உயிரே போகுமளவு பிரச்னையா! காப்பாற்றுவார் அவிநாசியப்பர்
பல்வேறு பிரச்னைகளால் உயிரே போகுமளவு அபாய நிலையிலும் பாதுகாப்பு தருபவர் அவிநாசி லிங்கேஸ்வரர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்தத்தலம் தென்னக காசி என புகழப்படுகிறது.தல வரலாறு: அவிநாசியிலிருந்து காசிக்கு சென்ற சிவபக்தர்கள் சிலர் அங்கிருந்து ஒரு லிங்கம், பைரவர், தீர்த்தம் ஆகியவற்றை கொண்டு வந்தனர். லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அவிநாசியப்பர் என பெயர் சூட்டினர். 'விநாசம்' என்றால் அழியக்கூடியது என்று பொருள். இத்துடன் 'அ' சேர்த்தால் 'அவிநாசம்'... அதாவது அழியாத்தன்மை கொண்டது என பொருளாகிறது. இதுவே அவிநாசி ஆனது. இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மையும், அழியாப்புகழும் கிடைக்கும்.தேள் வழிபாடு: இங்குள்ள கருணாம்பிகை சன்னிதியின் பின்புறம் உள்ள விருச்சிகத்தை (தேள்) விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடுகிறார்கள். 64 பைரவ மூர்த்தங்களில் (வடிவம்) இத்தல பைரவர் 'ஆகாச காசிகா புரதனாத பைரவர்' எனப்படுகிறார். இவர் காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என தலபுராணம் கூறுகிறது. எதிரி பயம், வழக்கு விவகாரம் நீங்க பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில் குங்குமம் தடவி விளக்கேற்றி, செவ்வரளியில் அர்ச்சனை செய்கிறார்கள்.குருவின் குரு: சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப் பயின்று, குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்திருக்கிறார்.முதலைவாய்ப்பிள்ளை: சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தி இருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். உடனே சுந்தரர், அவிநாசியப்பரை பிரார்த்தித்தார். அவரது அருளால் முதலை வாய்க்குள் மூன்று ஆண்டுகளுக்கு முன் போனவன் ஏழு வயது பாலகனாக வெளியே வந்தான். அவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் மூன்று நாட்கள், இதை 'முதலை வாய்ப்பிள்ளை உற்ஸவம்' என்ற பெயரில் நடத்துகின்றனர். நோய் மற்றும் பிற பிரச்னைகளால் உயிரே போகும் நிலையில் உள்ளவர்களுக்காக அவிநாசியப்பரை வழிபட்டு நிவாரணம் பெறலாம்.'நல்ல' சனீஸ்வரர்: தனக்கு ஏற்பட்ட சனி தோஷம் நீங்க, வசிஷ்டர் இத்தலத்தில் சனி பகவானை பிரதிஷ்டை செய்துள்ளார். இவர் இடது காலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபய முத்திரையுடனும் அருளுகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும். இவரை நல்ல சனீஸ்வரர் என்கின்றனர்.சிறப்பம்சம்: இது ஒரு அமாவாசை தலம். அன்று காலையில் திறக்கும் கோவில் நடை இரவில் தான் அடைக்கப்படும். இந்நாளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களுக்காக அவிநாசியப்பரை வழிபட்டால், அவர்கள் செய்த பாவங்கள் தீர்ந்து முக்தி பெறுவார்கள்.இருப்பிடம்: திருப்பூர் - கோவை ரோட்டில் 13கி.மீ. நேரம்: காலை 5.00 - 1.00 மணி, மாலை 4.00 - 9.00 மணி.அலை/தொலைபேசி: 94435 01129, 04296 - 273 113