என மாறியது. சுவாமிக்கு ஆதிகேசவப் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.ராமானுஜர் அவதாரம்: ஸ்ரீபெரும்புதூரில் வசித்த கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு 1017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர் தான் ராமானுஜர் ஆவார். இவரது பெயரை 'ராமனின் அனுஜன் (பிரியாதவன்) என பிரிப்பார்கள். ராமனைப் பிரியாதவன் லட்சுமணன். லட்சுமணனின் அம்சமாக இவர் பிறந்ததாகச் சொல்வர். இந்த ஆண்டு ராமானுஜருக்கு ஆயிரமாவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிகேசவர் கோவில் எதிரே ராமானுஜர் பிறந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது. சித்திரை விழாவின் பத்து நாட்களும் ராமானுஜர் இங்கு எழுந்தருளுவார். இவரது திருநட்சத்திரத்தன்று ஊஞ்சலில் வைத்து இவரைத் தாலாட்டி, சங்குப்பால் தரும் வைபவம் நடக்கும். அப்போது ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை அழகர்கோவில் உள்ளிட்ட 36 திவ்ய தேசங்களில் இருந்து ராமானுஜருக்கு பரிவட்டம் கொண்டு வந்து மரியாதை செய்யப்படும்.தானுகந்த திருமேனி: இங்குள்ள ராமானுஜர் சிலையை 'தானுகந்த திருமேனி' என்பர். ராமானுஜரின் அடியார்கள், அவரது ஆலோசனைப்படி ஒரு சிலை வடித்தனர். ராமானுஜர் அச்சிலையைத் தழுவி, அதில் தன் சக்தியை புகுத்தினார். ராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இது, 'தானுகந்த திருமேனி' எனப்பட்டது. இதைச் செய்தபோது, ராமானுஜருக்கு வயது 120. அந்த வயதிற்குரிய தோற்றத்திலேயே ராமானுஜரின் விலா எலும்பு, காதுமடல் ஆகியவை தத்ரூபமாக உள்ளது.பக்தர் பெயரில் தாயார்: ராமானுஜருக்கு யதிராஜர் என்ற பெயர் உண்டு. 'யதி' என்றால் 'சந்நியாசி', 'ராஜர்' என்றால் 'தலைவர்' குறிக்கும். இத்தலத்தில் தாயார், 'யதிராஜ நாதவல்லி' என்ற பெயரில் அருளுகிறாள். தன் பக்தரான ராமானுஜர் பெயரில் தாயார் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு.வெந்நீர் அபிஷேகம்: தீபாவளி துவங்கி தை மாத அஸ்தம் நட்சத்திரம் வரையில் ராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்கின்றனர். குளிர்காலம் என்பதால் இக்கால கட்டத்தில் ராமானுஜருக்கு கோட் அணிவித்து, கம்பளி போர்த்துகின்றனர். உடல் முழுவதும் போர்த்த வெல்வெட் அங்கி, உல்லன் சால்வை, தலை முதல் பாதம் வரை போர்த்த குன்சம் என்ற ஆடை ஆகியவை இங்குள்ளன. மாசி முதல் புரட்டாசி வரையில் கோடை காலத்தில் சுவாமியை குளிர்ச்சிப்படுத்த சந்தனக்காப்பிடுகின்றனர்.சிறப்பம்சம்: மாசி பூரம், பங்குனி உத்திரம், பங்குனி அல்லது சித்திரையின் கடைசி வெள்ளியில் மட்டும் ஆதிகேசவர், யதிராஜநாதவல்லி, ஆண்டாள், ராமானுஜர் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். ராமானுஜர் அவரது திருநட்சத்திர நாளான சித்திரை மாத திருவாதிரையன்று, ஆண்டாள் சன்னிதிக்கு எழுந்தருளுவார். அங்கு ஆலவட்ட சேவை (விசிறுதல்) நடக்கும். ராமானுஜரின் வரலாற்று ஓவியம் ஆதிகேசவர் சன்னிதி பிரகாரத்தில் உள்ளது.இருப்பிடம்: திருவள்ளூரில் இருந்து 20 கி.மீ., திறக்கும் நேரம்: காலை 6.30 - மதியம் 12.௦௦ மணி, மாலை 4.00 - இரவு 8.30 மணிதொலைபேசி: 044 - 2716 2236