உள்ளம் உருகுதய்யா முருகா! உன்னடி காண்கையிலே!
நம்மில் பலருடைய வாழ்க்கை எப்போதும் பிரச்னைகளை சுமந்து கொண்டுதான் நகர்கின்றன. பணியிடத்திலும் சரி, வெளியிலும் சரி... சென்ற இடமெல்லாம் நமக்கென்று ஒருவர் எதிராக செயல்படுகிறாரே... இவர்களை எப்படி சமாளிப்பது? எப்படி முன்னேறுவது என யோசிக்கும் நபரா நீங்கள்? ரொம்ப யோசிக்காதீங்க. உடனே கிளம்பி செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பேர்கண்டிகை முருகன் கோயிலுக்கு போங்க. இந்தக் கோயிலை பூலோக சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்! பல மூலிகைகளை கொண்ட சஞ்சீவி மலையில் இருக்கிறான் அந்த வெற்றி வீரன். நடந்துதான் மலைக்கு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வாகனத்திலும் பயணிக்கலாம். கோயிலுக்கு செல்லும் முன்பே பெரிய வேல் நம்மை வரவேற்கும். கருவறைக்கு செல்லும் முன் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகளை பார்த்து விடலாம். இங்கே முருகன் புன்னகை தவழ ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டவராய் உள்ளார். தெற்கு நோக்கி வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்ரமணியனாக காட்சி தருகிறார். அவருக்கு துணையாக அருகே காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் உள்ளனர். வஜ்ரம், அம்பு, வாள், வில் ஏந்தி முருகன் போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். போர்க்கோலம் என்றாலும் அவரது முகத்தில் சாந்த குணமே தென்படுகிறது. என்னதான் இருந்தாலும் முருகன் ஒரு கள்ளம் கபடம் இல்லாத குழந்தைதானே! அவனது திருவடியை கண்டால் உள்ளமும் உருகிவிடும். அவனது திருவுருவத்துக்கு முன்பாகத்தான் சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவனை ஒருமுறை வலம் வந்து வணங்குங்கள். அந்த நொடியே எதிரிகள் பொடி பொடியாவார்கள். சரி. இக்கோயிலின் வரலாறை பார்ப்போம். சிவபெருமானின் திருமணத்தின்போது பூமி சமநிலை தவறியது. அதை சமன்படுத்த சிவபெருமானின் கட்டளைப்படி தென் திசை நோக்கிப் புறப்பட்டார் அகத்திய முனிவர். அதோடு தாம் விரும்பிய இடங்களில் எல்லாம் சிவபெருமானின் திருமணக் கோலத்தை தரிசிக்கும் வரத்தையும் பெற்று கிளம்பினார். இதன்படி பல தலங்களில் திருமணக் கோலத்தை தரிசித்த அகத்தியருக்கு, இந்த தலத்திற்கு வந்ததும் முருகனையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன்படி தாய், தந்தையான சிவ பார்வதியுடன் சேர்ந்து சிவசுப்பிரமணியனாக காட்சி தந்தார் முருகன். கலியுகத்திற்கு முந்திய துவாபர யுகத்தில் பிரம்மா இத்தலத்தை பூஜித்தார். எப்படி செல்வது: மேல்மருவத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 12 கி.மீ., விசேஷ நாள்: வைகாசி விசாகம் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 7:00 மணிதொடர்புக்கு: 99529 65215, 79048 05027, 82481 86761 அருகிலுள்ள தலம்: பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோயில் 1 கி.மீ., நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:30 - 7:30 மணிதொடர்புக்கு: 84893 47564